ஆன்மிகம் என்பது...
ஏப்ரல்
14-ஆம் நாள் மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். அம்பேத்கர் பிறப்பால் ஓர் இந்துவாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் அவரது ஆன்மிகம் ஒரு தேடல் இறையனுபவமாகவே இருந்தது.
மனித
வாழ்வு பல பரிமாணங்களைக் கொண்டது.
உடல், கலாச்சாரம், மனம், மதம், சமுதாயம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது.
அதில் ஆன்மிகப் பரிமாணமானது அனைத்துப் பரிமாணங்களின் மையமாக அமைந்து, அவனது வாழ்வைப் பொருளுள்ளதாக்குகிறது.
ஆன்மிகம்
என்பது ஒரு மனிதன் தன் வாழ்வின் நிறைவையும் இறைமையையும் அடைந்திட, அவன் பின்பற்றும் சமயத்தில் தான் தேர்ந்தெடுக்கும் நோக்கமும் (VISION), அதை
அடைந்திட அவர் கையாளும் வாழ்க்கைமுறைகளும் (WAY OF LIFE) ஆகும்.
இதனால் ஆன்மிகமானது அவரது வாழ்விற்கு நிறைவான அர்த்தத்தை அளித்து, அவரது வாழ்வைப் பொருளுள்ளதாக்கி, இறைமைக்கும் இறவாமைக்கும் இட்டுச்செல்லும் ஒரு முக்கியப் பரிமாணம் ஆகும்.
ஆன்மிகம்
என்பது ஒரு மனிதனுக்குத் தேடல் அனுபவமாகவே அமையவேண்டும். இத்தேடல் மனித வாழ்வின் தனித்துவத்திற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைகிறது. மனித வாழ்வின் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.
அம்பேத்கரின்
இலக்கு
(VISION)
அம்பேத்கரின்
இலக்கு சுதந்திரம் (LIBERITY), சமத்துவம்
(EQUALITY), சகோதரத்துவம்
(FRATERNITY) ஆகும்.
சுதந்திரம் என்பது, ஒரு மனிதன் தன்னையும் பிறரையும் வாழவைக்கும் செயல்களை எவ்விதத் தடையுமின்றிச் செய்திட உரிமையைச் சுட்டிக்காட்டுகிறது. சமத்துவம் என்பது, மனிதப் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாது, சமத்துவ உறவுடன் வாழ்ந்திடும் சமூக அமைப்பாகும். சகோதரத்துவம் என்பது, பாதிக்கப்பட்ட மனிதர்மீது சக மனிதன் கொண்டுள்ள
அர்ப்பணமுள்ள செயல்பாடுகளைக் கொண்ட சமூகத்தைக் குறிக்கிறது. மொத்தத்தில், ஒரு சமூகத்தில் மனிதராகப் பிறந்த அனைவரும் மாண்புடைய
மனிதர்களாகத் திகழ்ந்து, இறைமையை உணர்வதே அவரது இலக்காகும். அம்பேத்கரின் வாழ்க்கை முறையினை அவரது கொள்கை வாக்கியமான ‘கற்பி, போராடு, ஒன்றுசேர்’
என்பது எடுத்துரைக்கிறது.
கற்பி (EDUCATE)
‘கற்பி’ என்று சொல்லும்போது, நாம் நன்றாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் கற்பிக்க உழைத்திடவேண்டும். அம்பேத்கரைப் பொறுத்தமட்டில், நன்கு படித்துப் பட்டங்கள் பெற்று, ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என்று குறுகிய வட்டத்தில் வாழ்ந்து, எவ்விதச் சமுதாய அக்கறையுமின்றி இருப்போரை ‘மூளை பெருத்தவர்’ (LEARNED) என்பார். உண்மையான
அறிவுஜீவி (INTELLECTUALS), இச்சமுதாயம்
சீரடையத் தன்னை அர்ப்பணிக்கும் உயர்ந்தோர் ஆவார். ஆக, தான் கற்றக் கல்வியால் பாதிக்கப்பட்ட சமுதாயம் மாண்புடைய மனிதர்களாக வாழ்ந்திட தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்க்கை முறையாகும்.
போராடு (AGITATE)
பாதிக்கப்பட்டவர்களுக்குச்
சலுகைகளை நாய்களுக்குப் போடும் எண்ணமும் அதை விரும்பி ஏற்கும் மனப்போக்கும் தன்மானத்திற்கு எதிரானது என்பார். “சிறுத்தைகளையா கோவில்களில் பலியிடுகின்றனர்? ஆடுகளைத்தானே! எனவே, சிறுத்தைகளாகக் கிளர்ந்து எழவேண்டும்” என்பார்.
சாய்கின்ற பக்கம் சாய்ந்திடும் செம்மறி ஆடுகளைப் போல் மானங்கெட்டு வாழ்வதைவிட, தன்மானத்திற்காய் ஒரு நிமிடம் போராடி அமரர் ஆவதே மேல் என்பார். இதில் மேலோங்குவது வரையறையற்ற உணர்ச்சிகள் அல்ல; மனித மாண்புடைய உணர்வுகளின் மேலாண்மை என்பார்.
ஒன்றுசேர் (ORGANIZE)
தலித்
மக்கள் துண்டாடப்பட்டு, பல பிரிவுகளாக இருப்பதைக்
கண்டார் அம்பேத்கர். தன் மக்கள் ஓரணியில் திரண்டு ஒன்றுபட விரும்பினார். மற்ற சாதியினர் ஒன்றுதிரள்வது அநீதி நிறைந்த சாதியத்தை வலுப்படுத்தவே. அது சமூகப் பாவம் ஆகும். ஆனால், தலித் மக்கள் சாதியத்தை ஒழித்து மனித மாண்பிற்காகப் போராடுவது, தெய்வீகமாகும் என்பதை உணர்ந்திருந்தார். ‘ஒன்றுசேர்’
என்பது மனித மாண்பிற்காகப் போராட ஒன்று சேரும் குழுமத்தைக் குறிக்கிறது.
தொடர் தேடலே
ஆழமான,
அர்த்தமுள்ள
ஆன்மிகம்
ஆன்மிகத்
தேடல் என்பது மதம் போதிக்கும் அனைத்துக் கருத்துகளையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் அல்ல; அது தொடர் தேடலாக அமையவேண்டும் என்பார். இயேசு யூத மதத்தில் பிறந்தவராக இருந்தாலும், அப்படியே யூத மதக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் அல்லர்; தமக்குப் பொருள்ளதாகக் கண்டதைத் தெளிந்து
தேர்ந்து தம் வயப்படுத்தி, நமக்கு
இறையாட்சியின் மதிப்பீடுகளாகத் தந்துள்ளார். அம்பேத்கரின் ஆன்மிகத் தேடல், சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட அனுபவத்திலும் மனித மாண்பிலும் தொடங்குகிறது.
எனவே, 1935-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி “நான்
பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஓர் இந்துவாக இறக்கப் போவதில்லை”
என்று கூறினார். கிறித்தவச் சமயத்தைத் தான் விரும்புவதாகப் பல முறை குறிப்பிட்டுள்ளார்.
தனக்குப் பிடித்த ஆளுமைகளாகப் புத்தரையும் இயேசுவையும் கூறியுள்ளார் (ஜோலாப் பூர் மாநாடு). கிறித்தவர்கள் இயேசுவின் போதனைகள்படி வாழ்வதில்லை என்றார். ஆனால், இயேசுவின் இறைமைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மனித மாண்பே
இறைமைக்கு
அடித்தளம்
1956-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 14-ஆம் நாள் நாக்பூரில், பௌத்த மதமே தனக்கும், தன் மக்களுக்கும் சரியான ஆன்மிகப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்து, 22 உறுதிமொழிகளுடன் போதிசத்துவர் ஆனார். பௌத்த மதத்தை அப்படியே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக, புத்தரைக் கடவுளாகப் பார்க்கும் மாகாயானம் மற்றும் ஹீனயானம் அல்லாமல், தனது தேடல் அனுபவத்தின் மூலம் நவயான பௌத்தம் (NEO – BUDDHISM) என்ற புதிய பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். ‘நவ’ என்றால் ‘புதிய’ என்றும், ‘யானம்’ என்றால் ‘ஆன்மிகத்தைப் பின்பற்றும் முறை’ என்றும் பொருளாகும். தானும், தன் மக்களும் மனித மாண்பை அடைவதன் வழியாக, இறைமையையும் இறவாமையையும் அவர்கள் அனுபவிக்க முடியும் என்றார்.
சிந்திக்க...
செயல்பட...
நாம்
பிறப்பால் ஒரு சமயத்தைப் பின்பற்றினாலும், ஆன்மிகத் தேடலின் மூலம் நமது
இலக்கையும் வாழ்க்கை முறையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன்
அடிப்படை உண்மையைத் தேடி, நமக்குப் பொருளுள்ளதாக மாற்றி, அவற்றைத் தம்வயப்படுத்திப் பின்பற்றும் போது, உண்மையான தெய்வீகத்தையும் இறைமையையும் நாம் அடைய முடியும். இதுவே ஒரு மானிட அறிவுஜீவியின் ஆளுமையையும் தனித்துவத்தையும் சிறப்படையச் செய்கிறது.