news-details
ஆன்மிகம்
மரியாவும் யோசேப்புவும் கன்னிமை என்னும் கொடையை வாழ்ந்தார்கள் (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 30)

மரியாவை ஒருகன்னியாகக்காட்டும்பொழுது நற்செய்தியாளர் லூக்கா, “அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர் (லூக் 1:27) என்று கூறுகின்றார். இந்த இரண்டு செய்திகளும் முதலில் வாசிக்கின்றவர்களுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகத் தோன்றலாம்.

இங்குப் பயன்படுத்தப்படும்கன்னிஎன்பதற்கான கிரேக்கச் சொல்லானது, திருமண ஒப்பந்தம் செய்த ஒரு பெண்ணின் நிலையைக் குறிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, மரியா திருமண நிலையில் வாழ்கின்றார்; ஆனால், மண ஒப்பந்தம் மட்டுமே ஆனவர் (lives in the marital state, but that of betrothal). இருப்பினும், நவீன கலாச்சாரத்தில் இருப்பதைப் போலல்லாமல், பண்டைய யூதர்களின் திருமண நிச்சயதார்த்தமானது ஓர் ஒப்பந்தத்திற்காக வழங்கப்பட்டது மற்றும் பொதுவாக உறுதியான மதிப்பைக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றபோதுதான் உண்மையில் திருமணம் முழு நிறைவை அடைந்தாலும் கூட, அது உண்மையில் திருமண நிலைக்கு ஒப்பந்தமானவரைத் திருமண வாழ்வுக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தது.

இவ்வாறு, வானதூதர் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை அறிவித்தபொழுது திருமண ஒப்பந்தமானவருக்கான நிலையை மரியா பெற்றிருந்தார். என்றைக்கும் கன்னியாக நிலைத்திருக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்த மரியா, ஏன் திருமண ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்? என்று நாம் வியப்படையலாம். இச்சிக்கலை நற்செய்தியாளர் புனித லூக்காவும் அறிந்திருந்தார். ஆனால், எந்த விளக்கத்தையும் அளிக்காமல், நிலைமையை மட்டும் குறிப்பிடுகின்றார். உண்மையில், கன்னித்தன்மையில் இருப்பதற்கான மரியாவின் எண்ணத்தை வலியுறுத்தும் நற்செய்தியாளர், அவரை யோசேப்புவின் மனைவியாகவும் காட்டுகின்றார் என்பது இரண்டு தகவல்களின் வரலாற்று நம்பகத்தன்மையின் அறிகுறியாகும்.

யோசேப்பு கடவுளின் மீட்புத் திட்டத்தில் உடன் உழைக்க அழைக்கப்பட்டார்

அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட பொழுது கன்னியாக வாழ்வதற்கான திட்டம் குறித்து யோசேப்பு மற்றும் மரியாவுக்கு இடையே ஒரு புரிதல் இருந்தது என்றும் கருதலாம். மேலும், வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளைக் கருத்தில் கொண்டு கன்னித்தன்மையைத் தேர்வு செய்ய மரியாவைத் தூண்டிய தூய ஆவியானவரால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றதொரு குடும்ப அமைப்பில் இந்தத் தூய ஆவியானவர் வர வேண்டும் என்று விரும்பி யோசேப்பிலும் கன்னித்தன்மையின் மகத்துவத்தை ஊக்குவிக்க முடிந்திருக்கும்.

இறைத்தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி இவ்வாறு கூறுகின்றார்: “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்; ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான் (மத் 1:20). தூய ஆவியானவரின் இவ்வார்த்தைகளால், யோசேப்பு தனது திருமண வாழ்வை முற்றிலும் சிறப்பு வாய்ந்த முறையில் வாழ அழைக்கப்பட்டார் என்பதற்கான உறுதியைப் பெற்றார். இவ்வாறு, இயேசுவைப் பெற்றெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவுடன்  கன்னித்தன்மையில் ஒன்றித்திருப்பதன் வழியாக, கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன் ஒத்துழைக்க யோசேப்புவையும் இறைவன் அழைக்கின்றார்

மரியாவையும் யோசேப்பையும் எந்த வகையான திருமண வாழ்வு வாழ தூய ஆவியானவர் அழைத்தார் என்பதை மீட்புத் திட்டத்தின் மற்றும் உயர்ந்ததோர் ஆன்மிகத்தின் பின்னணியில் மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடியும். மனுவுருவாதல் மறைபொருளின் உறுதியான செயலாக்கமானது தெய்வீகமானதொரு மகப்பேற்றை முன்னிலைப்படுத்துகின்றதொரு கன்னிப் பிறப்புக்கு அழைப்பு விடுக்கின்ற அதேநேரத்தில், அக்குழந்தையின் ஆளுமையின் இயல்பானதொரு வளர்ச்சிக்கு உதவக்கூடியதொரு குடும்பத்தை அமைக்கவும் அவர்களை அம்மறைபொருள் அழைத்தது.

மிகச் சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளில் அவர்கள் அளித்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, யோசேப்பு மற்றும் மரியா கன்னித்தன்மை என்னும் சிறப்பு வரம் மற்றும் திருமணத்தின் கொடை ஆகிய இரண்டையும் வாழும் அருளைப் பெற்றனர். மரியா மற்றும் யோசேப்பின் கன்னி அன்பின் ஒற்றுமையானது (communion of virginal love) மனுவுருவாதல் என்னும் மறைபொருளின் உறுதியான செயலாக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதொரு சிறப்புமிக்க நிகழ்வு என்றாலும்கூட, அது உண்மையான திருமணமாகும் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 7).

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, யோசேப்பு மற்றும் மரியாவிற்கிடையேயான அவர்களின் மணமக்களுக்கான ஒன்றிப்பின் உயர் மறைபொருளை ஏற்றுக்கொள்வதிலிருந்த சிரமமானது சிலரை அவர் வயதில் முதியவர் என்று நினைப்பதற்கும், அவரை மரியாவின் கணவர் என்பதைவிட பாதுகாவலர் என்று கருதுவதற்கும் இட்டுச்சென்றது. இதற்கு மாறாக, அவர் அந்நேரத்தில் ஒரு வயதான மனிதர் அல்லர்; மாறாக, அவரது உள்மன நிறைவு மற்றும் இறையருளின் பலனானது மரியாவுடனான தனது திருமண உறவைக் கன்னிப் பாசத்துடன் (virginal affection) வாழ்வதற்கு இட்டுச்சென்றது என்று கருதுவதற்கான ஒரு கருத்தாக்கமாகும்.

திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர் யோசேப்பின் பாதுகாவலில் திரு அவை முழுவதையும் ஒப்படைத்தார்

மனுவுருவாதல் மறைபொருளில் யோசேப்புவின் ஒத்துழைப்பானது இயேசுவின் தந்தை என்கிற பங்கையும் அதனுள் அடக்குகின்றது. அவரின் இப்பணியை வானதூதர் அவருக்குக் கனவில் தோன்றி அவரை அக்குழந்தைக்குப் பெயரிட அழைக்கின்ற போது உறுதிப்படுத்துகின்றார்: “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்; ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத் 1:21).

இயற்கையான முறையில் மனிதப் பிறப்பெடுப்பதைத் தவிர்க்கின்ற அதேவேளை, யோசேப்புவிற்கான தந்தை என்கிற நிலையானது உண்மையானதொன்றாக இருக்கின்றது. ஆனால், வெளிப்படையானதாக இல்லை. தந்தை (father) மற்றும் தோற்றுவித்தவர் (one who begets) என்பனவற்றை வேறுபடுத்திப் பார்க்கையில், மரியாவின்   கன்னித்தன்மை பற்றிக் கூறுகின்ற நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டDe Margaritaஎன்கிற நூலானது இவ்வாறு கூறுகின்றது: “கணவன்-மனைவியாக  வாழ்வதற்காக மரியாவும்-யோசேப்பும் ஏற்றுக்கொண்ட கடமைகள் யோசேப்புவைத் தந்தை என அழைப்பதற்கான தகுதியை அவருக்குக் கொடுத்தது. எவ்வாறாயினும் அவர் இயேசுவைத் தோற்றுவிக்காத தந்தை ஆவார் (a father, however, who did not beget). இவ்வாறாக, மீட்பர் முழுச் சுதந்திரத்தோடு கீழ்ப்படிந்திருக்கக் காரணமான (லூக் 2:51) அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை வளர்ப்பதிலும் தச்சுத் தொழிலைக் கற்றுக் கொடுப்பதிலும் யோசேப்பு இயேசுவின்  தந்தை என்கிற பங்கை நிறைவேற்றினார்.

கிறித்தவர்கள் எப்பொழுதுமே யோசேப்புவை மரியாவுடனும் இயேசுவுடனும் நெருக்கமான ஒற்றுமையுடன் வாழ்ந்தவர் என்று ஒப்புக்கொண்டு மரணத்திலும் அவர்களின் பாசத்தையும் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பையும் அவர் அனுபவித்தார் என்கிற முடிவுக்கு வந்தனர். இந்த நிலையான பாரம்பரியத்திலிருந்து, பல இடங்களில் திருக்குடும்பத்திற்கும், மீட்பரின் பாதுகாவலரான யோசேப்புவிற்கும் ஒரு சிறப்புப் பக்தியானது வளர்ந்துள்ளது. ஆகவேதான் அனைவரும் அறிந்தவாறு, திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர் யோசேப்புவின்  பாதுகாவலில் திரு அவை முழுவதையும் ஒப்படைத்தார்.

மூலம்: John Paul II, Mary and Joseph lived gift of virginity, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 28 August 1996, p. 7.