“ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்!” (திபா 34:8).
என்
ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த அன்பும், அவரது அன்பைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் என் சிறுவயது முதலே எனக்குள் இருந்தன. இதை என் அம்மாவிடம் அடிக்கடி கூறுவேன். ஒருநாள் ‘என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு என் அம்மா, ‘நீ இயேசுவைக் காண
துறவியாகச் சென்றால், எப்போதும் ஆண்டவரின் அருகிலேயே இருக்கலாம்’ என்றார்.
அப்போது
நான் பத்து வயது சிறுமி. துறவி என்றால் என்ன என்று கூட அறியாத வயது. இந்நேரத்தில் எங்கள் கிராமத்திற்கு கார்மல் அருள்தந்தையர்கள் புதிதாக வந்தனர். அப்போது இருந்த பங்குத்தந்தையிடம் நான் துறவியாக வேண்டும் என்ற என் விருப்பத்தைக் கூறினேன். தந்தை அவர்கள், ‘முதலில் நன்கு படி; நான் உன்னை அருள்சகோதரிகளிடம் அழைத்துச் செல்கிறேன்’ என்றார்.
நாள்கள்
கடந்தன. இயேசுவின் மீது எனக்கிருந்த பக்தியும் ஆர்வமும் நாளுக்கு நாள் மிகுந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் மீண்டும் என் பங்குத்தந்தையிடம் சென்று கேட்டேன். அப்போது அவர் என்னை கார்மல் அருள்சகோதரிகளிடம் அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த
ஒரு வயது முதிர்ந்த அருள்சகோதரி ஆலயத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார். அவருடைய செப வாழ்வு என் துறவற வாழ்வுக்கான ஆர்வத்தை மேலும் கூட்டியது. அவர்கள் எனக்குக் குழந்தை இயேசுவின் தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறினார்கள். சிறு வயதிலேயே சிறப்பு அனுமதி பெற்று கார்மல் சபையில் துறவியாகச் சேர்ந்து, நான்கு சுவற்றிற்குள் இருந்து அவர் மேற்கொண்ட கடுந்தவ செப வாழ்க்கையையும், தன்னுடைய செபங்களையெல்லாம் பாவிகளின் மனமாற்றத்திற்காகவும், ஆன்மாக்களை மீட்பதற்காக ஒப்புக்கொடுத்து செபித்ததால் அவர் வேதபோதக நாடுகளின் பாதுகாவலியாக உயர்ந்ததும், நான் விண்ணுலகிற்குச் சென்று மண்ணுலக மக்களுக்கு ரோஜா மலர்மாரி பொழிவேன் என்று கூறிய குழந்தை இயேசுவின் தெரேசாவின் வாழ்க்கை எனக்குள் தீயாகப் பற்றி எரிந்தது. அவர்களைப் போல கார்மல் சபையில் சேரவேண்டும் என்று முடிவு செய்தேன்.
பன்னிரண்டாம்
வகுப்பு முடித்ததும் கார்மல் சபையின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து வாழும் அருள்சகோதரியாக 2008-ஆம் ஆண்டு புனித தெரேசாவின் கார்மல் சபையின் திருவுடை அணிந்து கொண்டேன். அதன் மூலம் என் சபையின் நிறுவுநர் அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கை வரலாறும் என்னைக் கவர்ந்தது.
இன்பத்திலும்-துன்பத்திலும், வறுமையிலும்-வளமையிலும், நோயிலும்-சாவிலும், இருளிலும்-ஒளியிலும்... எந்நிலையிலும் அஞ்சாது இயேசுவில் சரணடைந்து குழந்தைபோல் அவரது தோளில் சாய்ந்து இறுதிவரை கார்மல் சபையில் உறுதியுடன் வாழ என்னைக் கார்மல் சபையில் அர்ப்பணித்த எம் பெற்றோருக்கு நன்றி கூறி, என் அழைப்பின் சிறு அனுபவத்தைப் பகிர்தலில் மிக்க மகிழ்ச்சி!