news-details
சிறப்புக்கட்டுரை
2026 தேர்தல் முதல் சுற்று

தை பிறந்தால் வழி பிறக்கும்என்பது முதுமொழி. தமிழ்நாட்டுத் தேசிய சனநாயகக் கூட்டணிக்கு (என்.டி..) இப்பழமொழி பொருந்திப்போகிறது. 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் மெல்ல அனல் பறக்கத் தொடங்கியது. பிரதமர் மோடி முதல் சுற்று ஆட்டத்தை மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி களத்தில்  தி.மு.. Vs தமிழ்நாடு வெற்றிக்கழகம் என்ற மாய விவரிப்பை, தி.மு.. Vs .தி.மு.. என்ற கடும் போட்டியாக உருமாற்றினார். தமிழ்நாட்டில் புதிய பகுதி நேர அரசியல் தலைவர்களுக்கும் வாய்ச்சொல்  வீரர்களுக்கும் மோடி கள்ள ஆட்டம் காட்டினார். வலதுசாரிகளுடன் இடதுசாரிகளும், பாதி வலது - இடதுசாரிகளும் சார்ந்த  சந்தர்ப்பவாதக் கூட்டணியாக என்.டி.. கூட்டணி தமிழ்நாட்டில் உருபெற்றது.

அமித்ஷா, பியூஸ் கோயல் நடத்திய திரை மறைவு ஆட்டத்தில் திரை விலகியது. பிரதமர் கூட்ட மேடையில் எடப்பாடியுடன் அன்புமணி, டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன், .சி. சண்முகம், திருமாறன், ஜான்பாண்டியன், செல்லமுத்து, பூவை ஜெகன்மூர்த்திஎன்.ஆர். தனபாலன் ஆகிய கட்சித் தலைவர்கள் மேடை ஏறினர். இவர்கள் அனைவரும் தொகுதிக்கு நூறு முதல் ஆயிரம் வாக்கு கொண்ட சாதிக்கட்சித் தலைவர்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இக்கட்சிகளை, ‘ஒரு நபர் கட்சிகள்எனக் காட்டமாக விமர்சித்தார். கடந்தகால என்.டி.. கூட்டணி அப்படியே இருக்கிறது.

2024 - நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.. கூட்டணியில், சிவகங்கை தொகுதியில், தாமரை சின்னத்தில் போட்டியிட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மேடையில் இல்லை. மயிலாப்பூர்  இந்துப் பாரம்பரிய நிரந்தர நிதி நிறுவன மோசடியில் தற்போது தேவநாதன் சிறையில் இருக்கிறார். 6000 மக்களிடம் 800 கோடி நிதி மோசடி செய்தார் என்பது வழக்கு. அவரைக் கைது செய்ய பலர் கூட்டம் கூட்டமாக நின்று யூ-டியூப்பில் முதல்வர் ஸ்டாலினுக்குக் கெஞ்சி வேண்டுகோள் வைத்த வீடியோக்கள் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

என்.டி.. கூட்டணி ஊழல், வாரிசு அரசியல், சனாதனப் பாதுகாப்பு. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் கலாச்சாரம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, இந்துமதப் பாதுகாப்பு எனத் தேர்தல்  பிரச்சாரத்தைக் கட்டமைக்கிறது.

என்.டி.. கூட்டணி அமைய டி.டி.வி. தினகரனுக்கு இரட்டை இலை சின்ன  இலஞ்ச வழக்கு, அன்புமணிக்கு மருத்துவக்கல்லூரி அனுமதி தந்த இலஞ்ச வழக்கு... இவை அடுத்தடுத்த மாதங்களில் டெல்லி நீதிமன்றத்தில் வாய்தாவாக நிற்கின்றன. அன்புமணி மீதுள்ள இலஞ்ச வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்புத் தரவேண்டுமென அவரது தந்தை இராமதாஸ் அவர்களே தனது கட்சித் தீர்மானமாகத் தருவது செய்தியல்ல; கசக்கும் உண்மை!

பியூஸ் கோயல், அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகிய வாரிசுத் தலைவர்களை மேடையில் வைத்துக்கொண்டே, ‘வாரிசு அரசியல்எனப் பேசுவதை எதில் சேர்ப்பதுதேர்தலுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். ஊடகங்கள்  பேசியதை, ஆளுநர் பேசிய அரசியலை மோடியை வைத்துக்கொண்டு என்.டி..வினர் பேசுவது தேர்தலுக்கான எங்கள் செயல்திட்டம் என்பதாக வெளியாகியது. மதத்தை மட்டுமே வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மதவாத  பா... மற்றும் பிரதமர், தமிழ்நாட்டுக் களத்தில் இதுவாக்கு அரசியல்என முழங்கியது அபத்தமானது.

தமிழ்நாடு பாரதிய சனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன்ஜெய் ஸ்ரீராம்என மேடை ஏறி இந்தியில் முழுக்கமிட்டது அவரது ஆர்.எஸ்.எஸ். பிடிப்பின் வெளிப்பாடாகும். இதைவிட நகைப்பிற்குரிய செய்தி ஒன்று, எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தைப் பார்த்து தன்னை ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு, ‘செய்வீர்களா?’ எனக் கேட்டதுதான். பிரதமர் மேனாள் .தி.மு.. அமைச்சர் தங்கமணியை, முதுகில் தட்டிக் கொடுத்து பலத்த சிரிப்புடன் பேசியது அடுத்த .தி.மு.. ஆட்டத்திற்கு ஆள் தயார் என்பதாக இருந்தது.

அமித்ஷா, பா... - .தி.மு.. கூட்டணி அறிவிப்பில் மூன்று நேர்காணல்களில் பியூஸ் கோயல் சென்னை வருகை, பத்திரிகையாளர் சந்திப்புகளில் பிரதமர் மோடியின் மதுராந்தக உரையில், தமிழ்நாட்டில் என்.டி.. ஆட்சி என உறுதிபடக் கூறுகிறார்கள். அவர்கள் பீகார், ஆந்திரா, பாண்டிச்சேரி  போல, கூட்டணி என்.டி.. ஆட்சிக்குத் தயாராகிவிட்டார்கள். பா...விடம் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்ற உண்மையை .தி.மு..வினர் உணரவே இல்லை. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களோ, ‘நான்தான் அடுத்த  முதலமைச்சர், .தி.மு.. ஆட்சிஎன்று தொடர்ந்து  கூறிவருகிறார். தொலைக்காட்சி விவாத மேடைகளில் .தி.மு..வினர் சிரிப்பு நடிகர் செந்திலின் திரைப்பட நகைச்சுவை காட்சிபோல, “ஒரு பழம் இங்கே உள்ளது! மற்றொன்று எங்கே என்று கேட்டால், அதுதானே இதுஎனச் சொல்வதாக, பா...வும், .தி.மு..வும் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். இவர்களை நினைத்து மக்கள் தங்களுக்குள் சிரித்து மகிழ்கிறார்கள்.

பிரதமர் மோடிஇரட்டை இஞ்ஜின் சர்க்கார்என மதுராந்தகத்தில் பேசுகிறார். உத்தரப்பிரதேசத்தில், இரட்டை இஞ்ஜின் ஆட்சியில், யோகி ஆதித்தியநாத் தலைமையில்கோவிட்பெருந்தொற்று நேரத்தில் இறந்தவர்களின் பிணத்தைப் புதைக்க இயலாமல், கங்கை  நதியில் வீசிய அவலம் அரங்கேறியது. பொய்கள் மூலமே என்.டி.. கூட்டணி ஏதாவது செய்து தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடும் எனக் கனவு காண்கிறார்கள்.

கடந்த காலங்களில் தேர்தலுக்கு முன்னான சட்டிஸ்கர், தில்லி, தெலுங்கானா போன்ற ஆளும் அரசின் மாநிலங்களின் மையப்புள்ளிகளை அமைச்சர்களைக் கையெடுக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆட்டங்களும் ஆரம்பமாகும். இது தவிர வாக்காளர் திருத்தமும், ஓட்டுப் பதிவு இயந்திரத்  தில்லுமுல்லுவும் பா... ஆட்டத்தின் உள்ளடக்கங்கள். தேர்தல் கால மத, இன, சாதிக் கலவரங்கள் அதன் அடையாளங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் சமத்துவம், சமயச் சார்பின்மை, சமூக நீதி போற்றுபவர்கள், மத நல்லிணக்கம் பேணுபவர்கள், மதவாதக் காவி கும்பலையும், அவர்களின் அடிமைகளையும், அடித்து விரட்டுவதே தமிழ்நாட்டு மக்களின் பெரும் பொறுப்பு என உணர்ந்தவர்கள், அதன் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை  நம்புவோம்.