news-details
சிறப்புக்கட்டுரை
போராட்டம் (வலையும் வாழ்வும் – 38)

1999, டிசம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தங்நாத் சதுர்வேதி என்பவர் மதுரா இரயில்வே நிலையத்தில் இரண்டு டிக்கெட் எடுத்திருந்தார். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 35. தங்நாத் சதுர்வேதி டிக்கெட் கவுண்டரில் ரூ. 100- கொடுத்திருந்தார். ரூ. 30 பாக்கி பெறவேண்டிய நிலையில், கவுண்டரில் இருந்தவர் ரூ. 10 மட்டுமே திரும்பக் கொடுத்திருக்கின்றார். தனக்குச் சேரவேண்டிய பாக்கி ரூபாய் இருபதைத் திரும்பக் கேட்டு தங்நாத் சதுர்வேதி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்தார். ஏறக்குறைய 20 ரூபாய்க்காக 22 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. நூறுமுறை விசாரணை நடந்திருக்கின்றது.

இருபது ரூபாய்க்காக எதற்கு இவ்வளவு போராட்டம்?’ என்று பலரும் கேட்டுள்ளனர். கடைசியாக 2022-ஆம் ஆண்டு மதுரா மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தங்நாத் சதுர்வேதிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் இந்திய இரயில்வே நிறுவனம் தங்நாத் சதுர்வேதிக்கு ரூபாய் இருபதைக் கொடுக்கவேண்டும் என்றும், 1999-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரை ஓராண்டிற்கு 12ரூ என்று ரூபாய் 15,000 இழப்பீடாக 30 நாள்களுக்குள் கொடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்என்பதற்கிணங்க, இருபது ரூபாய்க்காக 22 ஆண்டுகளாகப் போராட வேண்டியுள்ளதை இந்நிகழ்வு சமூகத்தின் நிலையைக் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கின்றது. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை; போராட்டமே வாழ்க்கைக்கு வேரூட்டமாகிறது.

சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியானது, இந்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை (GOI) மூலம் உருவாக்கப்பட்ட, மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு முன்னெடுப்பு (citizen-centric initiative) ஆகும். பெருகிவரும் இணையக் குற்றங்களையும், மொபைல் திருட்டுகளையும் சமாளிப்பதற்காக இச்செயலியை 2025, சனவரி 17 அன்று ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. தகவல் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “இதுவரை 14 மில்லியன் பயனர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். தினமும் 2000 சைபர் குற்றங்கள் இந்தச் செயலி மூலம் கண்டறியப்படுகின்றனஎன்று தெரிவித்திருந்தார்.

சஞ்சார் சாத்திஎன்னும் இந்தச் செயலியைப் புதிய விதிமுறையின்படி ஆப்பிள், கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் 90 நாள்களுக்குள் இந்தியாவில் பயன்படுத்தத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் கைப்பேசிகளிலும் இந்தச் செயலி முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது.

இது தன் மக்களை அச்சுறுத்தும் மற்றும் உளவு பார்க்கும் கருவி என்றும், இது ஒவ்வொரு குடிமக்களின் அசைவு, தொடர்பு மற்றும் முடிவுகள் அனைத்தையும் உன்னிப்பாக உளவு பார்ப்பதற்கான ஒரு வழிமுறை; மேலும், மக்களுடைய தொலைப்பேசிகளில் எவ்வகை ஆவணங்களையும் திணிக்கவும் (implant files) இச்செயலி பயன்படுத்தப்படலாம். இது ஒரு புதிய பெஹாசஸ் (Pegasus) என்று  மொபைல் நிறுவனங்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

பெரும்பான்மையான இணையப் பயனர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிரா தித்ய சிந்தியாசஞ்சார் சாத்திசெயலியை முன்கூட் டியே நிறுவவேண்டும் என்று மொபைல் போன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைப் போராடித்தான் அடையவேண்டும் என்பதால்தான் என்னவோ, தினமும் உலகம் முழுவதும் பல போராட்டங்கள் பற்றிய செய்திகளே அதிக அளவில் காணக்கிடக்கின்றன. வாழ்க்கையே போராட்டம்தானே? போராடித்தான் பார்ப்போமே!