பாசிசம் என்றால் என்ன?
அண்மையில்
வெளிவந்த ‘பரா சக்தி’ எனும் திரைப்படத்தைப் பார்த்தேன். தனிமனித, சமூக உரிமைகள், மானுட மாண்புகளுக்கு எதிரான எந்தத் திணிப்பையும் பாசிசத்தையும் எதிர்க்கும் உந்துணர்வைத் தந்தது அந்தத் திரைப்படம்.
இரண்டாம்
உலகப்போர் காலகட்டத்தில் எழுந்த அரசியல் சித்தாந்தமே பாசிசம். ஒரு குறிப்பிட்ட இனம், சமூகம் அல்லது சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சமூகத்தில் உயர்ந்தவர்கள்; மற்ற எல்லாரும் அவர்களுக்குக் கீழானவர்கள் எனும் பிரித்தாளும் பார்வை கொண்டது பாசிசம். சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிற எதேச்சதிகாரச் சிந்தனையுடன் செயல்படுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமையும் இலாபமும் கிடைக்கிறது. இந்தப் பாசிசம் தம் குடிமக்களில் ஒரு பகுதியினரை இரண்டாந்தர மக்களாக வகைப்படுத்தி, அவர்களைக் கொடுமைப்படுத்துகிறது. இதுவே ஜெர்மனியில் ஹிட்லரும் (நாசிசம் எனும் பெயரில்) இத்தாலியில் முசோலினியும் கடைப்பிடித்தது. இந்தப் பாசிச உணர்வு சமயத்தின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் படர்ந்து
வரும்
பாசிசம்
கிரேக்கப்
பாசிசத் திணிப்பை எதிர்த்து மக்கபேயர் தலைமையில் யூதர்கள் போராடியதை திருவிவிலியத்தில் படிக்கும் எவரும் ஈராயிரம் ஆண்டுகளாகச் சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும் கொடுமைகளையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க இயலாது. ஆரியச் சாதியத் திணிப்பை உள்வாங்கிய ஒடுக்கப்பட்டோரிடம் ஊறிப் பாயும் சாதிய வெறி, திமிர், ஆணவக்கொலை எனும் இழிவுகள் நம்மை விலங்குகளைவிடக் கீழானவர்களாக மாற்றுகின்றன.
கடந்த
16 ஆண்டுகளாக அரசியல் இலாபத்திற்காகப் பாசிசச் செயல்பாடுகள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. 1935-இல் ஹிட்லர் ஜெர்மனியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தார். அதனடிப்படையில் 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார். அதேபோல் இந்தியாவிலும் குடியுரிமைத் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வாக்காளர் சிறப்புத் திருத்தச்சட்டமும் குடியுரிமையைப் பறிப்பதாகவே நடக்கிறது. சிறுபான்மையினர் இந்தியாவில் இனி இரண்டாந்தரக் குடிமக்களே!
வரலாறு ஒழிப்பு
ஒன்றிய
அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி தென்னிந்திய வரலாறு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக்
கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றோரின் 18-ஆம் நூற்றாண்டில் நடந்த நான்கு ஆங்கிலேய மைசூர் போர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய செல்வாக்கு மிக்க விஜயநகரப் பேரரசு பற்றிய விரிவான குறிப்புகள் வெட்டப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் சாணார் புரட்சி, தென்னிந்திய எதிர்ப்பு இயக்கங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. தக்காண சுல்தான்களின் ஆங்கில எதிர்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
சீரழிக்கப்படும்
பன்முகத்தன்மை
‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ எனப்
பன்முகத்தன்மையைப் பறைசாற்றினார் பாரதியார். ஆனால், ‘காசி தமிழ்ச்சங்கம் எதற்கானது?’ என்ற கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதில் கூறுகிறார்: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்.’
பல்சமயங்கள்,
மொழிகள், இனங்கள், இலக்கியங்கள், பண்பாடுகள் எனும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் அழகு, பெருமை! ஆனால், அதற்குப் பதில் இப்போது ஒரே நாடு, ஒரே இந்தி மொழி, ஒரே சமயம், ஒரே ஆரியப் பண்பாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கருத்துத் திணிக்கப்படுகிறது.
2024-2026 ஆண்டுகளில்
தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தரவேண்டிய தொகை 3,548.22 கோடி மோடி அரசால் தரப்படவில்லை. சமஸ்கிருதத்திற்காக 2024 முதல் 2025 வரை ஒதுக்கிய நிதி 2,532.59 கோடி; ஆனால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 147.50 கோடி. இதில் தமிழுக்கு ஆண்டுக்கு 15 கோடி மட்டுமே! சமஸ்கிருதத்தைவிட 22 மடங்கு குறைவாக ஒதுக்கிவிட்டு, காசி தமிழ்ச் சங்கம் பற்றி மோடி துதி பாடிகள் ‘டமாரம்’ அடிக்கின்றனர். கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு கைவிட்டதோடு, பன்னாட்டு ஆய்வு நிலையங்கள் கீழடியில் கிடைத்த பொருள்களைப் பற்றித் தந்த அறிக்கையைக் கூட வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு.
கலவரமே ஆயுதம்
தோழர்
அந்தோனியோ கிராம்ஷி கூறியதுபோல, மக்கள் எதிரிகள் (பாசிசவாதிகள்) பாசிசத்தைத் திணிக்கக் கலாச்சார மேலாதிக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். தவறான தகவல்கள் திரித்துக் கூறப்படுவதால், போலி புள்ளி விவரங்கள், வெற்று வெறுப்புப் பேச்சுகள் மூலம் மக்கள் மூளையைச் சலவை செய்கின்றனர். மக்களைத் தூண்டும் கவர்ச்சிப் பேச்சுகளும் பொய்களும் அவர்களது கலை. இந்தியாவில் சமய, சாதிச் சண்டைகளைத் தூண்டுவதும், கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பரப்புவதும் அவர்களே.
இடையறாத
பதற்றத்தில் மக்களை வைத்து, கலவரங்களைத் தூண்டி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடுகின்றனர். ‘அர்பன் நக்சல்’,
‘தேச விரோதிகள்’,
‘அந்நியக் கைக்கூலிகள்’ என
முத்திரை குத்தி, பொய்வழக்குகளைப்
புனைகின்றனர். குடிமக்களைக் கண்காணிக்க அலைப்பேசி கருவியில் ‘சஞ்சார் சாத்தி’ எனும் உளவு பார்க்கும் கருவியைப் பொருத்தக் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆரியப்
பண்பாடே இந்தியப் பண்பாடு, வேதமே அனைத்துத் தத்துவங்களின் உறைவிடம் என கருத்துத் திணிப்புச்
செய்கின்றனர் பாசிஸ்டுகள். சிந்துச் சமவெளி பண்பாட்டை, சரஸ்வதி பண்பாடாகப் பார்க்கின்றனர். இசுலாமியரைக் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் சீண்டி, கூட்டுக் கொலை செய்தனர். 2025 - கிறிஸ்து பிறப்பு விழாவின் போது கிறித்தவர்களையும் சீண்டியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட கிறித்தவ மறைப்பணியாளர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக ‘மாவோயிஸ்டுகள்’ எனும்
பெயரில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். பட்டியலினத்தவர் குறிப்பாக, பட்டியலினத்துப் பெண்கள் பட்டப்பகலில் பொதுவெளியில் மானபங்கப்படுத்தப்படுகின்றனர்.
எதிர்க்கேள்வி கேட்போரின் வீடுகள் புல்டோசர் கொண்டு தகர்க்கும் போக்கு நியாயப்படுத்தப்படுகிறது.
இப்போது
தமிழ்நாட்டிலும் பாசிசம் தன் சீரழிவுகளைச் செய்யும் துணிவைப் பெற்றுள்ளது. நாம் விழிப்பாய் இருப்போம். ஏனெனில், பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கவேண்டும் எனும் தூண்டுதலை நமது திருவிவிலியத்தின் மக்கபேயர் நூல் நமக்கு ஊட்டுகிறது.