‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற கரகரப்பான குரலுக்குச் சொந்தக்காரர்; தன் இனிய தமிழ் மக்களை இறக்கும் வரை உயிராகவே எண்ணியவர்; தான் படைத்த ஒவ்வொரு கலைப்படைப்பையும் நேர்மையாக நேசித்தவர்; தன் படைப்புகளால் சாதிய ஆதிக்க வர்க்கத்தைத் துணிவோடு கன்னத்தில் அறைந்தவர்; மிகைப்படுத்தப்பட்ட, நம் பகத்தன்மையற்ற சினிமாக் கலைப்படைப்பை எதார்த்த கலைப்படைப்பாக மாற்றிக்காட்டிய மாபெரும் இயக்குநர்!
அதுவரை
சினிமாவில் ஒரு பகுதியாக இருந்த வெளிப்புறப் படப்பிடிப்புகளை 1977-இல், தான் முதல் முறையாக இயக்கிய ‘பதினாறு வயதினிலே’
திரைப்படத்தில்
முழுமையாக வெளிப்புறப் படப்பிடிப்பாக மாற்றிக்காட்டி சினிமா சரித்திரத்தையே புரட்டிப்போட்டவர். அதாவது, தமிழ் சினிமாவின் கேமராக்களை ஸ்டுடியோக்களின் செயற்கையான நான்கு சுவர்களுக்குள் இருந்து விடுவித்து, கிராமத்து நெல் வயல்களுக்கும், புழுதி பறக்கும் ஒற்றையடிப் பாதைகளுக்கும், தமிழ் மண்ணின் நிஜமான மனிதர்களிடமும் கொண்டு சென்ற ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது 84-வது அகவையில் (ஜூன் 10, 2026) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் இம்‘மண் வாசனை’யிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். ஒரு பெரும் சகாப்தம் நிறைவுற்றிருக்கிறது.
கிராமத்து வாழ்வியலின்
காவியங்கள்
செட்டுகளுக்குள்,
செயற்கை விளக்குகளுக்குள் முடங்கிக்கிடந்த திரையுலகிற்கு உண்மையான கிராமத்து வெயிலையும், மனிதர்களின் வேர்வையையும், வெள்ளந்தி வாழ்க்கையையும் அப்படியே திரையில் கடத்தியவர். மயில், சப்பாணி, பரட்டை என அவர் வடித்த
கதாபாத்திரங்கள் தமிழர்களின் கூட்டு மனச்சான்றில் அழியாச் சுவடுகளாகப் பதிந்தன. கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோரின் திரை வாழ்வில் இப்படம் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வணிகப் படங்களும் கிராமத்து மண்வாசனையோடு மாபெரும் வெற்றியைப் பெறமுடியும் என்ற புதிய இலக்கணத்தை அவர் தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.
காலத்தால் அழியாத
திரைக்காவியங்கள்
‘16 வயதினிலே’
படத்திற்குப் பிறகு அவர் தொட்ட உயரங்கள் அனைத்தும் இமயத்தின் சிகரங்கள். ‘கிழக்கே போகும் இரயில்’,
‘புதிய வார்ப்புகள்’, ‘மண்வாசனை’, ‘கிழக்குச்
சீமையிலே’, ‘சிகப்பு
ரோஜாக்கள்’, ‘ஒரு
கைதியின் டைரி’,
‘வேதம் புதிது’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட
பல திரைப்படங்கள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாகத் திகழ்கின்றன.
அவரது
திரைப்பயணத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த கூட்டணி தமிழ்த் திரையுலகின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இவர்களின் பாடல்கள் கிராமங்களின் ஆன்மாவாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
பின்னர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன்
இணைந்து ‘கிழக்குச் சீமையிலே’,
‘கருத்தம்மா’ போன்ற
மறக்க முடியாத இசைக் காவியங்களையும் வழங்கினார்.
புதிய ஆளுமைகளை
உருவாக்கிய பட்டறை
கோடம்பாக்கத்தில்
பாரதிராஜாவின் ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ என்பது
ஒரு புகழ்பெற்ற சினிமாப் பல்கலைக்கழகம். பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா போன்ற ஆகச்சிறந்த இயக்குநர்களையும், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, நெப்போலியன், சுகன்யா, ரஞ்சிதா போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
புதிய திறமைகளைத் தேடிக் கண்டறிந்து வளர்ப்பதில் இவர் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.
இந்தியத்
திரையுலகிற்குப் பாரதிராஜா ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2004-இல் அவருக்குப் ‘பத்மஸ்ரீ’
விருது வழங்கிச் சிறப்பித்தது. வெவ்வேறு பிரிவுகளில் 6 தேசிய விருதுகளையும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’
விருதுடன் 6 முறை மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். எனினும், தமிழ் நெஞ்சங்கள் அவருக்குச் சூட்டிய ‘இயக்குநர் இமயம்’ என்ற பட்டமே ஆகச்சிறந்த மகுடமாகும்.
கேமராவுக்குப்
பின்னால்
இருந்து
முன்னால்
வரை...
நடிகன்
ஆவதற்காகவே சென்னை வந்தவர், மாபெரும் இயக்குநரானார். ஆயினும், பின்னாளில் காலம் அவருடைய நடிப்புக் கனவையும் அவரது கடைசிக்காலத்தில் அவருக்குக் கொடுத்ததுதான் விந்தையிலும் விந்தை!
ஒரு
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் பாரதிராஜா தனது
திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆயுத எழுத்து’ படத்தில் மிரட்டலான அரசியல்வாதியாகவும், ‘பாண்டிய நாடு’,
‘குரங்கு பொம்மை’,
‘நம்ம வீட்டுப் பிள்ளை’,
‘ஈஸ்வரன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘மகாராஜா’ மற்றும்
2025-இல் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியான நடிப்பு, காலத்தால் அழியாதது.
‘முதல் மரியாதை’ தந்தவருக்கு இறுதி
மரியாதை!
இயக்குநர்
இமயத்தின் மறைவுச் செய்தி தமிழ் உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் அவரது இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்ச் சினிமா உலகிற்குப் பாரதிராஜா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திரையுலகில் ‘முதல் மரியாதை’ என்ற உன்னதக் காவியத்தைத் தந்த பெருங்கலைஞனுக்கு தமிழ்நாடு அரசு தனது ‘இறுதி மரியாதையை’
அரசு மரியாதையாகச் செலுத்தி மதிப்பளிக்கிறது.
பாரதிராஜா
என்ற மாபெரும் கலைஞனின் உடல் நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம்; ஆனால், கேமராவின் வழியே அவர் பதித்துச் சென்ற மண்வாசனையும், தமிழர்களின் வாழ்வியலும், தமிழ் சினிமாவின் வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். அவர் விட்டுச் சென்ற கலையின் சுவடுகள் காலமுள்ளவரை எதிரொலித்துக் கொண்டே இருக்கும்!
உலகளாவிய
தமிழ் மக்களிடம் நீங்காத இடம்பிடித்த மாபெரும் இயக்குநர் பாரதிராஜா இன்று இல்லாமல் போனார். ஆனால்,
அவர் படைத்த அத்தனை படைப்புகளின் சாயல் இல்லாமல் தமிழ் திரைப்பட உலகம் இனி வாழ
முடியாது என்பதே எழுதப்பட்ட
உண்மை!
84 வயதினிலே
அலைகள் ஓய்ந்ததே! கடலோரக்
கவிதையே, கிழக்கே
போகும் இரயிலில் சென்று வா! நீ உருவாக்கிய வேதம்
என்றும் புதிதே!