news-details
தலையங்கம்
மாணவச் சமூகத்தின் பேரவலம்: தொடரும் தற்கொலைகளும் நமது தார்மிகப் பொறுப்பும்!

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற (குறள்: 61)

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு செல்வங்கள், பதவிகள் என ஒருவன் அடையும் மற்ற எல்லாப் பேறுகளையும்விட, நல்லொழுக்கம் கொண்ட, அறிவில் சிறந்த குழந்தைகளைப் பெறுவதே இல்வாழ்க்கையின் தலையாயப் பேறு என்கிறது. ஆகவே, ஒரு சமூகத்தின் ஆகச் சிறந்த செல்வமாகத் திகழ்வது அந்தச் சமூகத்தின் வருங்காலத் தூண்களாகிய இளைய தலைமுறையினரே!

ஆனால், அண்மைக்காலமாக தமிழ்நாடு முதல் டெல்லிவரை கல்விக்கூடங்களில் அரங்கேறி வரும் மாணவர் தற்கொலைச் சம்பவங்கள், அச்சமூகத்தின் ஆன்மாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. பசுமையான புல்வெளியில் படரவேண்டிய கொடிகள், பூத்துக்குலுங்கும் முன்பே கருகி உதிர்வதுபோல, நமது கல்வி நிலையங்கள் இன்று மாணவர்களின் மன அழுத்தக் கூடாரங்களாக உருமாறி வருவது வேதனைக்குரிய முரணாகும்.

ஊடகங்களில் கவனம்பெறும் அன்றாடச் செய்திகளும், அண்மைக்காலப் புள்ளி விவரங்களும் நம்மைப் பேரதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. 2025, 2026-ஆம் ஆண்டுகளில் பதிவான நிகழ்வுகள், கல்வி என்பது அறிவுத்தேடல் என்பதையும் கடந்து, ஓர் உயிர்வாழும் போராட்டமாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன.

டெல்லியில் புனித கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர்களின் மனரீதியான தொல்லை தாங்காது தற்கொலை செய்துகொண்டதும், ஜெய்ப்பூரில் நான்காம் வகுப்பு பிஞ்சு பாலகன் சக மாணவர்களின் ஏளனத்தாலும், ஊழியர்களின் அலட்சியத்தாலும் உயிரை மாய்த்துக் கொண்டதும் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கிய மழலைகளின் அவலத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

இத்தகைய துயரங்களில் தமிழ்நாட்டின் தளிர்கள் தந்த தழும்புகள் மிகவே கொடியவை. கடந்த மாதம், 2026 சனவரியில் சென்னையில் 15-வது மாடியிலிருந்து குதித்த பொறியியல் மாணவர் முதல், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12-ஆம் வகுப்பு மாணவர் (சனவரி 6, 2025) மற்றும் திருச்சி - துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி விடுதியில் (ஆகஸ்டு, 2025) தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவர் வரை, இவர்களின் மரணம் எழுப்பும் ஒரே கேள்வி: ‘மதிப்பெண் பட்டியல்கள் மனித உயிரை விட மதிப்புயர்ந்தவையா?’ என்பதுதான்.

இவ்வரிசையில், கல்வி அறிவில் சிறந்த நமது அண்டை மாநிலமான கேரளமும் இதற்கு விதிவிலக்கல்ல. கொச்சியில் 26-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன், சக மாணவர்களின்ராகிங்கொடுமைக்குப் பலியானது சமூக விலகல் எவ்வளவு கொடியது என்பதை உணர்த்துகிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் ஒரே ஆண்டில் 13,892 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிடுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உச்சம். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அவை தனிப்பட்ட காரணங்கள் அல்ல; மாறாக, கட்டமைக்கப்பட்ட சமூகக் காரணங்களே என்பது புலப்படுகிறது.

குறிப்பாக, ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் வெறும் மூன்று மணி நேரத் தேர்வில் அடக்கிப் பார்க்கும் நமது கல்வி முறை, அவர்களைத் தோல்வியைக் கண்டு அஞ்சும் கோழைகளாக்குகிறது. அவ்வாறே, ‘என் பிள்ளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ மட்டுமே ஆகவேண்டும்என்ற பெற்றோரின் பிடிவாதம் மாணவர்களின் கனவுகளை நசுக்குகிறது.

இத்தகைய வெளிப்புற அழுத்தத்தில்மனச் சிதைவுகொள்ளும் நம் குழந்தைகளை நெறிப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் அவர்களை ஆற்றல்படுத்துவதும் பெற்றோர் மற்றும் பள்ளிகளைக் கடந்து நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஆயினும், இதில் முன்னிற்பவர்கள் பள்ளிகளில் பணிபுரியும் மனநல ஆலோசகர்களே! ஆனால், இன்று அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது கவலைக்குரியது. மீட்டா செங்குப்தா எனும் கல்வியாளர் கூறுவது போல, 800 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர் என்பது ஒருபெருந்தொற்றுகாலத்தின் அவல நிலையே!

அதிகமான வீட்டுப்பாடம், படிப்பின் மீதான வெறுப்பு, குடும்ப எதிர்பார்ப்பு, ஆசிரியர்களின் கண்டிப்பு, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் பாலியல் தொந்தரவுகள், தனிமைப்படுத்தப்படுதல், வெறுமை உணர்வு, வெறுப்புணர்வு, கேலி - கிண்டல் என ஏளனங்களைச் சந்திப்பது, மறைமுகமாய் இன்றும் தொடரும்ராகிங், ஆரோக்கியமற்ற அல்லது ஏமாற்றம் கண்ட நட்பு எனப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், இன்றைய இணையதள விளையாட்டு அடிமைத்தனம், மேலைநாட்டுக் கலாச்சார மோகம் என்பதும் தற்கொலைக்கான காரணிகளாக அமைவதைக் கேள்வியுறும்போது அதிர்ச்சியளிக்கிறது.  

இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றும் ஷாமிகா ரவி மற்றும் உளவியல் நிபுணர் டாக்டர் மிமான்சா சிங் ஆகியோர் வலியுறுத்துவது போல, ‘கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் சார்ந்தது அல்ல; மாறாக, அது மனநலம் சார்ந்தது! ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடங்களை ஒப்புவிப்பவர்கள் அல்லர்; மாறாக, மாணவர்களின் மனக் குமுறல்களைக் கண்டறியும்முதல் நிலை உதவியாளர்களாகஇருக்கவேண்டும். மாணவன் உதவி கோரும் சிறு சைகையைக் கூட கவனிக்கத் தவறினால், அது ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும்என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இத்தகைய சூழலில், காரிருளில் சில மின் மினிப் பூச்சிகளாய் சில பள்ளிகள் முன்னெடுக்கும் முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன; அவை பெரிதும் பாராட்டத்தக்கவையே! சில பள்ளிகளில்படி பெஞ்ச் (Buddy Bench)) எனும் முறை சக வயது - வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், இணக்கமாகப் பயணிக்கவும் கற்றுத்தருகிறது. அவ்வாறே, சில பள்ளிகளில்கவனமாகக் கையாள்வோம் (Handle with Care) என்ற குறிப்பு மூலம் பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்படும் முறையும் பாராட்டுக்குரியது.

மேலும், டெல்லி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளஜீரோ பீரியட் (Zero Period) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள், வெளிப்படையான உரையாடலுக்கு வித்திடுகின்றன. அவ்வாறே, ஒன்றிய அரசுப்பள்ளிகளில்மனோதர்ப்பன்மற்றும்டெலி-மானஸ்போன்ற திட்டங்கள் இருந்தாலும், அவை கடைக்கோடி மாணவரையும் சென்றடைவதை நாம் உறுதி செய்யவேண்டும்.

இறுதியாக, இம்மானிடப் பிறவியின் மகத்துவமே அதன் வளர்ச்சிப் பாதையில்தான் மிளிர்ந்து நிற்கிறது! இங்கே, ஒரு மாணவனின் தற்கொலை என்பது ஒரு தனிநபர் தோல்வியல்ல; மாறாக, அது ஒரு சமூகத்தின், ஒரு கல்வி முறையின், ஒரு குடும்பத்தின் தோல்வி. மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவர்களின் மன வைராக்கியத்தையும், தோல்விகளை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் வளர்ப்பதே நமது உண்மையான கல்வியாக இருக்க வேண்டும். ‘வாழ்க்கை என்பது ஒரு தேர்வு அல்ல; அது ஒரு கொண்டாட்டம்என்பதை இளைய உள்ளங்களுக்கு நாம் உணர்த்திட வேண்டும்.

ஆசிரியர், பெற்றோர் மற்றும் அரசு என முத்தரப்பினரும் இணைந்து, மாணவரின் மனநலனை ஒருகூட்டுப் பொறுப்பாகஏற்றால் மட்டுமே, இந்தத் தற்கொலைப் பெருந்தொற்றிலிருந்து நம் வருங்காலத் தூண்களைக் காக்க முடியும்.

நமது குழந்தைகள் நமது எதிர்காலம்! அவர்களின் சிரிப்பிலும் கனவுகளிலும்தான் நாளைய உலகின் ஒளி நிறைந்துள்ளது. அவர்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் தார்மிகக் கடமைவிழிப்புணர்வு என்பது வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு வீட்டிலும் அன்பாகப் பரிணமிக்கவேண்டும்.

நம் இளந்தளிர்களைக்  காப்போம்; அதுவே

நம் சமூகத்தின் கடமையென ஏற்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்