வத்திக்கான் உச்ச நீதிமன்றமான ‘உரோமை ரோட்டா’ (Roman Rota) அமைப்பின் புதிய நீதித்துறை ஆண்டைத் தொடக்கி வைத்து நீதிபதிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை, “உண்மையை எவ்விதச் சமரசமும் இன்றிப் பாதுகாக்கவேண்டும்; அதேசமயம் அதில் பிடிவாதம் இருக்கக்கூடாது. எதையும் புறக்கணிக்காமல் அன்பைச் செயல்படுத்தவேண்டும். நீதியும் அன்பும் முரண்பட்டவை அல்ல; மாறாக, அவை இறைவனின் மறைப் பொருளில் ஒன்றிணைந்தவை. மேய்ப்புப்பணி ஆர்வத்தினால் வரும் தவறான இரக்கம் வழக்கின் உண்மையை மறைத்துவிடக்கூடாது” என்று எச்சரித்த திருத்தந்தை லியோ, “தனிநபர்கள் மீதான மனிதாபிமானம் இல்லாத, உணர்ச்சியற்ற தீர்ப்புகளும் நீதியாகாது; குறிப்பாக, திருமண முறிவு வழக்குகளில் போதிய ஆதாரங்களின்றி முடிவெடுப்பது சட்டத்தின் மாண்பைச் சிதைக்கும்” என்றும் சுட்டிக்காட்டினார்.