“பெரும்பான்மை இல்லாத நிலையில் தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஓர் அணியிடம் ஆதரவாக வாக்களிக்க விலைபேசுவது, அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இதைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு (த.வெ.க.) வாக்களித்தார்களா? தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ச.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது.”
திருமிகு. மு.க.ஸ்டாலின்,
தி.மு.க.
தலைவர்
“தூய சக்தி’ என்று அறிவித்துக் கொண்டவர்களுக்கு மக்களின் முழு ஆதரவு கிடைக்காததால், ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது மிக மோசமான செயலாகும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான ஒரு குதிரைப்பேர அரசியலை நடத்தி, சிறுபான்மை ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரைத்
திரைப்படப் பாணியில், ‘கவனித்து’
ஆதரவு பெற்றது ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? அ.தி.மு.க. உண்மைத் தொண்டர்களின்
உழைப்பால் வெற்றி பெற்றவர்கள் தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் சட்டப்பேரவைத் தலைவரிடம் இராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள த.வெ.க.
அமைச்சரின் அறையில் அவர்களுடைய கைகளில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவது குதிரைப்பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.”
திருமிகு. எடப்பாடி
பழனிசாமி,
அ.தி.மு.க.
பொதுச்செயலர்
“அடுத்தவர்களின் முதுகில் ஏறிப் பயணம் செய்துதான் வாழமுடியும் என்று செயல்படும் த.வெ.க.வுக்குத் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். த.வெ.க.வில் இணைந்த மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றிபெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சேர்ந்துள்ளனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டுப் பதவி சுகத்திற்காக மற்றொரு கட்சியில் சேர்வது மக்கள் தீர்ப்பிற்கும், சனநாயகத்திற்கும் எதிரானது. நேர்மையான அரசியலில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நம்பிக்கையிருந்தால் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது.”
திருமிகு. அன்புமணி,
பா.ம.க.
தலைவர்