உலகில் பெருகிவரும் போர்களும் மோதல்களும் மனித வாழ்விற்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் விடப்படும் மிகப்பெரிய சவால்கள் என்று திருத்தந்தை லியோ எச்சரித்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற ‘வாழ்விற்கான திருத்தந்தை அகாதமி’ (Pontifical Academy for Life) கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை, “போர்க்காலங்களில் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கட்டமைப்புகள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். அவ்வாறே, “ஆயுத உற்பத்திக்குக் கோடிக்கணக்கான நிதியைச் செலவிடும் இவ்வுலகில், மக்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்க நேரத்தையும் நிபுணத்துவத்தையும் ஒதுக்குவது முன் எப்போதையும் விட இன்று அவசியமாகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் சமமான சுகாதாரம் கிடைக்காத சூழலைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒருவரின் வருமானம் மற்றும் வாழும் இடத்தைப் பொறுத்து சுகாதாரம் தீர்மானிக்கப்படுவது ஒரு ‘நயவஞ்சகமான நிலை’ என்று தெரிவித்துள்ளார்.