திரு அவையின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான ‘ஆயர் நியமனத்திற்கான துறையின்’ (Dicastery for Bishops) உறுப்பினராக அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவை (Sr. Simona Brambilla) திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது. 61 வயதான இத்தாலிய நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி சிமோனா, ஏற்கெனவே துறவற வாழ்வுக்கான வத்திக்கான் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தற்போது இவர், ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் நியமிக்கும் பணிகளைக் கவனிக்கும் உயர்மட்டக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆயர்களைத் தேர்வு செய்யும் வத்திக்கான் குழுவில் இடம்பெறும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகிறார். ஏற்கெனவே அருள்சகோதரி இரஃபேலா பெட்ரினி மற்றும் மரியா லியா செர்வினோ ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.