news-details
சிறப்புக்கட்டுரை
கிறித்தவமும் அரசியலும் (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு – 1)

அண்மைக்காலங்களில் இந்தியத் தேர்தல்கள் அனைத்தும் சனநாயகத்திற்கு வாழ்வா, சாவா? என்ற போராட்டமாகவே இருக்கிறது. மதத் தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பாசிசவாதிகள், சனாதன, இந்துத்துவச் சித்தாந்தங்களுக்குக் கொடி பிடிப்போர், மதவாத அரசியல்வாதிகள், சிறுபான்மையினர், தலித், பழங்குடியினரின் எதிரிகள், பன்மைத்துவத்தை மதிக்காதவர், இந்திய அரசமைப்புச் சாசனத்தைச் சிறுமைப்படுத்தி ஓரங்கட்டத் துடிப்பவர் போன்றோர் ஆட்சிப் பொறுப்பை விடாது பற்றிக்கொள்ள எண்ணுகின்றனர்.

இந்தத் தேசிய நெருக்கடி நேரத்தில் தமிழ்நாட்டிலே அரசியல் விழிப்புணர்வை, பொறுப்புணர்வை, உரிமைகளை உசுப்பிவிடுவது காலத்தின் கட்டாயம் என உணர்கின்றோம். எல்லா இடங்களிலும் அரசமைப்புச் சாசனம் குறித்த விழிப்புணர்வைத் தட்டி எழுப்பி சனநாயகம், சுதந்திரம், நீதி, சகோதரத்துவம், சமத்துவம், பன்மைத்துவம், சமயச் சார்பற்றத் தன்மை போன்றவற்றை மதித்திடும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்த விழைகிறோம். சுதந்திரத்தை, சனநாயத்தை மறுபடியும் தமிழ்நாட்டில் உறுதி செய்வதற்கு நமது அரசியல் கள ஈடுபாடு காலத்திற்கேற்ற நற்செய்திப் பணி என உணர்கிறோம்.

கிறித்தவ ஆன்மிகமும் அரசியல் ஈடுபாடும் இரு வேறு துருவங்களா?

காலங்காலமாக ஆன்மிகத்தையும் அரசியல் ஈடுபாட்டையும் கிறித்தவத்தில் இரு எதிர் துருவங்களாகப் பார்த்து, அரசியல் ஈடுபாட்டில் ஒதுங்கிப் பின்தங்கியுள்ள கிறித்தவர்களின் எதார்த்தத்தையும் கண்டுகொண்டோம். அரசியலை ஓரங்கட்டி இன்னும் வாழ்ந்தால் கிறித்தவராகிய நாமும் ஒரேயடியாக இந்தியாவில் ஓரங்கட்டப்படுவோம். ஆர்.எஸ்.எஸ்.சால் இயக்கப்படும் பா... ஒன்றிய அரசால் கிறித்தவரும் சிறுபான்மையினரும் கடந்த 12 ஆண்டுகளாக மிகவும் ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்பதை அறிவோம். இந்நிலை நீடித்தால் நமது கிறித்தவ இருப்பே இந்தியாவில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்படும் என்பதில் ஐயமில்லை என்பதைக் கீழ்க்காணும் புள்ளி விவரம் காட்டுகின்றது.

இந்தியாவில் கேள்விக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கப்படும் கிறித்தவர்

கடந்த 2024-லில் இருந்து 2025 வரை இந்தியாவில் கிறித்தவருக்கு எதிரான 4,956 வன்முறைத் தாக்குதல்கள் ஒன்றிய அரசின் மறைமுகமான, நேரடியான ஆதரவோடு மதவாதக் கும்பல்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த கிறித்தவ அமைப்பு (United Christian Forum) இவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து ஆவணப்படுத்தி வருகின்றது.

செப வழிபாடுகளைத் தடுப்பது, அதில் ஈடுபடுவோரை வன்முறையால் தாக்குவது, திருவிவிலியங்களை எரிப்பது, கிழிப்பது, கிறித்தவ அடையாளங்களாகிய சுரூபங்களை உடைப்பது, நற்கருணைப் பேழையை அவமதிப்பது, கோவில்களை இடிப்பது, கல்லறைகளைத் தகர்ப்பது, கல்வி-நலவாழ்வு-சமூக நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இடையூறு தருவது, மறைப்பணியாளர்களை வன்முறை வசைபாடலால், செயல்களால் தாக்குவது, மலம்-மாட்டுச் சாணியைச் சாப்பிட வைப்பது, மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வைப்பது, கிறித்தவ வீடுகளை இடிப்பது, எரிப்பது, மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டு அநியாயமாகக் கைது செய்து, பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைப்பது, ‘தாய் மதத்திற்குத் திரும்பி வாருங்கள் (கர் வாப்சி) என்று பழங்குடியினக் கிறித்தவர்களைக் கத்தி-துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு மாற்றுவது... என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கந்தமால் (2008), மணிப்பூரில் (2023-2026) நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களே இதற்குச் சாட்சி.

அக்கறையற்று வாழ்ந்தால் அடிச்சுவடு இல்லாமல் அடக்கப்படுவோம்

இவை எல்லாம் எதேச்சையாக நடக்கின்றன என்று நம்பினால் நம்மைப்போல முட்டாள்கள் இருக்க முடியாதுஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், சனாதனக் குழுக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் இவைஇவற்றை எல்லாம் கண்டும் காணாமல், அக்கறையற்று வாழ்ந்தோம் என்றால் அதன் கொடூர விளைவுகளை இன்னும் அதிகமாக அனுபவிப்போம். இந்தியக் குடிமக்கள் என்ற அடிப்படை உரிமையே பறிபோய்விடும்.

மௌனம் அநீதிக்குத் துணை போவதன் அடையாளமாகும். அக்கறையற்று ஒதுங்கிநான், ‘எனது குடும்பம், ‘எனது சபை, ‘எனது பங்கு, ‘எனது மறைமாவட்டம்என்று சுயநலத்தோடு குறுகிய பார்வையோடு வாழ்ந்தால் நடந்திடும் சமூகப் பாவத்திற்கு நாமும் உடந்தையாகி விடுவோம். துன்புறும் இலாசரைக் கண்டும் ஒதுங்கி வாழ்ந்த செல்வந்தர் பெறும் தண்டனை (லூக் 16:19-31), கிடைத்த விளைச்சலை எல்லாம் தான் மட்டும் அனுபவிக்க முயன்ற அறிவிலியான செல்வந்தர் பெறுகின்ற தீர்ப்பையும் (லூக் 12:13-21) அக்கறையற்று ஒதுங்கி சுய நலத்தோடு வாழும் கிறித்தவர் பெறுவர் என்பதில் இயேசு தெளிவாக இருக்கின்றார்.

அரசியல் ஈடுபாடு என்றால் என்ன?

அரசியல் ஈடுபாடு என்றால், வெறும் அரசியல் கட்சிகளின் ஈடுபாடு என்ற குறுகிய பார்வையிலிருந்து விடுபட்டு, அரசியலை விசாலமான பார்வையில் பார்த்திடல் வேண்டும். அரசியலுக்குப் பல வரையறைகள் கொடுக்கப்பட்டாலும், அரசியல் என்பதைச்சக்தி (politics is power) எனப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. ஒருவரோ, ஒரு குழுவோ தனது வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்கும் தீர்மானிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் பெற்றுள்ள ஆற்றலே சக்தி எனப் பரவலாக இன்று பொருள் கொள்ளப்படுகின்றது.

இச்சக்தி ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கடவுளின் கொடையாகும். இந்தச் சக்தியைப் பிறர் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளும்போது, நாம் சக்தி பறிக்கப்பட்டவர்களாக மாற்றப்படுகின்றோம். இச்சூழலில் பிறர் நமது வாழ்வைத் தீர்மானிக்க, செயல்படுத்த நாம் சக்தி அற்றவர்களா கின்றோம். அரசியலை நாம் சக்தியாகப் பார்ப்பதால், சக்தி பறிக்கப்பட்ட மக்களைச் சக்தி படைத்தவராக மாற்றுவதுதான் உண்மையான அரசியலாகும். கிறித்தவர்களாகிய நம்மையும் பிற குடிமக்களையும் சக்திப்படுத்துவதுதான் அரசியல் ஈடுபாட்டின் அரிச்சுவடியாகும்.

அரசியல் சக்திப்படுத்திய இயேசு

இயேசு தம்முடைய சமுதாயத்திலே சக்தி பறிக்கப்பட்ட ஏழைகள், நோயாளிகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், பெண்கள், வரி தண்டுவோர், வேசிகள், சமாரியர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் போன்றோரின் மனித மாண்பைத் தூக்கிப்பிடித்து, அவர்களையும் சக்திப் படைத்தவராக்கும் இறையாட்சிப் பணியில் முழுமூச்சுடன் செயல்பட்டார். எல்லாரும் அரசியல் சக்தி பெற்று, தங்களது வாழ்வைத் தேர்ந்தெடுத்து தீர்மானித்து, செயல்படுத்தும் கடவுளின் பிள்ளைகளாக இறையாட்சி சமுதாயத்திலே வாழவேண்டும் எனப் பாடுபட்டார்.

இன்று அரசியல் ஈடுபாட்டின் வழியாகத் தெய்வத்திற்கும் தேசத்திற்கும் உழைக்க ஒவ்வொரு கிறித்தவரும் அழைக்கப்படுகின்றோம். அரசியல் ஈடுபாட்டின் வழியாக இந்திய அரசமைப்புச் சாசனத்தில் மிளிரும் இறையாட்சி விழுமியங்களான நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், அன்பு, தோழமை, பகிர்தல் போன்றவற்றைப் பாதுகாத்திடுவதும் வளர்த்திடுவதும் கிறித்தவரின் கடமையாகும்; இறையாட்சிப் பணியும் ஆகும். அனைவரையும் அரசியல் சக்திப்படுத்துவது இறையாட்சிப் பணியின் இன்றியமையாதக் கூறாகும்.

கிறித்தவ அரசியல் ஈடுபாடு இன்றைய வரலாற்றுக் கட்டாயம்

அரசியல் ஈடுபாட்டை இறையாட்சிப் பணியிலிருந்து அந்நியப்படுத்திப் பிரித்துப் பார்த்து, இன்னும் கிறித்தவர் விலகி இருப்பதும், அக்கறையின்றி இருப்பதும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கிறித்தவ ஆன்மிகத்திற்கு உகந்ததல்ல. இந்தியச் சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ கிறித்தவர்கள் தியாகத்தோடு செயல்பட்டிருப்பதை நாம் மறக்க முடியாது, மறக்கக் கூடாது.

இன்றும் திரு அவையிலே ஆங்காங்கே சில பொதுநிலையினரும் அருள்பணியாளர்களும் துறவறத்தாரும் அரசியல் ஈடுபாட்டோடு செயல்பட்டாலும், ஒட்டுமொத்தமாகக் கிறித்தவச் சமுதாயம் எல்லாரையும் சக்தியுடையவர்களாக்கும் அரசியல் ஈடுபாட்டில் களம் இறங்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்துவிட்டதுகிறித்தவருக்கு அரசியல் ஈடுபாடு தேவை என்பதை வலியுறுத்திய மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார்: “கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு என்பது பொதுநலனுக்காக நாம் எடுத்திடும் ஓர் அறநெறிக் கடமையாகும்.” தனிப்பட்ட நம்பிக்கை எனும் தளத்தில் இருந்து, சமுதாய மாற்றம் எனும் தளத்திற்கு நாம் நகரவேண்டும். நீதியை நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு தந்திடவும் சமுதாயத்தைப் பிரிவினைப்படுத்திடும் (Polarization) சக்திகளிடமிருந்து மீட்டிடவும்அரசியல் அன்பு  (Political Love) வேண்டும். அரசியல் ஈடுபாடு என்பது அதிகாரத்திற்கான போட்டி அல்ல; மாறாக அரசியல் அன்பிற்கான உன்னத அழைப்பு.”

சக்திப்படுத்தும் அரசியல் விழிப்புணர்வு கிறித்தவரிடையே போர்க்கால நடவடிக்கையிலே முடுக்கி விடப்படவேண்டும். அரசியல் சக்தியைப் பெற்றுச் செயல்படும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும், கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகளாகவும், நகரமன்ற உறுப்பினர்களாகவும், வார்டு கவுன்சிலராகவும், ..எஸ்., .பி.எஸ்., .எஃப்.எஸ். போன்ற ஆட்சித் துறையாளராகவும் கிறித்தவர்கள் களமிறங்கவேண்டும். ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினரோடு சேர்ந்து அரசியல் ஈடுபாட்டை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

வெறுமனே சிறுபான்மையினர் நலம் காப்பவராக மட்டுமல்லாது இறையாட்சி, இந்திய அரசமைப்புச் சாசன விழுமியங்களை இன்றைய சமுதாயத்திலே வளர்த்தெடுப்பவராக, பாதுகாப்பவராக, செயல்படுத்துபவராகக் கிறித்தவ அரசியல் ஈடுபாடு மலரவேண்டும். வெறும் செபம், மெழுகுதிரி ஊர்வலம், உபவாசம், வெற்று அறிக்கைகள் என்று நின்றுவிடாமல், அரசியல் களம் காணும் கிறித்தவராக எழுச்சி பெறுவோம்.

இறையாட்சி மலர்ந்திட, இந்திய அரசமைப்புச் சாசனம் காத்திடும் அரசியல் ஈடுபாடு கொண்டதாகக் கிறித்தவச் சமுதாயம் மலரவில்லை என்றால், இந்திய வரலாற்றிலிருந்து நாம் துடைத்தெறியப்படும் நேரம் தூரத்தில் இல்லை! இந்த அபாயத்தில் இருந்து நம்மையும், நம்  நாட்டையும் காப்பாற்றிட அரசியல் ஈடுபாட்டுக் கிறித்தவராகச் செயல்படுவோம்.