news-details
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு (12-04-2026) இறை இரக்கத்தின் ஞாயிறு - திப 2:42-47; 1பேது 1:3-9; யோவா 20:19-31

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரமான இன்று, இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். நாம் வாழ்வதும் இருப்பதும் இயங்குவதும் இறைவனின் இரக்கத்தினால்தான். இயேசுவின் கரம் வல்லமையின் கரம்; அணைக்கும் கரம்; அற்புதங்கள் செய்யும் கரம்; நிறைவாழ்வு நோக்கி வழிநடத்தும் கரம்; எத்தீங்கும் அணுகாது பாதுகாக்கும் கரம்சுமைகளிலிருந்து தூக்கிவிடும் கரம். எனவே, நமது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இரக்கமே உருவான இயேசுவின் கரங்களைப் பிடித்துக்கொண்டு பயணிப்போம். மனிதர் தரமுடியாத அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தரக்கூடிய இரக்கம் நிறைந்த இயேசுவின் இதயத்தில் தஞ்சம் தேடுவோம்.

கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். மனிதருடைய விருப்பத்தினாலோ, ஆற்றலினாலோ இந்த உலகம் இயங்குவதில்லை; மாறாக, இறைவனின் இரக்கத்தினால் மட்டுமே இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைவனின் இரக்கத்தை தோமா அனுபவித்ததால்தான்நீரே என் ஆண்டவர்; நீரே என் கடவுள்என்று அறிக்கையிட்டார்உயிர்த்த இயேசுவின் பிள்ளைகளாகிய நாமும் இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வு முழுவதும் உணர்ந்து அவரில் நம்பிக்கை கொண்டு வாழவும், இதயத்தில் இரக்கமும், கண்களில் கருணையும் கொண்டு இயேசுவின் சீடத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்து இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான ஞானத்தையும், தாராள உள்ளத்தையும் தரவேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகமானது தொடக்கத் திரு அவையில் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது. இறைவேண்டலிலும் நட்புறவிலும் பகிர்ந்துகொள்வதிலும் இறைவன்மீது கொண்ட நம்பிக்கையிலும் கடவுளைப் போற்றுவதிலும் மற்றவர்களை மதிப்பதிலும் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் சிறந்து விளங்கிய தொடக்கத் திரு அவையின் கிறித்தவர்களைப்போல நாமும் வாழ அழைப்பு விடுக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கிறித்தவர்களாகிய நாம் பெற்றுக்கொண்ட அழைப்பினையும், அழைப்பிற்கேற்ற பொறுப்பினையும் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அன்பை, பாசத்தை, உடனிருப்பை, இரக்கத்தை, வல்லமையை, அரவணைப்பை, மீட்பை அன்றாடம் அனுபவித்து, அதை அனைத்து மக்களுக்கும் அறிவிக்கவும், இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் உயிர்ப்பின் மாட்சியையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் முழுமையாகப் பெற்று, தோமாவைப்  போன்று துணிவுடன் அறிவிக்கத் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆணடவரே! உமது இரக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் இரக்கமுள்ள மனிதர்களாக வாழவும், எங்களது சொற்களாலும் செயல்களாலும் வாழ்க்கையாலும் அமைதியை விதைக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் நாட்டு மக்கள் அனைவரும் நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள்மீதும் நாட்டின்மீதும் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து, பொறுப்புணர்வோடு செயல்படவும் தேவையான ஞானத்தை எம் மக்களுக்குத் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆற்றலின் ஊற்றான எம் இறைவா! எம் நாட்டிலுள்ள இளையோர் அனைவரும் பெற்றோரின் சுமையைக் குறைப்பவர்களாக வாழவும், நல்ல மதிப்பீடுகளில் வளரவும், அறிவியல் உலகில் ஆண்டவரைத் தேடிச் செல்லவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.