news-details
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 12, 2026, பாஸ்கா காலத்தின் 2 - ஆம் ஞாயிறு இறை இரக்கத்தின் ஞாயிறு திப 2:42-47; 1பேது 1:3-9; யோவா 20:19-31 (காயங்களில் கனிந்த கடவுளின் எல்லையற்ற கருணை!)

ஈரானுக்கும் இஸ்ரயேல்-அமெரிக்காவுக்கும் இடையே மூண்டுள்ள தற்போதைய போர், உலகையே ஒரு மிகப்பெரிய பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கிறது. பழிவாங்கும் உணர்வோடு வீசப்படும் ஏவுகணைகளுக்குப் பலியானவர்கள் குழந்தையர் என்று நினைக்கும்போது நம் கண்களில் இரத்தம் கசிகிறது. தென் ஈரானின் மினாப் நகரில் இயந்திரங்கள் வரிசையாக நின்று, நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகளை ஒரே இடத்தில் தோண்டிக் கொண்டிருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் மரண ஓலம்! தோளில் பையை மாட்டிக்கொண்டு, மழலைச் சிரிப்புடன் பள்ளிக்குச் சென்ற தன் பிஞ்சு மகளின் புகைப் படத்தைக் கையில் ஏந்தி, ஒரு தாய் கதறிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், தன் மகளின் சடலத்தை வெறும் ஒரு பொட்டலம்போலக் கையில் ஏந்தியபடி ஒரு தந்தை நிலைகுலைந்து நிற்கிறார். அமெரிக்கக் குண்டுவீச்சில் நொறுங்கிப்போன அந்த மகளிர் பள்ளியில், பலியான 168 சிறுமியரை மொத்தமாக அடக்கம் செய்யும் அந்தப் பெருந்துயரம் கல் மனத்தையும் கரைக்கக்கூடியது.

இன்று உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மடிந்து கொண்டிருக்கும் மனிதம்தான். பகைமையும் பழிவாங்கும் உணர்வும் மேலோங்கி நிற்கும் இன்றைய சூழலில், உலகம் இன்று எதைத் தேடுகிறது? ஆயுதங்களையா? அல்லது அதிகப்படியான குண்டுகளையா? பழிவாங்கும் போர் முழக்கங்களுக்கு நடுவில், இந்த உலகம் இன்று ஏங்குவதுஇறைவனின் (மனிதரின்) இரக்கத்திற்காகமட்டுமே.

நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கிறோம். உயிர்ப்புப் பெருவிழாவின் எட்டாம் நாளான இன்று, மரணத்தை வென்ற இயேசுவின் வெற்றியை நாம்இறை இரக்கத்தின் ஞாயிறாக (Divine Mercy Sunday) மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். ‘இரக்கத்தின் வடிவே இறைவன்என்பதை உலகிலுள்ள எல்லா மதங்களும் பறைசாற்றுகின்றன. அத்தகைய கருணையின் உருவான இறைவனைக் கொண்டாடவே திரு அவை இன்று நம்மை அன்போடு அழைக்கிறது.

இரக்கத்தைப் பற்றி இன்றைய உலகின் நிலை என்ன? ‘இரக்கம் என்றால் என்ன? அதன் விலை எவ்வளவு?’ என்று கேட்கக்கூடிய அளவிற்கு மனித மாண்பு சிதைந்து கிடப்பது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அன்பு செய்யப்பட வேண்டிய மனிதர் இன்று பயன்படுத்தப்படுகிறார்கள். பயன்படுத்தப்பட வேண்டிய பொருள்கள் இன்று அன்பு செய்யப்படுகின்றன. ‘பழிக்குப் பழிஎன்னும் வன்முறை, குருதி குடிக்கும் தீவிரவாதம், அச்சுறுத்தும் பயங்கரவாதம், மனிதாபிமானமற்ற பெண்ணடிமைத்தனம் மற்றும் பிஞ்சு உள்ளங்களைக் கூட விட்டுவைக்காத பாலியல் வன்கொடுமைகள்... என இவையனைத்தும் இரக்கத்திற்கு எதிரான பேராயுதங் களாக உருவெடுத்து உலகை அச்சுறுத்தி வருகின்றன. இவ்வுலகம் என்றுமில்லாத அளவு இரக்கத்தை இழந்து தவிக்கிறது என்பதை நம் உள்ளங்களில் ஆணி கொண்டு அறைந்துள்ளது நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களும், பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளும். மனித இதயம் கல்லாய் மாறிப்போனதன் விளைவே, நாம் இன்று சந்திக்கும் அத்தனை பேரழிவுகளும், மனிதாபிமானமற்ற செயல்களும்.

இரக்கம் என்பது வெறும் பரிதாபம் காட்டுவதோ அல்லது ஏதோ ஒரு தானத்தைச் செய்வதோ அல்ல; ‘இரக்கம் (Mercy) என்ற சொல்லின் வேர் இலத்தீன் மொழியில்Misericordiaஎன்பதாகும். இதன் பொருள்துன்பப்படுபவர்களிடம் தன் இதயத்தைக் கொடுப்பது (Miseri-cor-dare). யார் ஒருவர் மற்றவரின் வலியைத் தன் வலியாக உணர்ந்து, தன் இதயத்தை அவரிடம் ஒப்படைக்கிறாரோ, அவரே இரக்கமுள்ளவர்.

இன்றைய வழிபாட்டில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் இறைவனின் இரக்கம் எவ்வாறு மனித வரலாற்றிலும், தனிமனித வாழ்விலும் செயல்படுகிறது என்பதை நமக்கு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

தொடக்க காலக் கிறித்தவச் சமூகம் (திப 2:42-47) இறை இரக்கத்தின் வாழும் சாட்சியாகத் திகழ்ந்தது. அவர்கள் ஒரே மனத்துடன் விளங்கினர்; திருத்தூதர்களின் போதனைகளைக் கேட்டனர்; செபத்தில் நிலைத்திருந்தனர்; நட்புடன் உறவாடினர்; தங்களுக்கு இருந்த சொத்துகளையும் உடைமைகளையும் விற்று, தேவையிலிருப்போர் அனைவருக்கும் பகிர்ந்துகொடுத்தனர். இதுவேசமூக இரக்கம்.’ ஒரு சகோதரரின் வறுமையைக் கண்டு இதயம் துடிப்பதும், அவரது கண்ணீரைத் துடைக்கத் தன் கைகளை நீட்டுவதுமே உண்மையான நற்செய்தி வாழ்வு. அங்கே வன்முறைக்கு இடமில்லை; பகிர்வுக்கு மட்டுமே இடமுண்டு.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1பேதுரு 1:3-9), ‘கடவுள் தம் பேரிரக்கத்தினால் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார்என்று புனித பேதுரு முழங்குகிறார். நம்முடைய தகுதியால் நாம் மீட்புப் பெறவில்லை; மாறாக, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தாலேயே நாம் புதுவாழ்வு பெற்றுள்ளோம். சோதனைகளும் துன்பங்களும் நம்மைச் சூழ்ந்தாலும், அழியாத அந்த இறை இரக்கம் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையே நம்மை வழிநடத்துகிறது.

நற்செய்தியில் (யோவா 20:19-31) இரக்கத்தின் உச்சகட்டக் காட்சியை நாம் காண்கிறோம். உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது, சந்தேகம் கொண்ட தோமாவை அவர் கடிந்துகொள்ளவில்லை; மாறாக, அன்போடு அழைக்கிறார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்…” (20:27) என்கிறார். இயேசுவின் காயங்கள் வடுக்கள் அல்ல; அவை இறை இரக்கத்தின் திறந்த வாயில்கள். தோமா அந்தக் காயங்களைத் தொட்டபோது, அவர் தொட்டது வெறும் சதையை அல்ல; கடவுளின் எல்லையற்ற கருணையை! அந்த ஒரு நொடி, தோமாவின் அவநம்பிக்கை மறைந்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்ற அடைக்கலம் பிறந்தது. நமக்காகக் காயம்பட்ட இறைவனே, நம் காயங்களையும் குணமாக்கும் இரக்கத்தின் ஊற்று என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

மனித வரலாற்றின் தொடக்கமே இறைவனின் இரக்கத்தில்தான் வேரூன்றியிருக்கிறது. முதல் பெற்றோரின் வீழ்ச்சியால் மானுடம் பாவத்தில் மூழ்கியபோது, கடவுள் தம் இரக்கத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை; மாறாக, அன்னை மரியா வழியாகமீட்புஎன்னும் வாக்குறுதியை வழங்கி, தம் கருணையை உறுதிப்படுத்தினார். சீனாய் மலையில் மோசேக்குத் தம்மை வெளிப்படுத்தியபோது, “ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர் (விப 34:6) என்று இறைவன் முழங்கியது வெறும் வார்த்தையல்ல; அது மனிதகுலத்தின் மீதான அவரது தீராத பேரன்பு! இந்தத் தந்தையின் இரக்கமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில்மனித உருஎடுத்தது. அவரது ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு வல்ல செயலும் இறை இரக்கத்தின் அடையாளங்களே.

இறுதியாக, கல்வாரியில் தம் உயிரையே கையளித்தபோது, அந்த இரக்கம் முழுமை பெற்றுச் சிகரம் தொட்டது. இயேசுவின் இந்தப் பரிவிரக்கப் பணிகளை அவரது சீடர்களே முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. ஒருவர் மறுதலித்தார்; மற்றொருவர் காட்டிக்கொடுத்தார்; ஒருவர் ஆடையின்றி ஓடினார். இவ்வளவு துரோகங்களுக்கும் கைவிடுதலுக்கும் மத்தியிலும், இயேசுவின் இரக்கம் ஒளிர்ந்தது. தம்மைத் தேடி வந்த படைவீரர்களிடம், “என்னைத் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் (சீடர்களை) போகவிடுங்கள் (யோவா 18:8) என்று கூறி, மரண வாயிலிலும் தாம் அழைத்த சீடரைக் காத்தாரே... அதுதான் இரக்கத்தின் உச்சம்!

இன்றைய நாள் நம் அன்றாட வாழ்விற்குக் கற்றுத்தரும் மூன்று முக்கியப் பாடங்கள்: முதலில், நம் காயங்களைக் கடவுளிடம் காட்டுவோம். தோமா இயேசுவின் காயங்களைத் தொட்டபோதுதான் அவரது கடவுள் தன்மையை உணர்ந்தார். அது போல, நம்முடைய தோல்விகளும் பாவங்களும் பலவீனங்களும் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்க வேண்டியவை அல்ல; மாறாக, அவை இறைவனின் இரக்கத்தை நாம் இன்னும் ஆழமாகத் தேடுவதற்கான நுழைவாயில்கள்.

இரண்டாவதாக, பழிவாங்கலைத் துறந்து மன்னிப்பைப் பகிர்வோம். உலகம் இன்று பழிக்குப் பழி என்னும் போரில் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், தம்மைவிட்டு ஓடிப்போன சீடர்களை உயிர்த்த பின் சந்தித்த இயேசு, “உங்களுக்கு அமைதி உரித் தாகுகஎன்று மன்னிப்பைத் தந்தார். நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பதன் மூலமே, நாம் இறை இரக்கத்தின் உண்மையான பிள்ளைகளாக மாறமுடியும். மூன்றாவதாக, இரக்கத்தின் கைகளாக மாறுவோம். வறுமையில் வாடுவோருக்கும், சமூகத்தால் ஓரம் கட்டப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கும், போர்ச்சூழலில் தவிக்கும் அப்பாவி உயிர்களுக்கும் நம் இரக்கத்தின் கரங்களை நீட்டவேண்டும்.

நிறைவாக, போர்களில் மடியும் மனிதம் தொடங்கி, தோமாவின் விரல் தொட்ட இயேசுவின் காயங்கள் வரை ஒரே ஒரு செய்திதான் உரக்க ஒலிக்கிறது: ‘இறைவனின் இரக்கம் எல்லையற்றது.’ அந்தப் பெருங்கருணையைப் பெற்றுக்கொள்வோம்; மண்ணுலகில் இரக்கத்தின் சாட்சிகளாய் வாழ்வோம்.