news-details
சிறப்புக்கட்டுரை
தேசிய கல்விக் கொள்கை – நம் பார்வை

மத்திய அரசு ‘தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. இக்கொள்கை இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாது, அரசியல் சாசன அடிப்படைக்கும் குறிப்பாக, இந்நாட்டின் சமயச்சார்பின்மை, பன்முகத்தன்மை மற்றும் அதிகாரப் பகிர்விற்கும் விடப்பட்ட சவாலாக உள்ளது.

வேதக்கல்வியும் குருகுலமும்!

இந்திய நாடு பன்முகத்தன்மை கொண்டது. பலவித கலாச்சாரங்கள், இனங்கள், மொழிகள், மதங்கள், வரலாற்றுப் பின்னணிகள், மரபுகள் இந்நாட்டையும் மண்ணையும் செழுமைப்படுத்துகின்றன. இப்பன்முகத்தன்மையை இக்கல்விக் கொள்கை மறுப்பதாக உள்ளது. வேதக்கல்வியையும், குருகுலக் கல்வி முறையையும் இலட்சியக் கல்வியாக முன்னிறுத்துகிறது. பள்ளிகளை அருகிலுள்ள ஆசிரமங்களுடன் தொடர்புபடுத்த முயல்கிறது.

அடிப்படையில், இத்தகைய கல்விமுறை சாதி அடிப்படையிலான வர்ணாசிரமத் தர்மத்தின் வழிபட்டது. மனனக் கல்வியே இதன் ஆன்மா. அறிவு வளர்ச்சியிலும் ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அக்கறை கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது. எனவேதான் நமது தமிழ் நாடு அரசு, இந்திய அரசியல் சாசனம் கூறியபடி அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில், நமது மாநிலத்திற்கெனத் தனியாகக் கல்விக் கொள்கை வகுக்க முயல்கிறது. இது மனமுவந்து வரவேற்கத்தக்க நடவடிக்கை.

சமஸ்கிருதமயமாக்கல்

தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கும், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஸ்கிருதம் சிறப்புப் பங்காற்றியுள்ளது என்று இக்கொள்கை குறிப்பிடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது. சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி. இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்து தோன்றியவை அல்ல; நம் தமிழே திராவிட மொழிகளின் தாய். கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்ற திராவிட மொழிகள் தமிழிலிருந்தே தோன்றியவை.

சமஸ்கிருத எதிர்ப்பின் ஊடாகவே தமிழ் வளர்ந்துள்ளது. கால்டுவெல், மறைமலையடிகள், உ.வே.சா., க. அப்பாத்துரை, தேவநேயப் பாவாணர் போன்றோரின் ஆய்வுகள் இதற்குச் சான்றாகும். தமிழுக்குச் சமஸ்கிருதத்துடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. இவ்வுண்மைகளை இக்கல்விக் கொள்கை இருட்டடிப்பு செய்கிறது. கலாச்சார ஒற்றுமை வேண்டும், அதற்குச் சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்கிறது. இது இந்தியத் தேசியத்திற்கு எதிரானது.

நாட்டுப்பற்று என்பது வேறு; தேசியவாதம் (nationalism) என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, கலாச்சார அடிப்படையிலான தேசியவாதம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்புண்டு. ஹிட்லரின் ஜெர்மானிய ஆரிய தேசியவாதம் பல கோடி மக்களைக் கொன்று குவித்தது. பன்முகப்பட்ட இந்தியாவில் ஒற்றைத் தேசியவாதத்திற்கு இடமில்லை. அத்தகைய தேசிய இறுமாப்புவாதத்தை (Hindu nationalism) இக்கல்விக் கொள்கையில் காணமுடிகிறது. இது இந்நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லவே உதவும். இதனை இந்தியர்கள் குறிப்பாக, தமிழர்கள் ஏற்க இயலாது.

யோகா கல்வியை நிபந்தனையாக்குதல்

இக்கல்விக்கொள்கை யோகாவைக் கட்டாயப்படுத்துகிறது. யோகா பாடத்தைப் பள்ளி அங்கீகாரத்தின் நிபந்தனையாக்குகிறது. அதன் முன்னுரையில் பதஞ்சலி முனிவர் போற்றப்படுகின்றார். யோகாவைத் தன்னார்வமாகவும், ஒரு பயிற்சியாகவும் மேற்கொள்வதை நமது பள்ளிகள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்டாயப் பாடமாய் அங்கீகார நிபந்தனையாக (Condition of Recognition) ஆக்குவதை நாம் ஏற்க முடியாது.

மாணவர்களைத் தரம் பிரிக்கும் கல்வி

இக்கல்விக்கொள்கை, பத்தாம் வகுப்பில் மாணவர்களை இரண்டாகத் தரம் பிரிக்க முயல்கிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் இவற்றில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை உயர்கல்விக்குரியவர்கள் எனவும், பின்தங்கும் மாணவர்களைத் தொழில் கல்விக்குரியவர்கள் எனவும் வேறுபடுத்தி, இருபிரிவினருக்கும் இருவேறு தேர்வுகளை நடத்த முற்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில், வசதி வாய்ப்புள்ள மாணவர்கள் உயர்கல்விக்கும், வசதி மறுக்கப்பட்டவர்கள் தொழில்கல்விக்கும் தள்ளப்படுவர். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்சமூக அமைப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பின்தள்ளப்படுவர். சமூக அடிப்படையில், பலவிதமான கல்விக்கூடங்கள் செயல்படும் சூழலில், இத்தகைய தரம் பிரித்தல் கிராமப்புற ஏழை மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும். இது மீண்டும் வர்ணாசிரமக் குலக்கல்விக்கும், குலத்தொழிலுக்கும் வழிகோலும். சமூக நீதியில் அக்கறை கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது.

கிராமப் பள்ளிகளுக்கு மூடுவிழா

தற்போது நடைமுறையிலுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் - 2009, குழந்தைகளின் குடியிருப்பிலிருந்து மூன்று கி.மீ. தூரத்திற்குள் தொடக்கப்பள்ளி அமைக்க முற்படுகிறது. ஆனால் இப்புதியக் கல்விக்கொள்கை இதனை மறுக்கிறது. மாறாக, மாணவர்களின் எண்ணிக்கை அல்லது பள்ளியின் உள்கட்டமைப்பு குறைவுபடும் பட்சத்தில், அப்பள்ளிகளை மூடவும், அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கவும் வேண்டுமென்கிறது. இது கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். பள்ளிகளை மூடத் தடையாக உள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தைத் திருத்தவேண்டுமெனவும் இக்கொள்கை பரிந்துரைக்கிறது. அத்துடன் பன்னாட்டு நிறுவனங்களின் கல்விக்கூடங்களை நாடு முழுவதும் நிறுவிட இக்கல்விக்கொள்கை கதவைத் திறப்பதோடு, பல்லாயிரம் ஏழைப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தவே இக்கொள்கை முனைகிறது.

ஆசிரியர்களை எடுபிடிகளாக்கும் கல்வி

இக்கொள்கையின்படி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திறனறியும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிடில், அவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கப்படும். எனவே, இறுதிவரை அவர்களின் பணியில் நிச்சயமற்றத்தன்மை ஏற்படும். பள்ளிகளின் முதல்வர்கள் பணிமூப்பு அடிப்படையிலன்றி, திறமை மற்றும் தனிப்பயிற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். எனவே, தலைமையாசிரியரின் புதிய பணியிடங்கள் வழக்கமான முறையில் நிரப்பப்படாது. மாணவர்கள் முறையாகத் தேர்ச்சி பெறாவிடில், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வசதி படைத்த பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் இந்நாட்டில் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏழைகள் படிக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை வெகுவாகப் பாதிக்கும். மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட கல்வித் தீர்ப்பாயங்கள் (Central Educational Tribunals) நிறுவப்படும். இவை பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பலவற்றில் தீர்ப்பு வழங்கும். ஒட்டுமொத்தமாக, ஆசிரியர்களின் சுதந்திரச் சிந்தனை, கற்பித்தல் திறன் இவற்றை இச்சூழல் வெகுவாகப் பாதிக்கும். கல்விக்குத் தொடர்பற்ற இந்தியக் கல்விப்பணி (Indian Education Service) என்கிற அதிகார வர்க்கத்தின் கீழ் ஆசிரியர்கள் பணிசெய்ய நேரிடும். சுருக்கமாக, அறிவைத் தேட வேண்டிய ஆசிரியர்கள், நிர்வகிக்கப்படும் பணியாளர்களாய் மாறுவர்.

அதிகாரத்தை மையப்படுத்தும் கல்விமுறை

1975 வரை கல்வி மாநிலப் பட்டியலில் மட்டுமே இருந்தது. நெருக்கடி நிலையின்போது, இந்திராகாந்தி அம்மையார் அதனைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார். அதன்பின் மெல்ல மெல்ல அதில் ஒன்றிய அரசு அதிகக் கட்டுப்பாடு செலுத்தத் தொடங்கியது. இருப்பினும், பாடத்திட்டம் முழுவதும் இதுவரை மாநில அதிகாரத்திற்கே உட்பட்டுள்ளது. இப்புதிய கொள்கை, மாநிலத்தின் இந்த அதிகாரத்தைப் பறிக்கின்றது. பள்ளிகளிலே கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் இவற்றிற்குத் தேசியப் பாடத்திட்டத்தைக் கொண்டுவர முயல்கிறது. அந்தந்த மாநிலங்களின் தனித்தன்மைக்கேற்ப பாடத்திட்டங்கள் தற்போது அமைகின்றன. இப்பன்முகத்தன்மையை உடைத்து, ஒருபடித்தான கல்வியை இந்தியா முழுவதும் கொண்டுவர இக்கொள்கை முனைகிறது. இவை தவிர கல்வி நிர்வாகம் முழுவதையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர இக்கொள்கை முயல்கிறது.

அதிலும் கூடுதலாக, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நாடு முழுவதும் ஒருபடித்தாக நடத்த இது பரிந்துரைக்கிறது. அனைத்து ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் தேசிய அளவில் கட்டுப்படுத்த முயல்கிறது. தேசியக் கல்வி ஆணையம் என்ற பெயரிலும், இந்தியக் கல்விப் பணி என்ற பெயரிலும் அதிமேதாவிகள் சிலர் மாநில அதிகாரங்களின் அனைத்து மட்டங்களிலும் குறுக்கீடு செய்ய வழிவகுக்கிறது. இவ்வாறு மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் இக்கல்விக்கொள்கை பறிக்க முயல்கிறது. இதனால் அரசியல் சாசன அடிப்படையிலான மாநிலங்களின் அதிகாரப் பரவலை இக்கொள்கை கேலிப் பொருளாக்குகிறது.

சிறுபான்மை அடையாளங்களைச் சிதைக்கும் கல்விக்கொள்கை

இக்கல்விக்கொள்கையில் சிறுபான்மையினரைப் பற்றியோ, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றியோ, அவர்களின் அரசியல் சாசன உரிமைகள் பற்றியோ எந்த விவாதமும் கொள்கையும் இல்லை. மாணவர்களின் கல்வி உதவித்தொகை பற்றிக் குறிப்பிடும்போதுகூட, ‘பொருளாதார அடிப்படையில் பிற்பட்டவர்கள் என்றே குறிப்பிடுகிறது. இவ்வாறு சாதி அடிப்படையிலான சமூகத்தின் பிற்பட்டத்தன்மையைக் கருத்தில் கொள்ள இக்கொள்கை மறுக்கிறது.

மேலும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அரசியல் சாசனப் பாதுகாப்பை இது பொருளற்றதாக்குகிறது. பிரமதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் மீது இட ஒதுக்கீட்டைத் திணிக்க முயல்கிறது. பள்ளி மேலாண்மை குழுக்களை (School management Committee) ஏற்படுத்தி, சிறுபான்மைப் பள்ளிகளில் அரசியல் குறுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் அவர்களின் கலாச்சாரம் மற்றும் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களாகும். அவற்றில் யோகா, சமஸ்கிருதம், வேதக்கல்வி போன்றவற்றைப் புகுத்தி, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அடையாளங்களை இக்கல்விக்கொள்கை சிதைக்க முயல்கிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக உள்ளது.