news-details
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 26, 2026 பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (நல்லாயன் / இறையழைத்தல் ஞாயிறு) திப 2:14,36-41; 1பேது 2:20-25; யோவா 10:1-10 (அன்பே அதிகாரம்! தியாகமே தலைமை!)

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-இல், கொரியப் போரில் வீர மரணமடைந்த அருள்பணியாளர் எமில் கப்பானுக்கு (Emil Kapaun) அமெரிக்காவின் மிக உயரிய இராணுவ விருது வழங்கப்பட்டது. பொதுவாக எதிரிகளை வீழ்த்தும் வீரர்களுக்கே தரப்படும் இவ்விருது, போர்க்களத்தில் ஒருமுறை கூடத் துப்பாக்கியை ஏந்தாத ஓர் அருள்பணியாளருக்கு வழங்கப்பட்டது உலகையே வியக்க வைத்தது. “துப்பாக்கியால் ஒரு முறைகூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் பெருமைப்படுத்துகிறோம். அருள்பணியாளர் எமில் கப்பான் பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு! தன் நண்பர்களுக்காக உயிரைத் தந்த மேலான அன்பு!” என அதிபர் ஒபாமா இவரைப் போற்றினார்.

அதே போர்க்களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன் ஒப்புரவு அருளடையாளம் பெற விரும்பினார். அங்கு மருத்துவம் பார்த்தவர் அருள்பணியாளருக்கு எங்கே போவது எனத் திகைத்தபோது, அருகே படுகாயமடைந்து கிடந்த மற்றொரு வீரர், “நான் ஓர் அருள்பணியாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்தினார். “அசைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என மருத்துவர் எச்சரித்தபோதும், “என் வாழ்வைவிட என் நண்பனின் ஆன்மா முக்கியம் எனக் கூறி தரையோடு தரையாக ஊர்ந்து சென்று அந்த வீரருக்கு அருளடையாளம் வழங்கிவிட்டு, அவரோடே இறைவனில் இணைந்தார். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்ற வரிகளுக்கு இணங்க, ஆயுதம் ஏந்தாத இந்த மேய்ப்பர்கள் அன்பால் வரலாற்றில் இடம்பிடித்தனர்.

இன்று நாம் உயிர்ப்புக்காலத்தின் நான்காம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இதுநல்லாயன் ஞாயிறு என்றும், ‘உலக இறையழைத்தல் நாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணிக்க முன்வருபவர்களுக்காகவும், பணியில் இருப்பவர்களின் உறுதிப்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செபிக்கும் நாளாக இது அமைகிறது.

நல்லாயன் என்ற சொல்லைக் கேட்டதுமே, ஓர் ஆட்டுக்குட்டியைத் தம் தோள்மீது சுமந்தபடி கனிவோடு நிற்கும் இயேசுவின் உருவமே நம் கண்களில் நிழலாடுகிறது. வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, கிறித்தவப் பாரம்பரியத்தில் இயேசுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட முதல் உருவம் இதுவேயாகும். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில், உரோமைப் பேரரசின் அடக்குமுறைக்கு அஞ்சி நிலத்தடிக் கல்லறைகளில் (Catacombs) தஞ்சம் புகுந்த தொடக்க காலக் கிறித்தவர்களுக்கு, அங்கிருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த இந்த நல்லாயன் உருவமே அளவற்ற ஆறுதலையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் வழங்கியது.

திருவிவிலியப் பார்வையில் ஆடுகளும் ஆயர்களும் பிரிக்க முடியாதவர்களாகவே விளங்குகின்றனர். திருவிவிலியத்தின் முதல் ஆயனாக ஆபேல் (தொநூ 4:2) தொடங்கி, இஸ்ரயேல் மக்களின் மாபெரும் தலைவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே மற்றும் தாவீது ஆகியோர் ஆடுகளைப் பேணிக்காத்த ஆயர்களாகவே தங்கள் வாழ்வைத் தொடங்கினர். குறிப்பாக, மந்தை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் மக்களின் ஆயராக (தலைவராக) உயர்த்தினார் (2சாமு 7:8). திருவிவிலியச் சூழலில்தலைவர் என்பவருக்குஆயர் என்பதே மிகச்சரியான அடையாளமாக இருந்தது (1அர 22:17).

காலப்போக்கில் இஸ்ரயேல் சமுதாயத்தில் ஆயர்கள் தங்கள் மதிப்பை இழந்தனர். தலைவர்கள் ஆடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களையே மேய்த்துக்கொண்டகறுப்பு ஆயர்களாக மாறினர் (எசே 34:3-4). மந்தையை முறையாக மேய்க்காமல் சிதறடித்த அந்தத் தலைவர்களைக் கண்டித்த இறைவன், “நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன் (எசே 34:11) என்று வாக்களித்தார். மேலும், “என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன் (எரே 3:15) என்ற இறைவாக்கின் நிறைவாகவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அந்த ஒப்புயர்வற்ற, தலை சிறந்த ஆயர் இயேசுவே என்பதையும், ஒரு நல்லாயனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளையும் இன்றைய நற்செய்தியில் யோவான் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

முதலாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையை நன்கு அறிபவர். “நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; அவையும் என்னை அறிந்திருக்கின்றன (யோவா 10:14). திருவிவிலியச் சூழலில்அறிதல் என்பது வெறும் தகவல் சார்ந்த அறிவு அல்ல; அது ஓர் ஆழமான இதயம் சார்ந்த பிணைப்பு. ஒரு நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளின் பசி, தாகம், வலி மற்றும் பயத்தைத் தன் சொந்த வலியாக உணர்கிறார். “ஆண்டவரே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் (திபா 139:1) என்ற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நம்மைப் படைத்தவர் நம் பலவீனங்களை அறிந்தே நம்மை வழிநடத்துகிறார். ஒரு தலைவர் தன் மக்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே உணர்ந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே சான்று.

இரண்டாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையோடு ஆழமான நல்லுறவு கொண்டிருப்பவர். “ஆயர் ஆடுகளுக்கு முன்பாகச் செல்வார்; ஆடுகளும் அவரைப் பின்தொடரும்; ஏனெனில், அவரது குரல் அவற்றிற்குத் தெரியும் (யோவா 10:4). இங்கே ஆயருக்கும் மந்தைக்குமான உறவு அதிகாரத்தால் உருவானது அல்ல; அது அன்பால்-நம்பிக்கையால் பிணைக்கப்பட்டது. அவர் ஆடுகளைப் பின்னால் இருந்து விரட்டுவதில்லை; மாறாக, முன்னே சென்று வழிகாட்டுகிறார். ஒரு சிறந்த தலைவர் முன்மாதிரியான வாழ்வால் மக்களை ஈர்க்கவேண்டுமே தவிர, கட்டளைகளால் அல்ல. அந்த உறவுதான் ஆடுகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.

மூன்றாவதாக, ஒரு நல்ல ஆயர் தன் மந்தையைக் காப்பாற்றுபவர். “நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பார் (யோவா 10:11). ஆடுகளை ஓநாய்களிடமிருந்து காக்க ஆயர் தன் உயிரையும் பணயம் வைக்கிறார். கூலிக்கு வேலை செய்பவன் ஓநாயைக் கண்டதும் ஆடுகளைக் கைவிட்டு ஓடிவிடுவான். ஆனால், நல்லாயன் தன் ஆடுகளின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரையே அரணாக மாற்றுகிறார். எந்த ஒரு சூழலிலும் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப் போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக் குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டான சூழல்களிலும் தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம்.

இன்றைய உலகத் தலைவர்களைச் சற்று உற்றுநோக்குவோம். மேலாண்மைத் திறமையும் இராணுவப் பலமும் கொண்ட பல தலைவர்கள் மந்தையைப் பேணுவதற்குப் பதிலாக மந்தையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் முதல் ஈரான் வரை நடக்கும் போர்களில் அதிகார வெறிகொண்ட தலைவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களே அகதிகளாக அலைவதையும், குழந்தையர் பசியால் மடிவதையும் கண்டும் காணாமல் இருக்கும் கூலிக்கு வேலை செய்யும் தலைவர்களே இன்று மலிந்து கிடக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி-மத மோதல்கள் என மந்தை சிதறிக் கிடக்கும்போதுதங்களையே மேய்த்துக்கொள்ளும் (எசே 34:2) சுய நலத் தலைவர்களே அதிகாரப் பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் கிறிஸ்துவின்நல்லாயன் உருவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும் அழைப்பாகவும் இருக்கிறது.

அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல; அரவணைப்பதற்கே! உலகியல் பார்வையில் அதிகாரம் என்பது ஏணியின் உச்சியில் ஏறி நின்று மற்றவர்களைக் கீழே பார்ப்பது. ஆனால், கிறிஸ்து காட்டும் தலைமைத்துவ ஏணி தலைகீழானது. அங்கே அதிகாரம் என்பது மற்றவர்களை அரவணைத்துத் தூக்கி விடத் தகுந்தவாறு குனிந்து தாழ்ந்திறங்குவதாகும். அதிகாரம் செலுத்துவதைவிட, மற்றவர்களின் காயங்களுக்கு மருந்தாகும் கனிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.

இன்றைய மின்னணு மற்றும் சமூக ஊடக உலகில்போலி மேய்ப்பர்களின் இரைச்சல் அதிகமாக உள்ளது. நுகர்வு கலாச்சாரம், வெறுப்பு அரசியல், சுயநலம் போன்ற கவர்ச்சிகரமான குரல்கள் நம்மைத் திசைதிருப்புகின்றன. இவற்றிற்கு மத்தியில், மென்மையான கனிவும் நீதியும் கொண்ட கிறிஸ்துவின் குரலை நாம் கண்டறியும் ஞானத்தைப் பெறவேண்டும். அமைதியான செபத்தில்தான் அந்த மெல்லிய குரலை நாம் தெளிவாகக் கேட்க முடியும்.

இந்த இறையழைத்தல் நாளில் நாம் இறைப்பணிக்காகச் செபிப்பது என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது திரு அவையின் உயிர்நாடி. நம் இல்லங்களில் வளரும் இளைஞர்கள் உலகியல் இலாபங்களைத் துறந்து, அருள்பணியின் உன்னதத்தை உணர்ந்து இறைவனின் அழைப்பைத் துணிவுடன் ஏற்க நாம் தூண்டுதலாக இருக்கவேண்டும்.

நல்லாயன் ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி எளிமையானது. அன்பே அதிகாரம், தியாகமே தலைமை. அதிகாரத்தை விட அன்பும் பதவியை விடப் பணிவுமே ஒருவரை உண்மையான மேய்ப்பராக மாற்றுகிறது. நாமும் அந்த உன்னதப் பாதையில் பயணிக்கத் தொடங்குவோம்.