கோடம்பாக்கம் பாத்திமா ஆலயத்தில் பாத்திமா மாதா திருவிழாச் சிறப்பாக நடக்கும். தேர் கிளம்பி வந்து சேர்வதற்கு இரவு 12 மணியாகிவிடும். அருளம்மாவும் அமலியும் தேரோடு நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் வந்து கையைப் பிடித்தாள்.
“என்னம்மா, நீங்க யாரு?” என்று கேட்டாள் அருளம்மா.
“என்னைத் தெரியலையா? இராத்திரிங்கிறதாலே தெரியலை போல” என்றாள் அந்தம்மா.
“சரி, சொல்லுங்க”
என்றாள் அமலி.
“நான்தான் சந்தனமேரியோட அம்மா. சொந்த ஊர் தூத்துக்குடி. உங்க தெருதான்... மறந்திட்டீங்கலே” என்றாள்
அந்தம்மா.
“ஆமாங்க, வயசாயிருச்சிலே... அதுதான் தெரியலே” என்றாள் அருளம்மா.
“என்னோட பையன் இங்கேதான் குடியிருக்கான். அவனும் மருமகளும் சாப்ட்வேர்லே வேலை செய்றாங்க. வீடு யுனைடெட் காலனி முதல் தெரு” என்றாள் அந்தப் பெண்மணி.
“அப்படிங்களா, எப்ப இங்கே வந்தீங்க?” என்று கேட்டாள் அமலி.
“நாங்க வந்து ரெண்டு நாளாயிருச்சு. பெசன்ட் நகர் கோவில், தோமையார் மலை, சைதாப்பேட்டை தோமையார் ஒளிந்த இடம், அருவி இதெல்லாம் பார்த்தோம்” என்றாள்
அந்தப் பெண்.
“ஏம்மா, நம்ம சாந்தோம் தோமையார் சர்ச், பிராட்வே அந்தோணியார் சர்ச் பார்த்ததையும் சொல்லு” என்று நினைவுபடுத்தினாள் மகள் சந்தனமேரி.
“அதைத்தான் நீ சொல்லிட்டியே” என்றாள் தாய்.
“நாளைக்கு இருந்தால் எங்க வீட்டுக்குக் கட்டாயம் வாங்க. இராகவேந்திரா மண்டபத்திற்கு அடுத்த தெருவில் முதல் வீடுதான் அடையாளம். மறக்காமல் வாங்க, ரொம்ப சந்தோசம்”
என்றாள் அருளம்மா.
“இந்தப் பங்கிலே நம்ம தூத்துக்குடிக்காரங்க நிறைய இருக்காங்க; பலரைப் பார்த்து சந்தோசப்பட்டோம்” என்றாள்
அந்தப் பெண்மணி.
மறுநாள்
காலையில் சொன்னபடியே சந்தனமேரி அப்பா, அம்மாவுடன் சேவியர் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
“கீழே கிளினிக் இருக்காங்க?” என்றாள் சந்தனமேரி.
“ஆமாங்க, அண்ணன் பேஷண்ட்டை இங்கே பார்ப்பார். அதன்பிறகு ஆஸ்பத்திரிக்குப் போவார்” என்றாள் அமலி.
“பரவாயில்லை, நல்ல பெரிய வீடுதான். தூத்துக்குடியிலிருந்து இங்கே வந்து செட்டில் ஆயிட்டீங்க. எல்லாம் வேலையை வெச்சுத்தானே?” என்றாள் வந்தவள்.
“என்ன செய்றது? தூத்துக்குடியில் பனிமய மாதாதான் எங்களுக்குக் காவல் அன்னை. இங்கே பாத்திமா மாதாதான் காவல் அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள். தினமும் சர்ச்சிலே மாதாவைச் சந்திச்சிட்டுத்தான் டாக்டர் வேலையைத் தொடங்குவார்” என்றாள்
அருளம்மா.
“ரொம்ப நல்லதுங்க. நாங்க இன்னைக்கி இராத்திரி கிளம்புறோம். கல்யாணம் பத்தி பிறகு விரிவாய் பேசலாம்” என்று வந்தவர்கள் போய்விட்டார்கள்.
அருளம்மாவும்
அமலியும் என்ன செய்வதென்று முழித்தார்கள்.
(தொடரும்)