திருப்பலி முன்னுரை
உயிர்த்த
இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் நல்லாயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாள் ‘இறையழைத்தல் ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது. நல்லாயன் இயேசு ஆடுகளை அறிந்தவராக, பெயர்சொல்லி அழைப்பவராக, மேய்ச்சல் நிலத்தை நோக்கி வழிநடத்துபவராக, ஆடுகளின் தேவையறிந்து உதவி செய்பவராக, துன்பத்தில் துணையிருப்பவராக, தவறிச் செல்லும்போது தோள்மேல் தூக்கிச் செல்பவராக, அனைத்து ஆடுகளுமே முக்கியமானவை என்று தேடிச்செல்பவராக, ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டுத் தம் உயிரையே கொடுப்பவராக இருக்கிறார்.
நல்லாயன்
இயேசுவின் கரம்பிடித்து நாம் நடக்கும்போது நமக்குக் கவலையில்லை, கலக்கமில்லை, தனிமை இல்லை, சோர்வு இல்லை. இமைப்பொழுதும் பிரியாது நம்மோடு வாழும் நல்ல ஆயன் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரைப் பின்தொடர்ந்து வாழ்வோம். பெற்றோர் பிள்ளையருக்கும், ஆசிரியர் மாணவருக்கும், அருள்பணியாளர் மக்களுக்கும், மக்கள் உடன்வாழும் சகோதர-சகோதரியருக்கும் வழிகாட்டும் ஆயனாக, பாதுகாக்கும் ஆயனாக வாழ முயற்சி செய்வோம்.
நமது
நல்லாயன் இயேசுவின் குரலுக்குச் செவி கொடுத்தால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு. எனவே, ஆயனின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து நமது வாழ்க்கைப் பாதையை மாற்றுவோம். நல்லாயன் இயேசு நமக்குத் தமது வாழ்க்கையால் கற்றுக்கொடுத்த அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் போன்ற மதிப்பீடுகளை நமதாக்கி, நல்ல ஆயன்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
இயேசுவின்
அன்பையும் உடனிருப்பையும் வார்த்தையையும் வாழ்க்கையையும் சுவைத்த பேதுரு எதற்கும், எவருக்கும் அஞ்சாது இயேசுவே கடவுளால் அனுப்பப்பட்ட மெசியா எனவும், ‘மனம் மாறி இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்; அப்போது தூய ஆவியால் வழிநடத்தப்படுவீர்கள்’ என்றும்
முழக்கமிடுகிறார். எனவே, திருமுழுக்குப் பெற்ற நாமும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனப் பறைசாற்றி நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
இயேசு
சிலுவையைச் சுமந்து நமக்கு மீட்பை வழங்கினார். இயேசுவின் இரத்தத்தால் வாழ்வு பெற்ற நாம் சாதி, மதம், இனம், வேண்டியவர்-வேண்டாதவர் என்பதை விடுத்து, அனைத்து உயிர்களிலும் இறைவனின் சாயலைக் காண முயற்சி எடுப்போம். மென்மையான வார்த்தைகளைப் பேசி மேன்மையான மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. ‘நல்ல ஆயன்
நானே’ என்று மொழிந்த ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் நல்ல ஆயரான உம்மைப் பின்பற்றி, ஆடுகளின் மனநிலையை அறிந்து செயல்படவும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மை
ஆளும் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் சொந்த ஆதாயத்தைத் தேடும் சுயநலவாதிகளாய் இல்லாமல், மக்கள் என்ற சொத்தைப் பேணிக் காக்கும் நல்ல ஆயராக வாழ்ந்திடவும், அனைத்து மக்களும் வாழ்வு பெற உழைக்கும் நல்ல தலைவரை நீரே எமக்குத் தேர்ந்தெடுத்துத் தரவும் வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நானே வாயில்;
என் வழியாய் நுழைவோருக்கு ஆபத்து இல்லை’ என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் நீர் எமக்கு விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்கவும், ஒருவர் மற்றவருக்கு நல்வழிகாட்டும் நல்ல ஆயராக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ‘வாழ்வைப் பெறும்பொருட்டு,
அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் உம்மைப் பின்தொடர்ந்திடவும், இறையழைத்தலில் தாகம் கொண்டவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.