news-details
சிறப்புக்கட்டுரை
நோயுற்றோருக்கான இரக்கம்! உலகின் புதிய வல்லமை! (பிப்ரவரி 11: நோயுற்றோர் உலக நாள்)

108 – இதன் ஆழமான பொருள்

2005-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா முழுவதும் ‘108’ என்ற எண் பரவலாக அறியப்பட்டு வருகிறது. இது அவசர மருத்துவச் சேவையுடன் தொடர்புபடுத்தப்பட்டதால் முக்கியத்துவம் பெற்றது. 2005, ஆகஸ்டு மாதம் கிறித்தவரான ஆந்திரப் பிரதேச மேனாள் முதலமைச்சர் திரு. ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி அவர்களின் ஆட்சிக் காலத்தில், அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI) இணைந்து ‘108 ஆம்புலன்ஸ்சேவையைத் தொடங்கியது. அதன் பின்னர், இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர மருத்துவ எண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் இச்சேவை 2008-இல் மதுரையில் அன்றைய முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதில் முக்கியமான படியாக அமைந்தது.

நடைமுறை முக்கியத்துவத்தைத் தாண்டி ‘108’ என்ற எண்ணுக்கு ஆன்மிக அர்த்தமும் உண்டு. பாரம்பரியமாக இதுதேவதூதர் எண்எனக் கருதப்படுகிறது. இது இறைவழிகாட்டுதல், ஆன்மிக வளர்ச்சி மற்றும் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அவசர எண் நாம் ஒவ்வொருவரும் நவீனகால நல்ல சமாரியர்களாக மாறி, துன்புறுவோருக்கு உதவ அழைக்கிறது. இது இயேசுவின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது: “நோயாளிகளை நலமாக்குங்கள்;… நீங்கள் இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள் (மத்தேயு 10:8). இது பாகுபாடின்றி கருணையுடன் உயிர்களைக் காக்கும் அவசரச் சேவைகளின் பணியோடு முழுமையாக ஒத்திசைக்கிறது.

நோயுற்றோர் உலக நாள்

துன்புறுவோரை ஆதரித்து மதிப்பளிக்கும் வகையில் திரு அவை ஒவ்வோர் ஆண்டும் நோயுற்றோர் நாளைக் கொண்டாடுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் நோயுற்றோருக்கு உறுதி அளிக்கிறது:

நீங்கள் தனியாகவோ, கைவிடப்பட்டவர்களாகவோ, பயனற்றவர்களாகவோ இல்லை. நீங்கள் கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள்; நீங்கள் அவரது உயிருள்ள, வெளிப்படையான உருவம்.”

வரலாறும் முக்கியத்துவமும்

1992-ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் நோயுற்றோர் உலக நாளை நிறுவினார். அக்காலத்தில் அவரே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது திருத்தூதுக் கடிதத்தில், ‘துன்பம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படும்போது மீட்புப் பொருள் பெறுகிறதுஎன்று போதித்தார்.

இந்த நாள் பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்படுகிறது. இது லூர்து அன்னைப் பெருவிழாவாகும்; அங்கு புனித பெர்னதெத் சூபிரூ அவர்களுடன் தொடர்புடைய குணமளிப்பு மற்றும் நம்பிக்கையின் தலம் உள்ளது. முதல் நோயுற்றோர் உலக நாள் 1993-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 2013, பிப்ரவரி 11 அன்று திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்கள் உடல்நலக் குறைவால் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.

34-வது நோயுற்றோர் உலக நாள் (2026)

2026, பிப்ரவரி 11 அன்று 34-வது நோயுற்றோர் உலக நாள் சிலிக்லாயோ நகரில் கொண்டாடப்படும். இது இலத்தீன் அமெரிக்காவுடன் திரு அவையின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

நல்ல சமாரியரின் எடுத்துக்காட்டால் ஈர்க்கப்பட்டு, கிறித்தவர்கள் துன்புறுவோரின் அருகில் நிற்க, பராமரிக்க, சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள். திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்த ஆண்டின் கருப்பொருளாகசமாரியரின் இரக்கம்: மற்றவரின் வலியைத் தாங்கி அன்பு செய்வதுஎன்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். இது உண்மையான அன்பு, கனிவு, நெருக்கம் மற்றும் இரக்கமிக்கப் பராமரிப்பில் வெளிப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறது.

‘Dilexi Te’ஏழைகளின் மீதான அன்பு பற்றிய போதனை

ஏழைகளின் மீதான அன்பு பற்றிய போதனை(Dilexi Te) என்ற சுற்றறிக்கையின் 49-52 பதிவுகளில், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் நோயுற்றோர் மற்றும் துன்புறுவோர் பற்றிய நான்கு ஆழமான கருத்துகளை முன்வைக்கிறார்:

1. துன்புறும் கிறிஸ்துவின் உடலைத் தொடுதல்

நோயுற்றோரைப் பராமரிப்பதில் கிறித்தவ இரக்கம் வெளிப்படுகிறது. அவர்களைச் சந்தித்து, ஆறுதல் அளித்து, சேவை செய்வது வெறும் தர்மம் அல்ல; அது நம்பிக்கையின் செயல். துன்புறுவோரைப் பராமரிக்கும்போது நாம் கிறிஸ்துவையே தொடுகிறோம்.

2. ‘என் சகோதர சகோதரிகளே, நன்மை செய்யுங்கள்

புனித இறை யோவான் மற்றும் புனித கமில்லஸ் டி லெல்லிஸ் ஆகியோர் தங்கள் வாழ்வை நோயுற்றோருக்காக அர்ப்பணித்தனர். புனித கமில்லஸ், ஒரு தாய் தனது ஒரே குழந்தையைப் பேணும் மென்மையுடன் நோயுற்றோருக்குச் சேவை செய்ய அழைத்தார்.

3. இரக்கத்தின் தொடுதல்

பல மகளிர் சபைகள் மருத்துவப் பணியில் முக்கியப் பங்கு வகித்தன. அவர்கள் நோயுற்ற ஏழைகளுக்கு ஆறுதல், சுகாதாரம், மருந்து மற்றும் மனித மாண்பை வழங்கினர். புனித லூயிஸ் டி மரில்லாக் இந்த இரக்கமிக்கப் பராமரிப்பைமுதல் மருந்துஎன்று அழைத்தார்.

4. இயேசுவின் மிகவும் மறைந்த முகம்

இன்றும் கத்தோலிக்க மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் மற்றும் பணித்தளங்கள் கிறிஸ்துவின் குணமளிக்கும் பணியைத் தொடர்கின்றன. இயேசு கூறினார்: “நான் நோயுற்றிருந்தேன்; நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள் (மத் 25:36). திரு அவை துன்புறுவோரின் அருகில் மண்டியிடும்போது, தனது உண்மையான அழைப்பை நிறைவேற்றுகிறது என்று திருத்தந்தை லியோ நினைவூட்டுகிறார்.

உலக நோயுற்றோர் நாள் நம்மை ஆழமான இரக்கம், சேவை மற்றும் ஒற்றுமைக்கு அழைக்கிறது. நோயுற்றோரின் மாண்பை இறைவனின் பிள்ளைகளாக மதித்து, அவர்களைப் பிரார்த்தனை, பராமரிப்பு மற்றும் கனிவுடன் அணுக அழைக்கிறது. இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார்: “காணாமல் போனதை நான் தேடுவேன்; வழிதவறியதைத் திரும்ப அழைத்து வருவேன்; காயமடைந்ததைக் கட்டுப்போடுவேன்; பலவீனமானதை வலுப்படுத்துவேன் (எசே 34:15-16). கிறிஸ்துவையும் நல்ல சமாரியரையும்போல் நாமும் குணமளிப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் கருவிகளாக மாறுவோமாக!