news-details
சிறப்புக்கட்டுரை
2026 தேர்தல்: நீ இரசிகனா? தொண்டனா?

தமிழ்நாட்டு அரசியல் என்பது, அறம் சார்ந்த அரசியல். மனிதம் பேணும், மானிடம் காக்கும்  மாண்புமிகு அரசியல். எளியோருக்கு ஏற்றம் தரும் சமூக நீதி அரசியல். பொது அமைதி பேணும் மக்கள் அரசியல். இன்று ஆர்.எஸ்.எஸ்., பா... பரிவாரங்கள் அணிந்துள்ள  முகமூடிகளால் அதிர்ச்சி அளிக்கிறது. வெறுப்பு அரசியலை விதைக்கிறது. புதுப்புதுப் புனைவுகளை நிகழ்கால அரசியல் என்கிறது.

தனிநபர் வழிபாட்டைக் கதாநாயக மாயப்பிம்பத்தை முன்னிறுத்திய இவர்களின் வாக்கு அரசியல் நடக்கிறது. முதல்வர் பதவிக்காக எந்தத் தாழ்நிலைக்கும் இறங்குகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலின் வருங்காலம், வருத்தம் அளிப்பதாக உள்ளது. ‘தான்என்ற கதாநாயகப் பிம்பத்தின் கட்டுமானம்இரசிக வெறிஎன்ற வாக்கு அரசியலை முன்னெடுக்கிறது. அடிப்படை அறமற்ற அரசியல் நடக்கிறது.

எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரும், தன் தொண்டர்களும் அப்பாவிப் பொதுமக்கள் இறப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள்என்ற தமிழ்நாட்டு முதல்வரின் கருத்து ஏற்கத்தக்கது. நடிகர் அஜித் கூறுகிறார்: “நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை; கரூர் கூட்ட நெரிசல் நிகழ்விற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நம் அனைவருக்கும் ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு; கூட்டம் திரட்டுவதை, அதைப் பெரிய விசயமாக்குவதை நிறுத்தவேண்டும்.”

கரூர் நிகழ்விற்கும், நடிகர் அஜித் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும், அவர் தன் பொதுப்புத்தியின் அடிப்படையில் ஒரு நேர்காணலில் தார்மீகப் பொறுப்பு ஏற்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் காட்டமாக ஆணி அடித்தாற்போல் பேசுகிறார்: “கோமாளி போல் நடந்துகொண்டதற்காகக் கோமாளியைக் குறை சொல்லாதீங்க, சர்க்கசுக்குப் போன உங்க மேலதான் தப்பு.” இவரையும் மிஞ்சிய நடிகை ஓவியாவின் சமூக ஊடகப் பதிவுகள் நடிகரின் இரசிகர்களைக் கன்னத்தில் அறைந்தார்போல் இருந்தது.

கரூர் நிகழ்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய நடிகரின் கட்சி, தமிழ்நாடு அரசு மற்றும் அப்பகுதி செல்வாக்கு மிக்க மேனாள் அமைச்சரின் மீது பழியைப் போடுகிறது. இறப்பு வீடுகளுக்குச் செல்லாமல், தமிழ்நாடு அரசு மற்றும்  காவல்துறைமீது பழி போடுகிறது. சமூக ஊடகங்களில், பொது வெளிகளில், தன் உட்கட்சிக் கூட்டங்களில் இது குறித்து வைக்கிற குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் வழி நடிகரின் கட்சி பரிகாரம் தேட விரும்புவதில்லை. தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாட்டு முதல்வருக்கும் சவால் விடுகிறார்கள்.

ஒரு காலத்தில்இதயம் பேசுகிறதுஎன்ற வார இதழில் மணியன் என்ற பத்திரிகையாளர் ஆசிரியராக இருந்தார். மேனாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய நண்பராகவும் இவர் திகழ்ந்தார். உலகம் முழுவதும் சுற்றி பயணக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில் வல்லவர். அவர் எனக்குப் பரிசாகத் தான் எழுதிய இலங்கைப் பயணங்கள் குறித்த புத்தகத்தைப் பரிசளித்தார். அந்நூலில், ‘இலங்கையின் தந்தை பெரியார்எனப் போற்றப்படும் பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர்இதயம் பேசுகிறதுமணியனிடம், “தமிழர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்; ஏன்? எதற்கு? எப்படி? என ஆராயாமல் ஒருவர் செய்வதை மரபாகக் கடைப்பிடிக்கிறார்கள்என்றார். மணியன் காரணம் கேட்டார். டாக்டர் கோவூர் சொல்கிறார்: “ஒருமுறை விடைபெற்றுச் சென்ற கப்பல் கேப்டன் ஒருவர் சிறு படகில் ஏறினார். என்ன நினைத்தாரோ... படகில் இருந்து இறங்கி வந்து என் கரத்தில் முத்தமிட்டு விடைபெற்றார். உடனே படகில் இருந்த தமிழர்கள் அனைவரும் கரைக்கு வந்து என் கரத்தை முத்தமிட்டுச் சென்றார்கள்... இதுதான் தமிழர்கள்என்றார்.

நாம் அகராதியைப்  புரட்டிப் பார்த்தோம். ஒருவர் சொல்வதைக் கேட்டு, அது குறித்துச் சிந்திக்காமல்ஆம்என்று தலையாட்டும் கூட்டத்திற்கு ஆட்டு மந்தைக் கூட்டம் என்பது வழக்காயிற்று. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பிவிட்டால், ‘எங்கே போகிறது? ஏன் போகிறது? என்ன நடக்கிறது?’ என விளைவுகளை ஆராயாமல், தெரியாமல், முதல் ஆட்டைத் தொடர்ந்து மந்தை முழுவதும் போய்விடும்.

இவர்கள் போராட்டங்களை, ஊர்வலங்களை, பொதுக்கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, தேர்தல் பிரச்சாரங்களை, தெருமுனைப் பிரச்சாரங்களை, திண்ணைப் பிரச்சாரங்களை, பாசறைக் கூட்டங்களைக் கண்டோர் இல்லை. இவர்கள் சிறைச்சாலைகளின் திசை தெரியாதவர்கள். பொது வாழ்க்கையின் சிலுவைகளையும் தியாகங்களையும் அறியாதோர். திரையரங்குகளை மட்டுமே  கண்டவர்கள். இரண்டு மாநாடுகளையும், நான்கு சனிக்கிழமை பிரச்சாரங்களையும் அரசியல் என நம்புபவர்கள். பொது ஒழுங்கு, பொது நாகரிகம் அறியாதவர்கள். தங்களின் கதாநாயகனின் திரை பிம்பத்தை உண்மையென நம்புபவர்கள். இலகான் கட்டிய குதிரைகளாக நடிகர் பின்பு ஓடுபவர்கள்.

இக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் முதல்வரை ஒருமையில் சாடுகிறார். ‘புரட்சி  வெடிக்கும்என்கிறார். தங்கள் இரசிகர்கள், ‘தமிழ் நாட்டைப் பற்ற வைப்பார்கள்என அரசிற்குப் பயம் காட்டுகிறார். இதைவிட மோசமாக, ‘எங்களுக்குக் காவல்துறை குறித்து எந்தப் பயமும் இல்லைஎனப் பொது அமைதிக்குக் குந்தகம் உருவாக்குகிறார். பொதுமக்கள் கேட்கிறார்கள்: ‘மக்கா, கரூர் சம்பவங்களுக்குப் பின், ஒரு மாதம் எங்கே ஓடி ஒளிந்தீர்கள்?’ என்பதே. மேலும், ஜென்ஷி போராட்டம், வங்க தேசம், இலங்கை, நேபாளம் போல தமிழ்நாட்டிலும் வெடிக்கும் என்றார்.

தேச பக்தி குறித்து மூச்சுக்கு முன்னூறு முறை இந்திய மக்களுக்குப் போதிக்கும் பா... இந்திய இறையாண்மை குறித்தப் பேச்சிற்குக் கள்ள மௌனம் காக்கிறது. தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கிறது. புவிசார் அரசியல் அடிப்படை அறியா மந்தபுத்தி உள்ளோர், அதன் முடிவு சூர்யாவின்ஆயுத எழுத்துபடம் போல இருக்கும் என்கிறார்கள். இவர்களது கதாநாயகர்கள் ஒரு திரைப்படத்தில் கூட புரட்சி செய்யவில்லை என்பதே நிதர்சனம். இதுபோன்ற வட தமிழ்நாட்டில் பொறுப்பற்ற, ஒரு சாதிக் கட்சித் தலைவரின் பேச்சால் ஆயிரக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் வழக்கு வாங்கி வாழ்விழந்தனர். ஆனால், அதன் தலைவர் இன்று கோடிகளில் புரள்கிறார், சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.

கரூர் நிகழ்வுகளுக்குப் பின்பான தமிழ்நாட்டு அரசியலின் நிலைத்தன்மை என்பது கேள்விக் குறியாகி உள்ளது. குழம்பிய குட்டையில் ஆர்.எஸ்.எஸ்., பா... அகலக் கால்வைத்து மீன் பிடிக்கிறது. புதுக்கட்சி வழக்கு பயத்தில், பா...-விடம் அடிபணிய வேண்டியது என்பது காலத்தின் கட்டாயம்.

மாற்றம் என்ற வேடத்தில் வரும். பா... முகமூடி அணியாதவர்களையும் அடையாளம் காண்பது தமிழ்நாட்டு வாக்காளர்களின் கடமையும் பொறுப்புமாகும்.