அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் என். சதீஷ்குமார் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, ‘இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வஃக்பு வாரியம் இருப்பதைப் போல, கிறித்தவ ஆலயங்களின் சொத்துகளை நிர்வகிக்க ஏன் ஒரு தனி அமைப்பு இல்லை?’ என்ற வினாவை எழுப்பியுள்ளது. ஒரு வழக்குரைஞரின் பார்வையில், இந்த வினா மேலோட்டமாகச் சமமான நீதியை வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், கிறித்தவ ஆலயங்களின் சொத்துரிமை வரலாறு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளின் அடிப்படையில் இது ஆழமான விவாதத்திற்குரியது.
சொத்துகள்: அரசு
வழங்கியதா?
மக்களுடையதா?
இந்து
சமய அறநிலையத்துறை மற்றும் வஃக்பு வாரியம் ஆகியவற்றின் உருவாக்கம் என்பது வரலாற்று ரீதியாக அரசு அல்லது மன்னர்களால் வழங்கப்பட்ட மானியங்கள் மற்றும் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கேற்ப அமைக்கப்பட்டவை. ஆனால், கிறித்தவ ஆலயங்கள் குறிப்பாக, கத்தோலிக்கத் திரு அவை மற்றும் இதர சபைகளின் சொத்துகள் பெரும்பாலும் மிஷனரிகளின் நிதி, அவர்கள் குடும்பங்களின்
தனிப்பட்ட நன்கொடைகள் மற்றும் அந்தந்தப் பகுதி இறைமக்களின் தன்னார்வப் பங்களிப்பால் விலைக்கு வாங்கப்பட்டவை.
இதில்
குறிப்பிடத்தக்க விதிவிலக்கு இருப்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா இந்து கோவில்களும் அறநிலையத்துறையின்கீழ் வருவதில்லை. பெரும்பாலான கோவில்கள் இன்றும் அறக்கட்டளைகள், தனி குடும்பத்தார், தேவஸ்தானம் எனும் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் பராமரிக்கப்படுகின்றன. மேலும், இசுலாமிய எல்லாச் சொத்துகளும் தர்காக்களும் நிறுவனங்களும் வஃக்பு
வாரியத்தின் கீழ் இருப்பதுமில்லை. அவ்வாறே, சில கிறித்தவ ஆலயங்களும் சொத்துகளும் ‘Cantonment’(கண்டோன்மெண்ட்) எனப்படும் இராணுவ முகாம் உள்ள பகுதி, காவலர் குடியிருப்பு, இரயில்வே குடியிருப்பு போன்ற இடங்கள் அரசினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, கிறித்தவ குறிப்பாக, கத்தோலிக்க ஆலயங்கள், நிறுவனங்கள், சொத்துகள் யாவும் திரு அவையின் நிர்வாக முறையான மறைமாவட்டம், திருத்தலம், பங்கு எனும் அமைப்பின் கீழ் அரசுக்கு வரி செலுத்தும் தனிநபர் அல்லது நிர்வாக அமைப்பின் சொத்துகள். இவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வஃக்பு வாரியம் எனும் பொதுச்சொத்துகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட
அமைப்பு முறையின் கீழ் வருவதில்லை. மேலும்,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 26 (Article 26), ஒவ்வொரு
மதப் பிரிவினரும் தங்களுக்குச் சொந்தமான சமய மற்றும் அறப்பணி நிறுவனங்களை நிறுவவும் பராமரிக்கவும், அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைச் சட்டப்படி நிர்வகிக்கவும் உரிமை வழங்குகிறது.
நீதிமன்றங்களின்
முந்தைய
தீர்ப்புகளும் தெளிவும்
கிறித்தவ
நிறுவனங்களின் சொத்துரிமை குறித்துப் பேசும்போது மேஜர் ஆர்ச் பிஷப், அங்கமாலி எர்ணாகுளம் Vs. பி.ஏ. லாலன் தாரகன்
(2016) வழக்கின்
தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் (2016 (Supreme (Ker) 334), ‘கத்தோலிக்கத்
திரு அவை’ இந்தியச் சட்டத்தின் கீழ் ஒரு ‘சட்டப்பூர்வ நபர்’
(Juristic Person) என்பதைக்
கேரள உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மத நிறுவனங்களின் சொத்துரிமை
தொடர்பான வழக்குகளில் இது ஒரு மிக முக்கியமான முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
அதாவது,
திரு அவை என்பது அதன் உறுப்பினர்களிடமிருந்து தனித்து இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் திரு அவை தனது சொத்துகளைத் தனது பெயரிலேயே நேரடியாக நிர்வகிக்க முடியும். ஒரு தனி நபரைப் போலவே, திரு அவை தனது சொந்தப் பெயரிலேயே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், மற்றவர்கள் தொடரும் வழக்குகளை எதிர்கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், திரு அவையின் சொத்துகளை நிர்வகிப்பதில் அந்தந்த மறைமாவட்ட ஆயர்கள் அல்லது பேராயர்களே சட்டப்பூர்வ மேலாளர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
இந்த நிர்வாகம் பொதுஅறக்கட்டளைச் சட்டங்களுக்குப் பதிலாக, திரு அவையின் உள்விதிகளான திரு அவைச் சட்டத்தின்படியே நடைபெறும். இந்த உரிமை திரு அவையின் உள்விவகாரங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றில் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் தலையிடுவதைத் தடுத்து, அதன் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்கிறது.
இந்தத்
தீர்ப்பு, கத்தோலிக்கத் திரு அவை இந்தியச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் அதேவேளையில், தனது தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்காக்க வழிவகை செய்வதாகவும் அமைந்துள்ளது.
மேலும்,
பாஷியோ மால்க் Vs. யூனியன்
ஆஃப் இந்தியா (Bacio Malik vs Union of India) எனும் வழக்கு
குறிப்பிடத்தக்கது. அதாவது, பாஷியோ மால்க் என்பவர் ஒரு கத்தோலிக்க அருள்பணியாளர் (Catholic Priest). இந்த
வழக்கு முக்கியமாக ‘சிறுபான்மை அந்தஸ்து’
மற்றும் ‘நிர்வாக உரிமை’ பற்றியது. குறிப்பாக, ஒரு கத்தோலிக்கத் திரு அவையால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில், அதன் திரு அவைச் சட்டப்படி (Canon Law) நியமனங்கள்
மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க அரசு தடை விதிக்க முடியுமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கு 1980-களில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது தொடர்பான முக்கியத் தீர்ப்பு 1983-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு ‘AIR 1983 Delhi 422’ எனக் குறிப்பிடப்பட்டு 1983 (5) DRJ 105 (Delhi Reported Journal)
பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னாள்களில் வந்த T.M.A. Pai Foundation மற்றும்
P.A. Inamdar போன்ற
மிக முக்கியமான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது. திரு அவைச் சட்டத்தின்படி திரு அவை நிறுவனங்கள் செயல்படுவதைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்த ஆரம்பகால வழக்குகளில் இதுவும் ஒன்று.
இவ்வழக்கில் கத்தோலிக்கத் திரு அவையின் கீழ் உள்ள சொத்துகள் அனைத்தும் ‘திருத்தந்தையின் பிரதிநிதிகளான ஆயர்கள் மற்றும் பங்குத் தந்தையர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் அரசு தலையிட்டு, இவற்றை ஒரு பொதுஅறக்கட்டளையாக (Public Trust) மாற்ற
முடியுமா? என்ற விவாதம் எழுந்தது. கத்தோலிக்கத் திரு அவையின் சொத்துகள் என்பது தனிநபர்களால் அல்லது வெளிநாட்டு மிஷனரிகளால் விலைக்கு வாங்கப்பட்டவை. இவை ‘இனாம்’ ஆகவோ அல்லது அரசிடமிருந்து தானமாகவோ பெறப்பட்டவை அல்ல என்ற கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. இவ்வழக்கில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பிரிவு 26-இன் கீழ், ஒரு மதப் பிரிவினர் தங்களுக்குச் சொந்தமான சொத்துகளைத் தங்களின் மதச் சட்டப்படி (Canon Law) நிர்வகிக்க
முழு உரிமை உண்டு; முறைகேடுகள் நடந்தால் மட்டுமே சிவில் சட்டங்கள் தலையிட முடியுமே தவிர, நிர்வாக அமைப்பை அரசு மாற்றக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும்,
இந்த வழக்கு திரு அவை நிர்வாகத்தின் தன்னாட்சி (Autonomy) உரிமை
குறித்து விவாதிக்கிறது. அதாவது, ஒரு கிறித்தவ நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது, அந்தச் சமூகத்தின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகும் எனத் திரு அவை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம், சிறுபான்மை மத நிறுவனங்கள் தங்களின்
தனித்துவத்தைப் பேணிக் காக்க அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பிரிவு 30-ஐ சுட்டிக்காட்டியது. இறுதியில், ஒரு நிறுவனத்தில்
நிர்வாகக் குளறுபடிகள் இருந்தால், அந்தத் குறிப்பிட்ட பிழையைச் சரிசெய்ய சட்டத்திற்கு அதிகாரம் உண்டு; ஆனால், அந்த நிறுவனத்தின் அடிப்படை நிர்வாக உரிமையை (Right to Administer) அரசோ
அல்லது நீதிமன்றமோ முழுமையாகத் தன்வசப்படுத்த முடியாது; குறிப்பாக, மிஷனரிகளால் தங்களின் சொந்த உழைப்பால் உருவாக்கப்பட்ட சொத்துகளில் அரசு நிர்வாகக் குழுவைத் (Board) திணிப்பது
சட்ட விரோதமானது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வகையில்,
கத்தோலிக்கத் திரு அவையைப் பொறுத்தவரை, அதன் சொத்துகள் ‘திரு அவைச் சட்டத்தின்படி’ (Canon Law) நிர்வகிக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றமும் பல தருணங்களில், சிறுபான்மையினரின்
கல்வி நிறுவனங்கள் மற்றும் சொத்து நிர்வாகத்தில் அரசு தேவையில்லாமல் தலையிடுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, ‘சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்பது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகை அல்ல; அது இந்திய சனநாயகத்தின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு அரண்’
(T.M.A. Pai Foundation Vs. State of
Karnataka, 2002) என
நீதிமன்றங்கள் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன.
இந்து அறநிலையத்துறை
மற்றும்
கிறித்தவ
நிர்வாகம்: ஓர் ஒப்பீடு
முதலாவதாக இருப்பது நிதி ஆதாரம். பெரும்பாலான பழமையான இந்துத் திருக்கோவில்கள் மன்னர்களால் கட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ‘இனாம்’
(கொடை) ஆக வழங்கப்பட்டவை. இவை
பொதுச் சொத்துகளாகக் கருதப்படுவதால் அரசு நிர்வாகம் அவசியமாகிறது. ஆனால், ஆலயங்கள் பெரும்பாலும் சபையினரின் ‘தசம பாகம்’ மற்றும் நன்கொடையால் உருவாக்கப்பட் டவை. இரண்டாவதாக இருப்பது நிர்வாகக் கட்டமைப்பு. கத்தோலிக்கத் திரு அவையில் ‘பங்குப் பேரவை’
(Parish Council) முதல்
‘மறைமாவட்ட மேய்ப்புப்பணிப் பேரவை’
(Diocesan Pastoral Counci) வரை
ஒரு தெளிவான படிநிலை நிர்வாகம் ஏற்கெனவே உள்ளது. ஊழல் அல்லது முறைகேடு நடந்தால், அவற்றைச் சிவில் சட்டத்தின் கீழ் எதிர்கொள்ள ஏற்கெனவே சட்டங்கள் உள்ளன.
நீதிமன்றத்தின்
தற்போதைய
கவலை
என்ன?
சென்னை
உயர்நீதிமன்றம் இந்த வினாவை எழுப்பக் காரணம், தமிழ்நாட்டில் உள்ள சில கிறித்தவச் சபைகளில் நிலவும் உள்நிர்வாகத் தேர்தல் மோதல்கள் மற்றும் நிதி முறைகேடு புகார்களே ஆகும். ஆலயங்களின் பெயரில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் பெரும் வணிக நிறுவனங்களாக உருவெடுக்கும்போது, அங்கு நிர்வாகத் தவறுகள் நடப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.
இருப்பினும், ஒரு தனி வாரியம் (Statutory Board) அமைப்பது
என்பது கிறித்தவச் சமூகத்தின் தன்னாட்சி உரிமையில் (Autonomy) தலையிடுவதாகும்.
இதற்குப் பதிலாக, முறைகேடுகள் நடக்கும் நிறுவனங்களை மட்டும் கண்காணிக்க ஒரு தற்காலிகக் குழுவை நியமிக்கலாமே தவிர, ஒட்டுமொத்தக் கிறித்தவச் சொத்துகளையும் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுப்பது அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளுக்கு எதிராக அமையும்.
மேலும், ‘கிறித்தவ ஆலயச் சொத்துகளைப் பாதுகாக்கத் தனி வாரியம் அமைக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்குப் பின்வரும் காரணங்கள் சட்டரீதியான பதிலாக இருக்கின்றது. அதாவது, பிரிவு 30-இன் கீழ் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை ஆலயங்களுக்கு உண்டு. வாரியம் அமைக்கப்பட்டால் இந்த உரிமை பறிபோகிறது. அரசு அனைத்து மதங்களிலிருந்தும் சமமான தூரத்தைப் பேணவேண்டும். ஆலயச் சொத்துகள் பொது மானியத்தால் வந்தவை அல்ல என்பதால், அவற்றில் அரசு கைவைப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். ஆகவே, ஆலயங்களில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க அந்தந்தச் சபைகள் தங்கள் உள்விதிமுறைகளைப் (By laws) பலப்படுத்தவேண்டும்.
நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு அரசு பதிலளிக்கும்போது, கிறித்தவச் சொத்துகளின் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், அவை இறைமக்களின் சொந்த நிதியால் உருவாக்கப்பட்டவை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
நிர்வாகச்
சீர்திருத்தம் தேவைதான். ஆனால், அது தன்னாட்சி உரிமையைப் பலிகொடுப்பதாக, பறிகொடுப்பதாக ஒருபோதும் இருக்கக்கூடாது.