தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையின் சமூக, அர சியல் மற்றும் ஆன்மிகக் குரலாக ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பீடுநடை போடும் ‘நம் வாழ்வு’ வார இதழின் பொன்விழா சிறப்பு வாசகர் வட்டக் கூட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் சனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நாஞ்சில் மண்ணின் இலக்கியச் செழுமைக்குச் சான்றாக அமைந்த இவ்விழாக்களில், நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், எழுத்தாளர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோட்டாறு
மறைமாவட்டம், ஆயர் இல்ல அருள்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசை மற்றும் குழித்துறை மறைமாவட்டம், முளகு மூடு, ஜான்பால் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஆயர் மேதகு முனைவர் ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ்
ஆகியோர் தலைமை தாங்கினர். கோட் டாறில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா அவர்களும், குழித்துறையில் பாளை, தூய சவேரியார் கல்லூரி உதவிப் பேராசிரியை திருமதி ப. விமலா அவர்களும்
முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்
பேசிய ஆயர் நசரேன் சூசை அவர்கள், “வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தும்; கத்தோலிக்கத் திரு அவையின் செய்திகளையும் நற்பண்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க ‘நம் வாழ்வு’ இதழும் இதுபோன்ற வாசகர் வட்டங்களும் பெரும் பங்காற்றுகின்றன” என்று
பாராட்டினார். ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் பேசுகையில், “என்னை ஓர் எழுத்தாளனாக அறிமுகம் செய்த பெருமை நம் வாழ்வுக்கு உண்டு” எனப் பாராட்டியதோடு, “இவ்விதழ் சிறுபான்மையினரின் நம்பிக்கைத் தீபமாகத் திகழ்கிறது” எனவும்
கூறினார்.
இலக்கியப்
பணிக்கு வலுசேர்க்கும் விதமாக இரண்டு முக்கிய நூல்கள் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அருள்முனைவர் இராஜசேகரன் மற்றும் அருள்பணி. ஞானசேகரன் ஆகியோர் தொகுத்துள்ள ‘இதோ - மரம், செம்மறி, ஒளி’ எனும் தவக்காலச் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நூலும், முனைவர் மரிய தெரசா அவர்கள் எழுதிய ‘மனம் கொண்ட ஆற்றல்’ எனும் மாணவர் முன்னேற்றத்திற்கான நூலும் வெளியிடப்பட்டன.
விழாவின்
சிறப்பு நிகழ்வாக, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு. பிலிப் மற்றும் திருமதி. இம்மாகுலேட் பிலிப், திரு. குறும்பனை பெர்லின், திரு. ஆண்டனி கிளமெண்ட் மற்றும் குழித்துறை மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு. S.M. செபாஸ்டின், திரு. ஓலக்கோடு ஜான், திரு. குமரி ஆதவன் ஆகிய ஆறு பேருக்கும் ‘நம் வாழ்வு’ விருதும் பாராட்டும் வழங்கப்பட்டன. அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பலரும் ‘நம் வாழ்வு’ இதழின் பயன்பாடு பற்றியும், தற்போது மிகச் சிறப்பாக வெளிவருகிறது பற்றியும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியில், துணை ஆசிரியர் அருள்பணி. ஜெ. ஞானசேகரன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். தமிழகத்தின் தென் எல்லையில் நடைபெற்ற இந்த விழாக்கள் நாஞ்சில் மண்ணின் இதழியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தன.