திரு அவையின் மறைவல்லுநரான புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்களைக் கத்தோலிக்கத் திரு அவையின் பொது உரோமன் நாள்காட்டியில் இணைப்பதாகத் திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ ஆணையைத் திருவழிபாடு மற்றும் அருளடையாள ஒழுங்குமுறைக்கான திருப்பீடம் 2026, பிப்ரவரி 3 அன்று வெளியிட்டது. இதன்படி, இனி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி புனித ஜான் ஹென்றி நியூமனின் நினைவு நாளாகக் கொண்டாடப்படும். 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து திரு அவையின் குருவாக இருந்த இவர், 1845-இல் கத்தோலிக்கத் திரு அவைக்கு மாறினார். பின்னர் கர்தினாலாக உயர்ந்த இவருக்கு, 2019-இல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 2025-இல் திருத்தந்தை இவரை ‘திரு அவையின் கல்விப் பணிக்கான இணைப் பாதுகாவலர்’ மற்றும் ‘மறைவல்லுநர்’ என்று அறிவித்திருந்தார். அறிவுசார் தேடலும், ஏழைகளுக்கான சேவையும் இவரது வாழ்வின் இரு கண்களாக இருந்தன. ‘வரலாற்றில் பயணம் செய்யும் திரு அவையின் ஒளிமிகுந்த விளக்கு’ என்று போற்றப்படும் இவரது நினைவு நாள், கிறித்தவர்களுக்கு ஒரு முன்மாதிரி என்று இந்த ஆணை புகழாரம் சூட்டியுள்ளது.