ஆம்பள புள்ள அழக் கூடாது’, ‘பொம்பள சிரிச்சா போச்சு’, ‘கோபமே படாம அமைதியா இருப்பவர்கள் முதிர்ச்சியானவர்கள்’, ‘அவன்/அவள் எதுக்குமே உணர்ச்சிவசப்படமாட்டார்...’ இவை போன்ற சொல்லாடல்கள் நம் சமூகத்தில் எதார்த்தமாகப் பயன்படுத்தப்படக்கூடியவை. சற்று நிதானமாக யோசித்தால், இவை யாவும் ‘உணர்வு’ என்ற ஒற்றைப்பொருளை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சொல்லாடல்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தச்
சொல்லாடல்களின் அடிப்படையில் சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பரபரப்பு முதலிய உணர்வுகள் அனைத்துமே ஒரு மனிதரின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல எனக் கருதலாம். அதே நேரத்தில், இந்த உணர்வுகள் ஒரு மனிதரின் அன்றாட வாழ்வின் அடிப்படை எனலாம். நாம் எல்லா நேரத்திலுமே ஏதோ ஓர் உணர்வோடுதான் இருக்கின்றோம். பின்பு, உணர்வுகள் சரியானவையா அல்லது தவறானவையா? தவறானவை என்றால், பின்பு ஏன் கடவுள் நம்மை உணர்வுகளோடு படைத்தார்? சரியானவை என்றால், நம் சமூகம் அதைத் தவறாக முன்னிறுத்துவது ஏன்?
உணர்வு என்றால்
என்ன?
உணர்வுகளை
அறிவியலின் வெவ்வேறு தளங்களும் வெவ்வேறு விதமாக வரையறுக்கின்றன. உளவியலாளர் ஜான் பால்பி, உணர்வை ‘தொடர் சமிக்ஞை’
(Communication Signal) என்கிறார்.
நரம்பியல் வல்லுநர் அன்டோனியோ டமாசியோ, ‘உடலின் தற்காப்பு பொறிமுறையே உணர்வுகள்’
(Survival Mechanism) என
நிறுவுகிறார். சமூகவியலாளர் ஆர்லி ஹோச்சில்ட், உணர்வுகளை ஒரு ‘சமூகத் தகவல் தொடர்புக் கருவியாகப்’ (Social Signalling) பார்க்கிறார். எனவே, உணர்வுகளை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில், ‘உள்ளத்தின் ஆழத்தில் எழும் உயிருள்ள இயக்க அலை; அது மனத்தையும் உறவுகளையும் தொட்டு மனிதரை முழுமையாக்கக் கூடிய ஒன்று’ என நான் புரிந்துகொள்கிறேன்.
மேற்கூறிய
வரையறைகளின் பின்புலத்திலும், அறிவியல் புரிதலின் பின்புலத்திலும் உணர்வுகளை ஒரு மனிதருடைய அடிப்படை ஆக்கப்பூர்வ ஆற்றல் எனப் புரிந்துகொள்ளலாம். ஆக்கப்பூர்வமான ஒன்றை, சமூகம் அழிவிற்கான ஒன்றாகக் காட்சிப்படுத்தினால் அதையே நாம் ஒடுக்குமுறை என்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகப் பெண் கல்வியைக் கூறலாம். முந்தைய காலத்தில் அநாவசியமாக, அழிவாகக் கருதப்பட்டது இன்று அத்தியாவசியம் என நம்மால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, நம் உணர்வுகளும் சரியானவையே; அவற்றை நாம் உணர்வதும், உள்ளபடியே வெளிப்படுத்துவதும் சரியானவையே என நாம் உணரவேண்டிய
தருணம் இது.
உணர்வுசார் ஒடுக்குமுறை
மனிதர்
பொதுவாகத் தன் உணர்வுகளை, முகபாவனை (Facial Expression), உடல்
மொழி (Body Language) மற்றும்
மொழியால் (Verbal Expression) வெளிப்படுத்துகிறார்.
மனிதரின் அடிப்படை ஆக்கக்கூறான உணர்வுகள் வெளிப்படுத்தப்படாமல் ஒடுக்கப்படும்போது, அது ஒரு மனிதரை அழிவுக்கு இட்டுச்செல்லும் ஆற்றலாக மாறுகிறது. இந்த உணர்வு ஒடுக்கம், பிறரால் திணிக்கப்படும்போது, அது சாதிய, பொருளாதார மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு இணையான ஒடுக்குமுறையாக மாறுகிறது. சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வுத்தளத்திலும் ஒடுக்கப்படும்போது அதன் விளைவுகள் தீவிரமடைகின்றன.
உணர்வுசார்
ஒடுக்குமுறையின் மற்றொரு பரிமாணம் ‘உணர்வுசார் மிரட்டல்’
(Emotional Blackmail) ஆகும்.
உளவியலாளர் சூசன் ஃபார்வர்டு இந்த உணர்வுசார் மிரட்டலை ‘FOG’ (பனிமூட்டம்) என்ற
சுருக்கச் சொல்லால் விளக்குகிறார். F - Fear (பயம்), O - Obligation (கடமை),
G - Guilt (குற்ற
உணர்வு). ‘நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உன்னைவிட்டு சென்றுவிடுவேன்’, ‘எனக்காக
இதைச் செய்வது உன் கடமை; எனவே, இதை நீ செய்துதான் ஆகவேண்டும்’, ‘உன்னால்தான்
எனக்கு இந்த நிலை; உன்னால்தான் நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்....’ இவை போன்ற வாக்கியங்களால் ஒருவர் உணர்வளவில் மிரட்டப்படுவதும் உணர்வுசார் ஒடுக்குமுறையே.
ஒடுக்குமுறையை
நியாயப்படுத்துதல்
உணர்வு
வெளிப்பாட்டை ஒடுக்குவதில் கலாச்சாரம், நிறுவனங்கள், மதம் மற்றும் சமூகம் ஆகியவை மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. கலாச்சாரம், உணர்வுகளை வெளிப்படுத்துவதை ஒரு பலவீனமாகவும், மௌனமாகச் சகித்துக்கொள்வதை ஒரு வீரமாகவும் சித்தரித்து, ஒரு தனிமனிதர் தனது உண்மையான இயலாமைகளை மறைக்கக் கட்டாயப்படுத்துகின்றது. நிறுவனங்கள் ‘உணர்வுவசப்படாத நிலை’
(Professionalism) என்பதை
ஒரு தகுதியாகக் காட்டி, ஓர் ஊழியர் தனது மேலதிகாரியால் ஒடுக்கப்படும்போது, அந்த வலியை வெளிப்படுத்தாமல் மௌனமாக ஏற்பதே கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கம் என்று போதிக்கிறது. மதங்களும் சமூகமும் இயல்பான மனித உணர்வுகளைப் பாவமாகச் சித்தரித்து, அதன் விளைவாக மனிதர்கள் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்காகத் தங்கள் உணர்வுகளைப் புதைத்து, ஒரு போலியான புனிதத் தன்மையைத் தழுவ வற்புறுத்துகிறது.
ஒடுக்குமுறையின்
விளைவுகள்
உணர்வுசார்
ஒடுக்குமுறை ஒரு மனிதரில், உடல் மற்றும் மனநலம் சார்ந்த ஆழமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதர் பொதுவாக, தனியாக விரும்பத்தகாத உணர்வுகளை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒடுக்கக் கற்றுக்கொள்கிறார். இதன் விளைவாக அவர் ஓர் உணர்வற்ற நிலைக்குத் (Emotional Numbness) தன்னையே
தள்ளுகிறார். இந்த நிலை அவரை ஓர் இயந்திரத்தைப் போல மாற்றுகிறது. மேலும், உணர்வுகளை ஒடுக்குவது தேவையற்ற பயம், பதற்றம், தொடர்ச்சியான அகப்போராட்டம், மனச்சோர்வு, அன்ஹெடோனியா, தொடர்பு துண்டிப்பு (Dissociation) மற்றும்
பதற்றக் கோளாறுகள் உள்ளிட்ட மனநோய்களுக்கு வழிவகுக்கின்றன.
இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இயற்கை நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், முதுகு வலி, கழுத்து வலி மற்றும் ஒற்றைத் தலைவலி முதலிய உடல்சார் நோய்களை வருவிக்கின்றன.
உணர்வுசார்
மிரட்டல் பெரும்பாலும் நெருங்கிய உறவினரால் ஏற்படுவதால் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு, எப்போதுமே பதற்றத்துடனேயே இருக்கும் நிலை, நீண்ட காலச் சோர்வு, இதயத் துடிப்பு அதிகரிப்பு, உறவு நிலைகளில் சவாலான மனநிலையை எதிர்கொள்தல், உறவுப் பிரச்சினைகளுக்குத் தானே காரணம் என எண்ணுதல், தன்னை
மீண்டும் மீண்டும் சரிசெய்ய முயற்சித்தல், தனது சொந்த உணர்வுகளையும் நினைவுகளையும் சந்தேகித்தல் மற்றும் அதீதப் பொறுப்புணர்வு போன்ற மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
உணர்வுசார் முதிர்ச்சி
உணர்வுசார்
ஒடுக்குமுறையின் வெவ்வேறு கூறுகளை அறிந்த நாம், ‘அதிலிருந்து விடுதலை சாத்தியமா?’ என அறிவதும் தகும்
என நம்புகின்றேன். இந்த உணர்வுசார் ஒடுக்குமுறையின் விடு தலைக் கூறாக அமைவது உணர்வு முதிர்ச்சியாகும். இந்த முதிர்ச்சியைத் திருவிவிலிய மாந்தர்களில் மிக முக்கியமான நபரான இயேசு நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார். உணர்வுசார் முதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இரண்டு முக்கியக் கூறுகள்:
1. உணர்வுகளின்
அங்கீகாரம் மற்றும் நுண்ணறிவு. 2. பாதுகாப்பான உறவு எல்லைகள்.
1. உணர்வுகளின் அங்கீகாரம் மற்றும்
நுண்ணறிவு
தம்
நண்பன் இலாசர் இறந்தபோது அழுததன் வழியாகவும், கெத்சமனி தோட்டத்தில் தம் பாடுகளைக் குறித்து இயேசு மனம் வருந்தியபோதும் “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது” (மத்
26:38) எனத் தம் துயரைத் தம் சீடர்களிடம் பகிர்ந்ததன் வாயிலாகவும், சிலுவையில் இறக்கும்போதும் “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” எனக் கதறியதன் வாயிலாகவும் இயேசு தம் உணர்வுகளைப் பற்றிய சுய உணர்வோடு அவற்றை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, ஆரோக்கியமான விதத்தில் வெளிப்படுத்தினார். மாறாக, தம் உணர்வுகளுக்கு அவர் பிறரைக் காரணம் கூறவுமில்லை; விரும்பத்தகாத விதத்தில் தம் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தவு மில்லை. எனவே, ஒருவர் ‘நான் எத்தகைய உணர்வுகளோடு இருக்கின்றேன்?’ என்ற சுய உணர்வும், அவ்வாறு அறிந்த உணர்வுகளை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு, அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதுமே, உணர்வு முதிர்ச்சியின் முதல் படியாகும்.
2. பாதுகாப்பான உறவு எல்லைகள்
இயேசு
தமது இறப்பை முன்னறிவித்தபோது, பேதுரு “ஆண்டவரே, இப்படி உமக்கு நேரவே கூடாது” என்று தடுத்தபோது, பேதுரு இயேசுவின் மீதான அன்பில் அவ்வாறு கூறியிருந்தாலும், அது இயேசு தம் இலக்கை அடைய உதவாது என்பதால், “என் கண்முன் நில்லாதே சாத்தானே!” எனக் கூறி பேதுருவின் பரிந்துரைக்கு இசையவில்லை. அதே போல, யாக்கோபு மற்றும் யோவான் தம் தாயோடு வந்து, இயேசுவின் ஆட்சியில் அதிகாரம் கேட்டது, ஒரு குடும்ப நலன் சார்ந்த ஒன்றாகவே இருந்தது. அதை நன்கறிந்த இயேசு, மற்றச் சீடர்களுக்கும் புரியும்படி தமது ஆட்சியைப் பற்றியும், பணிபுரியும் தலைமையைப் பற்றியும் எடுத்துக் கூறினாரே தவிர, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை.
ஒரு
நபருடைய வாழ்வில் மற்றவருக்கு எத்தகைய பங்கு உண்டு, அவருடைய வாழ்வைப் பற்றி முடிவெடுப்பதில் எவ்வளவு சுதந்திரம் உண்டு என முடிவெடுக்கும் உரிமை
அந்த நபருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு முடிவெடுத்து தனக்கான எல்லைகளை ஏற்படுத்துவது, உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும் கூறுகளல்ல; அவை உறவுகளைத் திடப்படுத்தும் அணைக்கட்டுகள்.
இயேசு
ஓர் உணர்வு முதிர்ச்சியின் அடையாளமாக மட்டும் திகழவில்லை; மாறாக, உணர்வுத் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் எடுத்துகாட்டாகத் திகழ்கின்றார். சீடர்கள் தடுத்த போது, சிறுவர்களைத் தம்மிடம் வரவழைத்ததன் வாயிலாக, ஒடுக்கப்பட்ட அந்தச் சிறுவர்களின் மகிழ்ச்சியை அவர்கள் உணர உறுதுணையாக இருந்தார். இவ்வாறு, இயேசு உணர்வுசார் முதிர்ச்சிக்கு அரியதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இறுதியாக...
உணர்வுகள்
என்பவை ஏதோ விரும்பத்தகாதவை அல்ல; அவை மனிதரின் மைய ஆற்றல்! அந்த உணர்வுகளைப் பற்றிய ஆழமான மற்றும் தெளிவான புரிதலின் வாயிலாகவும், அதை ஆரோக்கியமாக மேலாண்மை செய்வதன் வாயிலாகவும் ஒரு மனிதரால் தன் வாழ்வின் நோக்கை எளிதாக அடைய முடியும்; ஏன், அவர் முழுமை அடைகிறான் என்றும் கூற முடியும். இயேசு தம் வாழ்நாள் முழுவதும் குறிப்பாக, சிலுவையின் கோர நிலையிலும் வெளிப்படுத்திய உணர்வு முதிர்ச்சியை நமதாக்குவோம்! நம் உலகம், நம் வசமாகட்டும்.