news-details
சிறப்புக்கட்டுரை
டிஜிட்டல் குப்பை (வலையும் வாழ்வும் – 44)

காலை நேரம். சோகம் கலந்த அழகுடன் காட்சியளிக்கிறது கடல். அங்கு அலைகள் வந்து போகும் இடத்தில் கவிதா நிற்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. ஒரு கையில் சிறிய குழந்தைப் பொம்மையை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள். மறு கை அவளது வயிற்றின்மீது பயத்துடன் பதிந்திருக்கிறது. பல முறை கரு கலைந்த வலியின் காரணமாக, இந்த முறை அவள் நம்பிக்கையைக்கூட முழுதாக நம்பப் பயப்படுகிறாள்.

அவள் பார்வை வறண்டு, அசுத்தமாகக் காணப்படும் கடலின்மீது நிலைத்திருக்கிறது. அந்தக் கடலின் மலட்டுத்தன்மை, தன் உடலின் நிலையை நினைவுபடுத்துவதுபோல ஓர் அச்சம் அவளுக்குள் படர்கிறது.

இந்தக் கடல் போல என் கர்ப்பமும் விசமாகி விடுமோ?’ என்ற பயம் அவள் முகத்தில் தெரிகிறது.

அவ வயிறு ஒழுகுற பானை, எதையும் வச்சுக்காது, ‘இந்தப் பிஞ்சையாவது கொல்லாமப் பாத்துக்கோஎன்ற ஊராரின் குரல்கள் அவள் காதில் ஒலிக்கின்றன.

உங்க வேலைய நீங்க ஒழுங்கா பாருங்க; யாரு வீட்டுல எப்ப சாவு விழாதானே பார்த்துட்டு இருக்குது சனியங்கஎன்று கோபத்தில் கொப்பளித்தாள் கவிதா.

நடுக்கடல், நண்பகல். சூரியன் சுட்டெரிக்க, தன் பழைய மரப்படகில் கண்ணன் தனிமையில் போராடுகிறான். இது வெறும் மீன்பிடி அல்ல; தன் மனைவி மற்றும் பிறக்காத குழந்தைக்கான ஒரு போராட்டம். அவன் தன் முழு பலத்தையும் திரட்டி வலையை இழுக்கிறான். நம்பிக்கையுடன் மேலே வரும் வலையில் பளபளக்கும் மீன்களுக்குப் பதிலாக, அருவருப்பான குப்பைகள் நிறைந்திருக்கின்றன. செத்த ஜெல்லி மீன்கள் போன்ற பிளாஸ்டிக் பைகள், உடைந்த செருப்பு, நாற்றமெடுக்கும் கழிவுகள் மற்றும் சில நோய்வாய்ப்பட்ட புண்களுடன் துடிக்கும் மீன்கள்.

கண்ணனின் முகம் கோபத்திலும் கையறு நிலையிலும் விகாரமாகிறது. அந்த நோய்வாய்ப்பட்ட அல்லது செத்த மீன்களைப் பார்க்கையில் அவன் துடிதுடித்துப்போகிறான். இன்றைக்கும் வெறுங் கையராய் வீடு திரும்புவதை நினைத்து புலம்புகிறான். விரக்தியில் அந்தக் குப்பைகளை மீண்டும் கடலிலேயே உதறிவிடுகிறான். கரைக்கு வரும் போது வழியிலே கிடந்த காலி பிளாஸ்டிக் பாட்டிலை விரக்தியில் தன் காலால் எட்டி உதைக்கிறான். எங்கோ தூரத்தில் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த கருப்பன் அந்தப் பிளாஸ்டிக் பாட்டிலையும் சேகரித்துக்கொண்டு கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இரவு அவர்களின் சிறிய குடிசை. ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து, இருட்டும் நிழலும் நிறைந்த ஓர் இறுக்கமான சூழலை உருவாக்குகிறது. தரையில் அமர்ந்திருக்கும் கவிதாவுக்கும் கண்ணனுக்கும் இடையில் ஒரு தட்டில் பழங்கஞ்சி மற்றும் சுட்ட சிறிய மீன்கள் இருக்கின்றன. கண்ணன் அதை கவிதாவிடம் நகர்த்தி, ‘குழந்தைக்காகவாவது சாப்பிடுஎன்கிறான். சோகத்திலும் சோர்விலும் உடல்நலக்குறைப்பாட்டிலும் இருந்த கவிதா இருமிக்கொண்டே தட்டிலிருந்த சாதத்தை எடுத்து அவனுக்குப் பரிமாறி தானும் சாப்பிடுகிறாள். இருவரும் கஞ்சியைக் குடிக்கும்போது இடையிடையே அங்கிருந்த மீன்களையும் கடித்துக்கொள்கிறார்கள். அன்றைக்கு நடந்த கதைகளைப் பேசுகின்றார்கள். அவர்களிடையே அந்நியோன்யமும் அன்பும் உடல்நலக்குறைவிலும் வெளிப்படுகிறது.

இரவு நேரம். அவர்கள் தூங்கியிருந்த வேளையில் ஒரு மூர்க்கமான புயல் கிராமத்தைத் தாக்குகிறது. காற்று ஊளையிட, பேய்த்தனமான மழை பெய்கிறது. குடிசைக்குள் கவிதா பாயில் துடிக்கிறாள். அவள் பயந்து கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. ஒரு கூர்மையான, கொடுமையான வலி அவள் வயிற்றைத் தாக்க, அவள் உடல் நெளிகிறது. ஒரு மின்னல் வெட்டு அவளது பயம் நிறைந்த முகத்தை ஒளிரச் செய்கிறது. அதேநேரத்தில், கடற்கரையில் இராட்சத அலைகள் கரையை மோதுகின்றன. அவை நுரையை அல்ல, செத்த மீன்களையும், கரிய எண்ணெய் போன்ற கசடுகளையும் கக்குகின்றன.

குடிசைக்குள் கவிதாவின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. காதைப் பிளக்கும் இடிச் சத்தத்துடன் எல்லாம் முடிந்து போகிறது. கடல் தன் கழிவுகளை இரத்தமாகச் சிந்த, கவிதா தன் உயிரை இரத்தமாகச் சிந்துகிறாள். கடலின் கரு கலைவதும், ஒரு பெண்ணின் கரு கலைவதும் ஒரே கணத்தில் நிகழ்கின்றன.

புயல் ஓய்ந்த காலை. வானம் உணர்ச்சியற்ற சாம்பல் நிறத்தில் இருக்கிறது. கடற்கரை முழுவதும் குப்பைக் குவியல்கள் காட்சியளிக்கின்றன. பிளாஸ்டிக் வலைகள், தொழிற்சாலைக் கழிவுகள் என எங்குப் பார்த்தாலும் அசுத்தம்.

தட்டியெழுப்பும் அம்மாவின் கைபோலச் சூரிய ஒளி கவிதாவை எழுப்ப, அவள் தன் படுக்கையிலிருந்து எழுகிறாள். கடற்கரை நோக்கி நடந்த கவிதா, அந்தக் குப்பைகளுக்கு நடுவே வந்து நிற்கிறாள்.

அப்போது அவள் கண்கள் எதையோ காண்கின்றன. குப்பைகளுக்குள் புதைந்திருந்த தன் குழந்தைப் பொம்மையை வெளியே எடுக்கிறாள். அது கறை படிந்து, ஒரு கை கிழிக்கப்பட்டுச் சிதைந்து கிடக்கிறது. அது அவள் இழந்த குழந்தையின் சின்னமாகத் தோன்ற, அவள் உடைந்து போகிறாள். அவளது அழுகை, சத்தமற்ற, ஆழமான ஓலமாக அந்தக் கடற்கரையில் காற்றோடு காற்றாய் கரைகிறது.

டிஜிட்டல் உலகம் மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும், அது அந்த வளர்ச்சிக்காகக் கொடுக்கக்கூடிய விலையென்பது மிகவே அதிகம். 2025-ஆம் ஆண்டில் இந்தியா 2.2 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மின்னணுக் கழிவு உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

சாதாரணமான கழிவுகளையே அப்புறப்படுத்துவதற்கும், அதனை மறுசுழற்சி செய்வதற்கும் நாம் திணறிக்கொண்டிருக்கும்போது, இந்த மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணுக் கழிவுகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வெறும் 65 நகரங்களில் இருந்து மட்டுமே உருவாகின்றன. 2017-18-ஆம் ஆண்டில் 0.71 மில்லியன் டன்னாக இருந்த இந்தக் கழிவுகள், தற்போது 150 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன என்றுதி இந்துபத்திரிகைச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மின்னணுப் பொருள்களின் பயன்பாடு இனி வரும் காலத்தில் இன்னும் அதிகமாகும் என்கின்ற நிலை வரும்போது, அதிகரிக்க இருக்கும் மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்ய சரியான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். இந்தியாவில் 322 பதிவு செய்யப்பட்ட முறையான மறுசுழற்சி மையங்கள் இருந்தபோதிலும், அவற்றால் மட்டும் பெருகிவரும் இந்தக் கழிவுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, முறையான மறுசுழற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அதில் பணிசெய்கின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும்.

டிஜிட்டல் மயமாகும் இன்றைய உலகில் நாம் பெறும் வசதிகளுக்குப் பின்னால், ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பேரழிவு மறைந்திருக்கிறது. மின்னணுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாவிட்டால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய நகர்ப்புற நெருக்கடியாக மாறக்கூடும். அது மட்டுமல்லாமல், இக்கழிவுகளைச் சேகரிக்கும் சாமானிய மனிதர்கள், அவற்றைப் பிரித்தெடுக்கும் இரும்புப் பட்டறைத் தொழிலாளர்கள் போன்றோர் மிகவும் மோசமான உடல்நலக்கேட்டிற்குத் தள்ளப்படுகின்றனர்.

நிலையான நீடித்த வளர்ச்சி (Sustainable Growth) என்பது, வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல; அது சுற்றுச்சூழல் மற்றும் விளிம்பு நிலை மக்களின் சுகாதார வாழ்வைப் பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும்.