தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும். பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த
வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 4-இல் முதல் தாளுக்கான தேர்வும், ஜூலை 5-இல் இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 18 முதல் இணைய வழியில் (https://www.trb.tn.gov.in) தொடங்கி
நடைபெற்று வருகிறது.
இதற்கு
விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாளாகும். இந்த நிலையில் டெட் தேர்வில் ஆசிரியர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான செயல்பாடுகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்துப் பாடங்களுக்குமான வினா வங்கிகள் மற்றும் பயிற்சிக் கையேடுகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரடிப் பயிற்சிகள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்
துறை,
தமிழ்நாடு
அரசு