news-details
சிறுகதை
சந்தித்து விளக்கம் (காவல் அன்னை – 16) - தொடர் கதை

டாக்டர் சார், உட்காரலாமா?” என்று கேட்டபடி டாக்டர் சகாதேவன் அறைக்குள் நுழைந்தாள் யாழினி.

தாராளமாய் உட்காருங்க யாழினி, என்ன விசயமாய் வந்தீங்க?” என்று கேட்டான் சகாதேவன்.

வேற ஒண்ணுமில்லே. உங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்குப் போயிருக்காங்கஎன்று ஆரம்பித்தாள் யாழினி.

ஆமா யாழினி போனாங்க. உங்க வீட்லே போய் உங்களைப் பெண் கேட்டிருக்காங்கஎன்றான் சகாதேவன் சிரித்தபடி.

பெண் கேட்டதில எந்தத் தப்பும் இல்லே! எங்க வீட்லே ரெண்டு நாள்லே பதில் சொல்றதாச் சொன்னாங்களாம்என்றாள் யாழினி.

ஆமாம். அப்படித்தான் உங்க வீட்லே பதில் சொன்னாங்களாம். அதுக்கென்ன யாழினி?” என்றான் சகாதேவன்.

அதைப் பத்தி ஒண்ணுமில்லே. நல்ல பதிலாய் சொல்லணும்னாங்களாம். அதுதான் யோசிக்க வைக்குது டாக்டர்என்றாள் யாழினி.

உங்க சம்மதத்தை அவர்கள் எதிர்பார்த்து அப்படிச் சொல்லியிருக்கலாம்னு நினைக்கிறேன் யாழினி. இதில் ஒன்றும் தப்பில்லேஎன்றான் சகாதேவன்.

இந்த ஆஸ்பிட்டலில் நான் வந்ததிலிருந்து நீங்க என்னை விரும்புறீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால், அதற்கு எனக்கு விருப்பம் இருக்கணும்லேஎன்றாள் யாழினி.

ஏன், நான் உங்களுக்கு ஏற்றவனாய் இல்லையா? அதனால் கல்யாணம் பண்ணமுடியாதுன்னு நினைக்கிறீங்களா? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கஎன்றான் சகாதேவன்.

என்னோட குணமும் உங்களோட குணமும் ஒத்துப்போக வாய்ப்பில்லே டாக்டர்என்றாள் யாழினி.

ஏன் சாதி வேறு வேறுன்னு நினைக்கிறீங்களா?” என்றான் சகாதேவன்.

அதைப்பத்தி கவலை இல்லே டாக்டர். நான் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதனால்தான் இப்படிச் சொன்னேன்என்றாள் யாழினி.

அது யார்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான் சகாதேவன்.

அதை இப்ப சொல்லமுடியாது. ஆனால், விரைவில் தெரியத்தான் போகுது. எனவே, நீங்க வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணுங்கஎன்றாள் யாழினி.

இது உங்க முடிவாய் இருக்கலாம் யாழினி. ஆனால், உங்க வீட்ல வேற முடிவெடுத்தால் என்ன பண்ணுவீங்க?” என்றான் சகாதேவன்.

பெற்றோர் முடிவெடுத்தாலும் நான் சம்மதிக்கணும் டாக்டர். என் சம்மதம் இல்லாமல் எனக்கு எப்படிக் கல்யாணம் நடக்கும்?” என்று சிரித்தாள் யாழினி.

அப்படி நீங்க கண்டுபிடிச்சவர் யார்னு சொல்ல வேண்டியதுதானே? அவர் இங்கே உள்ளவரா?” என்று கேட்டான் சகாதேவன்.

அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம். நான் உங்களைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லைஎன்று சிரித்தாள் யாழினி.

சிரிக்காதீங்க யாழினி. இது சீரியசான விசயம். எப்படியும் நாம் கல்யாணம் பண்றதுதான் நம்ப குடும்பத்துக்கு விருப்பம். உங்களுக்கும் நல்லதாய் இருக்கும்என்றான் எரிச்சலுடன் சகாதேவன்.

பார்ப்போம், பார்ப்போம் டாக்டர்என்று கூறிவிட்டு வெளியேறினாள் டாக்டர் யாழினி.