இயற்கையின் அமைப்பில் அதன் கொடைகளை ‘எல்லாருக்கும் எல்லாமுமே’ என்று மனிதகுலத்திற்குக் கடவுள் வழங்கியிருக்கையில், ஒரு நீரிணை, உலகையே உற்றுப்பார்க்க வைத்துள்ளது. எண்ணெய்க்கும் நீருக்கும் என்றுமே ஒட்டுறவு கிடையாது என்ற நிலையில், கச்சா எண்ணெய்க்கும், கடல் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு என்று ஹோர்முஸ் ஜலசந்தி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயைச் சுமந்து வரும் கப்பல்களுக்குக் கடல் நீரில் வழிவிடும் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையின்மீது தற்போது உலகத்தின் பார்வை திரும்பியுள்ளது.
புவியியல் அமைப்பு
ஹோர்முஸ்
நீரிணை ஓமன் நாட்டின் முசந்தம் தீபகற்பத்திற்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நீர்வழிப் பாதையாகும். இந்த நீரிணை ஆழம் மிகுந்ததும், கடல் சார்ந்த ஆபத்துகள் குறைவானதாகவும் உள்ளது. இதன் ஆழம் முசந்தம் தீபகற்பத்திற்கு அருகில் மிக அதிகமாகவும், ஈரானிய கடற்கரை நோக்கி வடக்கே செல்லச் செல்ல குறையவும் செய்கிறது. பாரசீக வளைகுடாவிற்கும், ஓமன் வளைகுடாவிற்கும் இடையே உள்ள இந்த நீர்வழித்தடம் வடக்கில் ஈரான், தெற்கில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த
வழித்தடம் தன் நுழைவுப் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் ஏறக்குறைய 50 கி.மீ. அகலம்
கொண்டுள்ளது. குறுகலான இடம் 33 கி.மீ. அகலத்தை
உடையது. இதன் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் ஈரான் (வடக்கு), ஓமன் (தெற்கு) நாடுகளின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. இது பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கிறது.
ஈரானிய
வளைகுடா கடற்கரைப் பகுதி, அதன் நில அமைப்பு மற்றும் காலநிலை காரணமாக, பொதுவாக மக்கள் அங்கே வாழ்வதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் உகந்ததாக இல்லை. இப்பகுதி ஆண்டு முழுவதும் வானிலை வறண்டதாகவும், வெப்பம் மிகுந்ததாகவும் உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் காணப்படும். புழுதியும் புகைமூட்டமும் காலைநேர மூடுபனியும் இந்த நீரிணையைக் கண்காணிப்பதைக் கடினமாக்கும். வறண்ட கோடை மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்கரையில் புழுதிப் புகை மூட்டம் மிகுந்திருக்கும். இங்கு வீசும் நிரந்தரமான கடற்காற்று ஈரப்பதத்தையும் புழுதியையும் கொண்டு வருகிறது. எனினும், தெற்கு ஈரானில் நடைபெறும் எண்ணெய் தொடர்பான செயல்பாடுகள், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தொடர்வதால் இப்பகுதிக்கு ஓரளவு வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது.
ஹோர்முஸ்
நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. மேலும், ஆசியா-ஐரோப்பா வர்த்தக இணைப்பாகவும் விளங்குகிறது. இது சாதாரண கடல் பாதை அல்ல; உலகப் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்கும் முக்கிய ‘கழுத்துப்பிடி’ ஆகும்.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான இதன் வழியாக எண்ணெய் சுமார் 20% - 30% இந்த வழியே செல்வதால் இந்த நீரிணை ‘உலக எண்ணெய் நரம்பு’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
உலகின்
எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழித்தடத்தின் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய
அரபு அமீரகம், ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்த நீர் வழித்தடமே முக்கியமானதாகிறது. மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏறத்தாழ 40-50% வரை
ஹோர்முஸ் நீரிணை வழியாக வருவதால், இந்த நீர்வழிப்பாதை இந்தியாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சட்டமும் கட்டுப்பாடுகளும்
ஐக்கிய
நாடுகள் சபை விதிகளின்படி, நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையிலான பகுதியைத் தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இது நிலப்பரப்பைப் போலவே கணக்கில் கொள்ளப்படும். இந்த அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணையும், அதன் கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் முழுமையாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் பகுதிகளுக்குள் அமைந்துள்ளன. அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்திக் கண்ணி வெடிகளைப் பதிப்பதாலும், அதிவேகப் படகுகள் பெரும்பாலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆயுதங்களை ஏந்தியும் ஹோர்முஸ் நீர்வழிப் பாதையை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
எனினும்,
அனைத்து நாடுகளின் கடல்சார் சட்டத்தின்படி ஹோர்முஸ் நீரிணை ஓர் உலகளாவிய வழியாகக் கருதப்படுகிறது. அது ஈரான் நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அதில் பயணிக்கும் உரிமை உண்டு. அதைத் தடை செய்வது உலகளாவியத் தர நிலைகளின் விதிமீறலாகப்
பார்க்கப்படுகிறது. தன் கடல் எல்லைக்குள் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையின் கடல்சார் பாதுகாப்புக் குறித்த கவலை ஈரானுக்கு இருந்தாலும், உலகின் சுமார் 20% கச்சா
எண்ணெய் செல்லும் இந்த நீர்வழியை மூடுவது போக்குவரத்திற்கான பிற நாடுகளின் உரிமையை மீறுவதாகும். மேலும், இந்த நீர்வழிப் பாதையை மூடுவது என்பது ஈரானின் சொந்த எண்ணெய் ஏற்றுமதியையும் தடுக்கும் என்பதால், இது தற்கொலைக்கு நிகரான நடவடிக்கையாகவும் உள்ளது.
போர்ப்பதற்றங்கள்
அல்லது தடைகள் காரணமாக இந்த நீர்வழியைக் கட்டுப்படுத்தும் தனது உரிமைக்காக ஈரான் வாதிட்டாலும், உலகளாவிய கடல்சார் சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தப்படவில்லை. ஈரான் தன் கடற்கரைப் பகுதியைக் கட்டுப்படுத்தினாலும், வரலாற்று ரீதியாக அமெரிக்கக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை அப்பகுதியில் நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இதுவே
அடிக்கடி பதற்றங்களுக்கும் கடல்சார் மோதல்களுக்குமான சாத்தியக்கூறுகளுக்கும் வழிவகுக்கிறது.
மோதல்களின் துவக்கப்
புள்ளி
ஒரு
நாளில் தொடங்கியதல்ல ஹோர்முஸ் நீரிணைப் பிரச்சினை. பல ஆண்டுகளாக அரசியல்,
பாதுகாப்பு, போர், எண்ணெய் வணிகம் ஆகியவற்றால் உருவானது. 1970-களில் எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து மட்டுமே நடைபெற்றபோது, ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் போர்க் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்வதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால், 1980-களில் நிலைமை மாறிற்று. வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தங்கள் நாட்டின் நீர்வழிகளில் செல்வதற்கு முன் அனுமதி அவசியம் என வலியுறுத்தின.
1984-ஆம் ஆண்டின்
தொடக்கத்தில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹூசைன், ஈரானின் கப்பல் போக்குவரத்தைத் தாக்கினார். இதன்மூலம் ஹோர்முஸ் நீரிணையில் அனைத்துக் கடல்போக்குவரத்தும் இல்லாமல் செய்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தலையீட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார். அவர் ஈரானின் கார்க் தீவில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் எண்ணெய்க் கப்பல்களையும் தாக்கியபோது ஈரான்-ஈராக்கின் டேங்கர் போர் தொடங்கிற்று. இதுவே ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்த முதல் கட்டமாகும். இந்தப் போரில் அமெரிக்கா ஈராக்கிற்குப் பொருளாதார, உளவுத்துறை மற்றும் மறைமுக இராணுவ ஆதரவை வழங்கியது.
இத்தகு
பதற்றமான சூழலில் 1988-இல் பாரசீக வளைகுடாவில் உள்ள உலகளாவிய கடல் பகுதியில் ஈரானியக் கடற்படை கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்க, அதன் விளைவாக அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று சேதமடைய, அப்போது அமெரிக்க ஆயுதப் படைகள் நேரடியாகவே ஈரானியக் கடல் எல்லைக்குள் தாக்குதல் நடத்தின. அப்போது தொடங்கியது அமெரிக்காவின் ஈரானிய போர்ச் சிக்கல்கள். ஈரான்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வழித்தடத்தை மையமாக வைத்துத் தவறான தாக்குதல்கள், அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள், எண்ணெய் மாசுபாடு போன்ற காரணங்களால் அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுடன் ஈரான் பிரச்சினைகளை ஏற்படுத்தி, தானும் பிரச்சினைகளில் சிக்கியது.
ஈராக்கில்
செய்தது போலவே ஈரானிலும் அமெரிக்க வல்லரசு ஆதிக்கமிக்க அரசியல் விளையாட்டுகளைத்
தொடர்ந்தது. 2000-ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் போராளிக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் கப்பலைக் கைப்பற்றுதல், கடற்படைத் தகராறு, எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் எனவும், ஒருவருக்கொருவர் தடை விதித்தல் மற்றும் தடை மீறுதல் எனவும் வெவ்வேறு விதங்களில் மோதல்களும் தாக்குதல்களும் போர்களும் இன்றளவும் தொடர்கின்றன.
நெருக்கடிக்குள்
இன்றைய
உலகம்
2025 இறுதியில் ஈரான்
நாடு பெரும் போராட்டத்தைச் சந்தித்தது. போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவும் உதவியும் அளித்தது. இதற்கிடையே அணுசக்திக் குறைப்பு குறித்த பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்தன. எனினும், 2026 பிப்ரவரியில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈராக்மீது திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்திட அமெரிக்க-ஈராக் போர் தொடங்கியது. அதன் தலைவர் கமேனியும், உயர் அதிகாரிகளும் கொல்லப்பட, பதிலடியாக அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள அண்டை நாடுகள்மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.
மார்ச்
2 அன்று ‘இனி ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்ல அனுமதியில்லை’ என்று
அறிவித்தது ஈரான். இதனால் பல கப்பல்கள் துறை
முகத்தில் தங்கிவிட்டன அல்லது திரும்பிச் சென்றன. ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதால் எண்ணெய் சந்தைகளில், அதன் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் பல நாடுகளுக்குச் சமாளிக்க
முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்தது. எனினும், முற்றிலும் கடல் சார்ந்த ஈரானின் பொருளாதாரமும், கடல்வழிப் பாதை வழியாக எண்ணெய் ஏற்றுமதிகளும் பொருள்கள் மற்றும் கப்பல்கள் தடையின்றிச் செல்வதைச் சார்ந்தே உள்ளதால், இந்த நீர்வழிப்பாதை ஏற்றுமதிகளுக்கு இன்றியமையாதது என்ற நிலையில் வழித்தடத்தை மூடிவைக்கும் ஈரானும் பொருளாதாரத் தற்கொலைக்கு உள்ளாக நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகின்
பல நாடுகள் மட்டுமல்ல, இறக்குமதி, ஏற்றுமதிக்காக ஈரானும் இந்த நீர்வழிப்பாதையைச் சார்ந்திருப்பதால் நீண்டகாலம் ஹோர்முஸ் நீரிணையை மூடிவைப்பது ஈரானுக்கும் சாத்தியமில்லை.
எது
எப்படியோ, எண்ணெயும் தண்ணீரும் சேர்ந்திருப்பதில்லை என்றாலும், அதிகாரப் பசியுடையோரின் இந்தப் போர் எண்ணெயையும் தண்ணீரையும் சேர்த்து வைத்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது.