news-details
சிறுகதை
எதிர்பாராத விபத்து! (காவல் அன்னை - தொடர் கதை 18)

சார், உங்களை அந்த அல்சர் பேஷண்ட் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க சார்என்று கூறினாள் நர்ஸ்.

இந்தா வாரேன்  என்றபடி அந்தப் பேஷண்டிடம் போய் நின்றார் டாக்டர் சேவியர்.

என்னம்மா, என்ன பிரச்சினை?” என்றார் சேவியர்.

இந்த வயித்துவலி இன்னும் போகல சார். நானும் மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கிட்டேதான் இருக்கேன். இதுக்கு ஒரு வழிசெய்யுங்க. டாக்டர். உங்களுக்குக் கோடி புண்ணியம்என்றார் அந்தப் பேஷண்ட்.

அல்சரை நீங்க சாப்பாட்டிலே கண்ட்ரோலாய் இருந்துதான் சரிபண்ண முடியும்; உடனே போற நோயில்லை இதுஎன்றார் சேவியர்.

சொல்லுங்க  சார், எப்பவும் வாய்க்கு ருசியாச் சாப்பிட ஆசைப்பட்றாங்கஎன்றான் அருகில் நின்ற மகன்.

சாப்பிடலாம்; ஆனால், உறைப்பு இருக்கக்கூடாது. புளிப்பும் அதிகம் கூடாது. காபி, டீன்னு அடிக்கடி நீங்க குடிக்கக்கூடாதுஎன்றார் சேவியர்.

சார், இவங்க பத்து டீ குடிப்பாங்க சார். சொன்னாக்கா, உன் வேலையைப் பார்டாம்பாங்கஎன்றான் மகன்.

நீங்க இளநீர், மோர் சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை சாப்பிடலாம். மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இப்படித்தான் அல்சரைக் கண்ட்ரோல் பண்ணனும். வயிறு வெறுமனே இல்லாமல் ஏதாவது பிஸ்கட் சாப்பிட்டுக்கலாம்என்றார் டாக்டர்.

உங்க கிளினிக் வந்து பார்த்திட்டுத்தான் இங்கே வந்து சேர்ந்தோம் டாக்டர். வலி இன்னும் இருக்கே டாக்டர்என்றார் பேஷண்ட்.

ஒரு ட்ரிப் ஏத்தி, அதில் மருந்தும் போடுவோம், சரியாயிரும். சாப்பாட்டில் ரொம்ப ஜாக்கிரதையாய், நீங்க கண்ட்ரோலாய் இருந்துக்கணும். அப்பதான் இந்த வலி நிற்கும். மருந்து மாத்திரை அப்பப்ப சரி பண்ணும். நிரந்தரமாய் நோயைப் போக்காது. பார்த்துச் சாப்பிடுங்க. உங்க பையன் சொல்றதைக் கேளுங்கஎன்றார் டாக்டர் சேவியர்.

டாக்டர் உங்களைப் பெரிய டாக்டர் வரச் சொன்னார்என்று வந்து கூறினாள் நர்ஸ். டாக்டர் இஸ்மாயில் அறைக்குள் நுழைந்தார் சேவியர்.

என்ன சேவியர், எப்பவும் பேஷண்ட்டோட இருந்தால் போதுமா? நம்ப சொந்தப் பிரச்சினையையும் சற்றுப் பாக்கணும்லஎன்றார் இஸ்மாயில்.

எந்தச் சொந்தப் பிரச்சினை இஸ்மாயில்..?” என்றார் சேவியர்.

வேற ஒண்ணுமில்லே, உங்க தங்கச்சி கல்யாணம் பத்திதான்என்று சிரித்தார் இஸ்மாயில்.

பையனைத் தேடிக்கிட்டிருக்கோம்என்று சிரித்தார் சேவியர்.

எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்லே ஒரு பப்ளிஷர் இருக்கார். அவர் கோயம்புத்தூர்க்காரர். அவருக்கு ஒரு பையன், ஆசிரியர் வேலை பார்க்கிறான். பெண் தேடிக்கிட்டிருக்கிறதாச் சொன்னார். அந்தப் பையனைப் பார்க்கலாமா?” என்று சிரித்தபடி கேட்டார் இஸ்மாயில்.

தாராளமாய் பார்க்கலாம் இஸ்மாயில்... அவங்க ஆர்.சி.தானா?” என்று கேட்டார் சேவியர்.

அவங்க கிறித்தவங்க. சாந்தோம் சர்ச் போவாங்கஎன்றார் இஸ்மாயில்.

அப்பன்னா பார்த்துப் பேசலாம். இஸ்மாயில் ஒருநாள் வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அமலியை நேர்ல பார்க்கட்டும்என்றார் சேவியர்.

சரி, நீங்க கிளம்புங்க டாக்டர்என்றார் இஸ்மாயில்.

மதியம் வீட்டிற்குப் புறப்பட்டார் சேவியர். டிரைவர் கார் ஓட்ட கார் கிழக்கிலிருந்து மேற்காக வந்து வள்ளுவர் கோட்டம் முன்னே உள்ள ரவுண்டானாவில் சிக்னலுக்காக நின்றது. டிரைவர் பச்சை லைட் வந்ததும், காரை வேகமாய் எடுத்தான். அப்போது தெற்கே இருந்து வந்த லாரி ஒன்று கார் மீதுடமார்என்று மோதி காரை புரட்டிப் போட்டுவிட்டு கணநேரத்தில் பறந்துவிட்டது. சுற்றி இருந்தவர்கள் வந்து காரிலிருந்த டாக்டர் சேவியரை வெளியே இழுத்துவிட்டனர். டிரைவரோ முன்பகுதி நசுங்கியதில் சிக்கிக்கொண்டார். உடனே ஒரு கால் டாக்ஸியை நிறுத்தி ட்ராபிக் போலிஸ் இருவரையும் மெரிட் மருத்துவமனைக்குக் கவனமாக அனுப்பிவைத்தார்.

டாக்டர் சேவியருக்கு இது எப்படி நடந்தது என்று புரியவில்லை.              

(தொடரும்)