ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேமரூனில் திருத்தந்தை லியோ, அந்நாட்டு அதிகாரிகளிடையே உரையாற்றும் போது அமைதி மற்றும் நீதிக்காக வலுவான அறைகூவல் விடுத்துள்ளார். யாவுண்டேவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேமரூனின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை ‘சிறிய ஆப்பிரிக்கா’ எனப் பாராட்டிய அவர், இந்தப் பன்முகத்தன்மையே நாட்டின் ஒற்றுமைக்கான அடித்தளம் எனத் தெரிவித்துள்ளார். “அமைதி என்பது வெறும் அரசியல் முழக்கமாகச் சுருங்கிவிடக் கூடாது; அது அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “போர் போதும்! வன்முறைப் பாதையைத் துறந்து, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையில் அமைதியைக் கட்டியெழுப்புங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.