news-details
ஆன்மிகம்
புனித பிரான்சிஸ் 800-வது விண்ணகப் பிறப்பு (பிரான்சிஸ்கன் யூபிலி ஆண்டு: திருத்தந்தை லியோ அறிவிப்பு)

அமைதியின் தூதுவர், இயற்கையின் பாதுகாவலர், கத்தோலிக்க விசுவாசத்தின் வீரர், ஏழ்மையின் காதலர், மறு கிறிஸ்து எனப் போற்றப்படும் அசிசி நகர் புனித பிரான்சிசின் 800-ஆம் ஆண்டு (1226-2026) இறப்பினை நினைவுகூரும் விதத்தில் சிறப்பு யூபிலி ஆண்டைத் திருத்தந்தை 14-ஆம் லியோ அறிவித்துள்ளார். 2026, ஜனவரி 10 அன்று தொடங்கிய இந்த யூபிலியானது 2027 ஜனவரி வரை சிறப்பிக்கப்படும்.

இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டினைப் பயன்படுத்தி இறைமக்கள் திரு அவை அருளும் பரிபூரணப் பலன் என்கின்ற சிறப்பு ஞானச் சலுகையைப் பெற்றுகொள்ள திருத்தந்தை அழைப்புவிடுக்கிறார். பிரான்சிஸ்கன் யூபிலி ஆண்டானது திரு அவைக்குக் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய கொடையாகும். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி உள்ளார்ந்த ஆன்மிக மறுமலர்ச்சிக்கும், கிறித்தவ வாழ்வைப் புதுப்பிக்கவும் முன்வருவோம்.

யூபிலி ஆண்டின் சிறப்பு ஆசிர்: பரிபூரணப் பலன்

பிரான்சிஸ்கன் துறவிகளால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் அல்லது புனித அசிசி பிரான்சிஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, உண்மையான மனத் துயருடன் நல்லதோர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றுப் பரிபூரணப் பலன் என்கின்ற இந்தச் சிறப்பு ஞானச் சலுகையைப் பெறமுடியும். மேலும் முதியோர், நோயுற்றோர் மற்றும் பல்வேறு காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கின்ற இடத்திலே உரிய இறைவேண்டல் மற்றும் இயன்ற ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு இப்பலனைப் பெற்றுக்கொள்ளலாம்.

அமைதியின் தூதுவர் புனித பிரான்சிஸ்

திருத்தந்தை லியோ, யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மடலில், இவ்வுலகம் இன்று பல்வேறு குழப்பங்களையும் போர்களையும் சந்தித்து வருகின்றது; நாடுகள் மற்றும்  சமூகங்களுக்கு இடையே பல்வேறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிவோம். புனித பிரான்சிசின் வாழ்வு நமது சமூக ஒற்றுமைக்கு ஆற்றல் மிகு தூண்டுதலாக உள்ளது என்பதை நினைவில் கொண்டு உலகில் அமைதியான சூழ்நிலை அமைந்திட பாடுபடுவோம். புனித பிரான்சிசின் ஏழ்மை, அமைதி, சகோதரத்துவம், இயற்கையைப் பராமரித்தல், திரு அவைக்குக் கீழ்ப்படிதல் ஆகிய நற்செய்திப் பண்புகளை ஏற்று அன்பான சமூகம் அமைய இணைந்து வருவோம். புனித பிரான்சிஸ் இறைவனோடும் இயற்கையோடும் தன்னோடு வாழ்ந்த மக்களோடும் அமைதியான நட்புறவைக் கொண்டிருந்தார். ஆகவே, அவரது தூய வாழ்வினைப் பின்பற்றி நாமும் இறைவனோடும் இயற்கையோடும் உலக மக்கள் அனைவரோடும் நட்புறவைப் பேணுவோம். உலகிற்கு அமைதியை, நிம்மதியை நிறைவாக வழங்குவோம்.

புனித அசிசி பிரான்சிசின் ஆன்மிகத்தைப் பின்பற்றும் அவரது எளிய சகோதர-சகோதரிகள் மற்றும் இறைமக்கள் இந்த ஆண்டின் சிறப்பு ஆசிரைப் பயன்படுத்தி, புனித வாழ்வின் முன்மாதிரியாகவும், அமைதிக்கான தொடர் சாட்சிகளாகவும் வாழ்ந்திட திருத்தந்தை லியோ வலியுறுத்துகின்றார்.

புனித பிரான்சிஸ் இறந்து 800 ஆண்டுகள் கடந்தும் அமைதிக்கான அவரின் நெறி சார்ந்த வாழ்வு திரு அவைக்கும் சமூகத்திற்கும் இன்றும் ஆக்கப்பூர்வமாக உள்ளது. அமைதி என்பது மனித முயற்சியால் கிடைப்பதல்ல; மாறாக, இறைவனின் கொடை! அது நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டும். பிரான்சிசின் அமைதிக்கான கனவு என்பது மனித உறவுகளைக் கடந்து படைப்பனைத்தோடும் நாம் மேற்கொள்ளும் தோழமை, உறவு கொண்டாட்டமாகும். புனித பிரான்சிசின் ஆழமான, ஆக்கப்பூர்வமான ஆன்மிகம் இறைவனை நோக்கி இறைமக்களை அழைத்துச் செல்லட்டும். பிளவுபட்ட இவ்வுலகில் நற்செய்திப்பணி வாழ்வுக்கும், கிறிஸ்துவின் அமைதிக்கும், உலக ஒற்றுமைக்கும் உயிருள்ள சாட்சிகளாக நாம் திகழ புனித பிரான்சிசின் வாழ்வியல் நெறி உதவட்டும்.

பரிபூரணப் பலன் - திருத்தந்தையின் சிறப்பு ஞானச் சலுகை

பரிபூரணப் பலன் என்றால், உத்தரிக்கிற நிலை பாவங்கள் மன்னிக்கப்படுவது. ஒப்புரவு அருளடையாளத்தால் நரகத்தின் தண்டனையிலிருந்து தப்பினாலும், உத்தரிக்கிற நிலைக்கு உட்படுவோம். ஆகவே, அந்நிலையிலிருந்தும் நமக்கு விடுதலை தருவதுதான் பரிபூரணப் பலன். இது உத்தரிக்கிற ஆன்மாக்களுக்குப் பெரும் உதவியாகும்.

பரிபூரணப் பலனை எப்படிப் பெறலாம்?

திரு அவைச் சட்டம் (992) மற்றும் கத்தோலிக்கத் திரு அவை மறைக்கல்வி நூல் (1471) வழிகாட்டுதலின்படி கத்தோலிக்கர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லதோர் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டு, முழு திருப்பலி கண்டு, திவ்ய நற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துகளுக்காக மன்றாடவேண்டும். இவை அனைத்தும் ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏறக்குறைய 20 நாள்களுக்கும் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளவேண்டும்.

பரிபூரணப் பலன் பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு ஆலயங்களைச் சந்தித்தல், ஆலயத்தில் வழிபடும்போது நம்பிக்கை அறிக்கை மற்றும் ஒருமுறைவிண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையேஎன்ற செபத்தை மன்றாடி ஒரு பரிபூரணப் பலன் பெற்றுக்கொள்ளுவது.

திருத்தந்தையின் கருத்துகளுக்காக மன்றாடும் போது, ஒருவிண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையேமற்றும் ஓர்அருள் நிறைந்த மரியே வாழ்கஎன்ற செபங்களைச் செபிக்கவும்.

பரிபூரணப் பலன் தனக்காகவும், இறந்துபோன இறைநம்பிக்கையாளர்களுக்காகவும் மன்றாடலாம். ஆனால், வாழும் மற்றொரு நபருக்காகச் செபிக்க முடியாது.

ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவர் பரிபூரணப் பலனைப் பெறமுடியும்.

மக்களின் பார்வைக்கு புனித அசிசி பிரான்சிசின் உடல்

புனித அசிசி பிரான்சிசின் 800-வது ஆண்டு விண்ணகப் பிறப்பை நினைவுகூரும் வேளையில் அவரது புனித உடல் பொதுமக்கள் பார்வைக்காக, பிப்ரவரி 22 முதல் மார்ச் 22, 2026 வரை இத்தாலியில் அசிசி பிரான்சிசின் திருத்தலப் பேராலயத்தில் வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் புனித அசிசி பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்கள்

குருசுகுப்பம், பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டம்.

வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மறைமாவட்டம்.

அருளகம், வி.கே.புரம், பாளை மறைமாவட்டம்.

ஒக்கூர் புதூர், சிவகங்கை மறைமாவட்டம்.

கணபதி, கோவை மறைமாவட்டம்.

அசிசி நகர், பொன்னிமாந்துறை, திண்டுக்கல் மறைமாவட்டம்.

மார்த்தால், பூதப்பாண்டி, கோட்டாறு மறைமாவட்டம்.

பாடலூர், கும்பகோணம் மறைமாவட்டம்.

குண்டா பிரிட்ஜ், உதகை மறைமாவட்டம்.

மாத்தூர், திருச்சி மறைமாவட்டம்.

இறைவா! அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்

- புனித அசிசி பிரான்சிஸ் (1182-1226)