சில உறவுகள்!
மழைத்துளி
செடிக்கு என்றும்
பாரமாய்
இருந்ததில்லை!
பனிக்கட்டியாய்
மாறாதிருக்கும்
வரை...!
அடம்பிடிக்கும் மனம்!
மரத்திலிருந்து
சரிந்த
இலையை
நினைத்து
என்றும்
மரம் வருந்தியதில்லை!
புதுத்தளிரை
நினைத்தே
அது
மகிழ்கிறது.
ஆனால்,
மனத்திலிருந்து விழுந்த
அன்பை
மட்டும்
ஏன்
விட்டுக்கொடுக்க
மனம்
விரும்பவில்லை?
விழுந்ததுதான்
வேண்டும்
என்று
அடம்பிடிக்கும்
மனத்திடம்
அது
முடியாத காரியம்
என்று
எப்படிப்
புரிய
வைப்பேனோ?
என்றும் சுமைதாங்கியாய்!
கல்லெறியப்பட்ட
என்
மனம் என்ற குளம்
தெளிகிறதே
எனச்
சில
வினாடிகள் மகிழ்ந்தேன்!
எல்லாம்
சில காலமே
என்பதுபோல்...
ஆழம்
சென்ற
கல்லின்
கனம்
என்னைச்
சுமைதாங்கி ஆக்கிவிட்டது!
ஒற்றை வழிப்பாதையின்
ஓரவஞ்சனையா?
செல்கிறவனுக்கு
இடமுண்டு
முன்
வருகிறவனுக்குக் காத்திருப்பு
யார்மீது
தவறு?
செல்கிறவன்
மீதா?
முன்
வருகிறவன்மீதா?
அல்லது
ஒற்றைப்
பாதையின்
மீதா?
எல்லாம்
நேரத்தின் விதி
பொறுமையில்
கடந்து
செல்வோம்!
பிரியாவிடை
விடைபெறுகிறேன்...
விடைபெறுகிறேன்
எனத்
தலையசைத்துப்
பிரியாவிடை
கொடுக்கிறது
ஒவ்வொரு
பின்னோக்கிச்
செல்லும்
மரமும்
முன்னோக்கிச்
செல்லும்
பயணியைப்
பார்த்து...!
உள்ள முதிர்ச்சி
அன்றிலாய்
அவளுடன் சுற்றிய
எண்ணங்கள்
அன்று!
தன்னந்தனித்
தென்னையாய்
எதையும்
சமாளிக்கும்
இறுகிய
உள்ளத்துடன் இன்று!
கவிதை
அந்த
அழகான வார்த்தைகள்
உள்ளத்தில்
பிறந்து
உணர்வினுள்
கலந்து
உயிர்
கொண்டு
உருவம்
கண்டு
உனைச்
சேர
நான்
எடுக்கும் பாடுகள்
என்றும்
சுகமே!
மதம் பிடித்த மனிதன்
வாங்க
ஓடிடலாம்
மதம்
பிடித்த மனுஷன் வரான்!
அவனிடம்
மதி இல்லாததால்
மதம்
ஆளுகிறதா?
அல்லது
மதம் நிறைந்ததால்
மதி
மறைந்ததா?
சிலருக்கு
அப்படி...
சிலருக்கு
இப்படி...
சரி. உங்களுக்கு எப்படி?
இயற்கைத் தெய்வம்
மாதங்கள்
பல
நேர்ச்சை
இருந்து
தலைமுடியை
ஈந்து
மொட்டையுடன்
காட்சியளிக்கும்
ஒவ்வோர்
இலையுதிர்கால
மரமும்
இயற்கையைத்
தெய்வமாக்கியதன்
சாட்சியே!