news-details
ஆன்மிகம்
புதிய ஏவாளாகிய மரியா முழுமன சுதந்திரத்துடன் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 33

‘மனுவுருவாதல் (incarnation) என்னும் மிகப்பெரிய மறைபொருளுக்கு முன்பு அன்னை மரியா ‘ஆம் என்று கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, மனுக்குலத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார்.

1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பைப் பற்றிய தனது கருத்தில் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, இறைத்தூதரின் வார்த்தையை நம்பி அதற்குத் தனது ஒப்புதலைத் தெரிவித்த மரியாவின் மதிப்புமிக்க பதிலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. இதுபோன்ற நற்செய்தி விவரிப்புகளில் நிகழ்வதைப் போலல்லாமல், இது இறைத்தூதரால் வெளிப்படையாகவே அறிவிக்கப்படுகின்றது: “ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன் நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார் (இறைத்திட்டத்தில் திருச்சபை எண். 56).

இறைத்திட்டத்தில் திருச்சபை என்னும் இந்த ஏடானது புனித எரோணிமுஸ் விவரிக்கும் ஏவாளுக்கும் மரியாவிற்கும் இடையேயான வேற்றுமையை நினைவுகூர்கின்றது: “முந்தையவள் அதாவது ஏவாள், ஒரு தூதரின் (சாத்தானின்) வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டதனால் இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அவரை விட்டு விலகிச் சென்றாள். ஆனால், மரியாவோ ஓர் இறைத்தூதரின் அறிவிப்பிலிருந்து நற்செய்தியைப் பெற்று, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் இறைவனையே பெற்றெடுத்தார். மேலும், ஏவாள் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் அளவுக்குச் சாத்தானால் ஏமாற்றப்பட்டாள். ஆனால், மரியாவோ இறைவனுக்குக் கீழ்ப்படிவதென உறுதி செய்துகொண்டார்.  இதன் வழியாக மரியா ஏவாளுக்காக இறைவனிடம் பரிந்து பேசுபவரானார். ஒரு கன்னியால் (ஏவாள்) மனித இனம் முழுவதுமே மரணத்திற்கு உட்படுத்தப்பட்டதைப் போன்றே, மற்றொரு கன்னியால் (மரியா) அது மீட்கப்பட்டது. இவ்வாறு ஒரு கன்னியின் கீழ்ப்படியாமையானது மற்றொரு கன்னியின் கீழ்ப்படிதலால் சமன் செய்யப்பட்டது...” (Adv. Haer., V,  19, 1).

சுதந்திரமானதொரு நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் வழியாக மரியா இறைத்திட்டத்திற்கு ஒத்துழைத்தார்

2. இறைவனின் திட்டத்திற்கான அவரது முழுச்  சம்மதத்தைத் தெரிவிப்பதில், மரியா இறைவனுக்கு முன் முற்றிலும் சுதந்திரமுள்ளவராக இருந்தார். அதே நேரத்தில், அவரது பதிலில் முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் இருப்பதையும் தனிப்பட்ட முறையில் மரியா உணர்ந்திருந்தார்.

இறைவன், முழு மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் ஒரு பெண்ணின் கரங்களில் வைக்கின்றார். இவ்வகையில், உலக மீட்பிற்காக இறைவன் தமது அன்பில் தயாரித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்திட்டமே மரியாவின்  ‘ஆம் என்கிற சம்மத மொழியாகும்.

மீட்பின் இறைத்திட்டத்திற்கான மரியாவின் சுதந்திரமான சம்மதத்தில் உள்ள முழு மனிதகுலத்திற்குமான தீர்க்கமான மதிப்பைச் சுருக்கமாகவும் திறம்படவும் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடானது கூறுகின்றது: “கன்னி மரியா சுதந்திரமான நம்பிக்கையோடும் கீழ்ப்படிதலோடும் மனுக்குல மீட்பில் ஒத்துழைத்தார். மனுக்குலம் அனைத்தின் சார்பாகவும் அவர் ‘ஆம் என்று கூறினார். அவரின் கீழ்ப்படிதலினால், வாழ்வோர் அனைவரின் தாயாகிய புதிய ஏவாள் ஆனார் (Catechism of the Catholic Church, n. 511).

3. தனது நன்னடத்தை வழியாக, நம் வாழ்விற்கான இறைவனின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நமது தீவிரமான பொறுப்பை மரியா, நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகிறார். இறைத்தூதரின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் இறைவனுடைய மீட்பின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிதலில், “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி அவர்கள் நடக்கும்படி (லூக் 11:28) ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் (blesseds) என்று ஆண்டவர் குறிப்பிடுகிறவர்களுக்கு மரியா முன்மாதிரியாகின்றார். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று தன் தாயை அறிவித்த கூட்டத்திலிருந்த அந்தப் பெண்ணிடம் இயேசு மரியாவின் ஆசிர்வாதத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அவரது விருப்பமே இறைவனின் தாயாக இருப்பதற்கான அந்த அழைத்தலை அவர் ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது.

இயேசு கூறும் இந்தப் புதிய ஆன்மிகத் தாய்மையானது (new spiritual motherhood) அனைத்திற்கும் மேலாக மரியாவுடன் தொடர்புடையது என்பதை ‘மீட்பரின் தாய் என்கின்ற திருமடலில் நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். உண்மையில், இறைவனின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களில் மரியா முதன்மையானவர் அல்லவா! ஆகவே, கூட்டத்திலிருந்த பெண்ணிற்கு இயேசு அளித்த ஆசிர்வாதம் முதலில் மரியாவைத்தானே குறிக்கும்! (மீட்பரின் தாய், எண். 20). இவ்வாறு, மரியா அவருடைய மகனின் முதல் சீடராக (ஒப்பிடுக. ibid) அறியப்படுகிறார். மேலும், அவரது முன்மாதிரியால் ஆண்டவரின் அருளுக்குத் தாராளமாகப் பதிலளிக்க அனைத்து நம்பிக்கையாளர்களையும் அழைக்கின்றார்.

4. இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் அவரது பணியில் மரியாவின் முழு அர்ப்பணிப்பு பற்றி இவ்வாறு விளக்குகின்றது: “பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தன் மகனுக்கும் அவரின் பணிக்கும் தன்னையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 56).

மரியாவைப் பொருத்தவரை, இயேசுவுக்கும் அவரது பணிக்குமான அவரின் அர்ப்பணிப்பு என்பது தன் மகனுடனான நெருங்கிய உறவு, அவரை ஒரு மனிதனாக வளர்ப்பதில் தாய்மையுள்ளம் கொண்ட ஈடுபாடு மற்றும் அவரது மீட்புப் பணியில் அவரின் ஒத்துழைப்பு போன்றவைகளாகும்.

மரியா மனுக்குலம் அனைத்திற்குமான மீட்பின் காரணமானார்

மீட்புப் பணியில் இயேசுவிற்கு ஒத்துழைப்பதில் மரியா ‘அவருக்குக் கீழ்நிலையில் இருந்து சிறப்பான வகையில் அதைச் செய்கின்றார். அதாவது, அருளின் பயனான கீழ்ப்படிதலின் நிலையில் இருந்து அதைச் செய்கின்றார். இருப்பினும், இது ஓர் உண்மையான ஒத்துழைப்பாகும். ஏனெனில் இது ‘அவரோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது மற்றும் இது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பிலிருந்து மீட்புப் பணியில் அவரது தீவிரமான பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும். எனவே, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது மிகச் சரியாக, “இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் கையில் மரியா  செயலற்ற ஒரு கருவியல்ல; மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் எனத் திருத்தந்தையர் கருதுவது சரியே. தூய எரோணிமுஸ் கூறுவதுபோல, “மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறை வாழ்வு பெறக் காரணமானார் (Adv. Haer., III, 22,4).

நமது முதல் பெற்றோரின் பாவத்திற்கு எதிரான கிறிஸ்துவின் வெற்றியுடன் தொடர்புடைய மரியா உண்மையில் வாழ்வோரின் தாயாகத் தோன்றுகின்றார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 56). இவ்வாறு இறைத்திட்டத்திற்குக் கீழ்ப்படிவதைச் சுதந்திரமாக ஏற்றுக்கொண்ட அவரது தாய்மையானது மனுக்குலம் அனைத்திற்கும் வாழ்வின் ஊற்றாகின்றது.

மூலம்: John Paul II, Mary, the new Eve, freely obeyed God, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 25 September 1996, p. 19.