குழந்தை பிறப்பு முதல் முதியவர் இறப்பு வரை பல்வேறு பருவங்களாகக் காலங்கள் மனித வாழ்வில் ஓர் உறுப்புகளாக உருவெடுக்கின்றன. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், திருமணப் பருவம், முதுமைப் பருவம் இவையெல்லாம் மூன்று காலங்களில் அடங்கியுள்ளது. அவை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவை மனிதரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றது. அதுபோலக் கிறித்தவர்களின் வாழ்வில் காலங்கள் காலடி பதிக்கின்றன.
இந்தக்
கிறித்தவக் காலங்களில் மிக முக்கியமான காலமாகக் கருதப்படுவது தவக்காலம். இந்தத் தவக்காலம் ஒவ்வொரு கிறித்தவரின் வாழ்வில் சிறப்பாக, பல புனிதர்களின் வாழ்வில்
பல புதுமைகளைப் புரட்டிப் போட்ட காலம். இறைமகன் இயேசு 40 நாள்கள் தமது பணி தொடங்குவதற்கு முன்பாகத் தம்மைத் தயார் செய்துகொண்ட காலம், தவக்காலம் மனமாற்றத்திற்கான காலம், ஒவ்வொரு மனிதனும் மனம் திரும்ப வேண்டிய காலம். சுய ஆய்வுப் பயணத்தில் பயணிக்க அழைப்பு விடுக்கும் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல்! சாம்பல் தவத்தின் தொடக்கம்.
இந்தச்
சாம்பல் பழைய ஏற்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினார் (2சாமுவேல் 13:19). இது தாமாரின் சோகத்தையும், தனக்கு நிகழ்ந்த இழிவு நிலை நினைத்து வருந்துவதையும் குறிக்கிறது. “என்னையே நொந்து கொள்கிறேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகிறேன்” (யோபு
42:6). “மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த பிள்ளைக்காகத் துயருற்று அழுவதுபோல், மனமுடைந்து அழுது புலம்புங்கள்” (எரே
6:26). இவ்வாறு பழைய ஏற்பாட்டில் சாம்பலானது வருத்தத்தைத் தெரிவித்து மனம் வருந்துவதைக் குறிக்கிறது. ஆனால், புதிய ஏற்பாடானது மனம் மாற, மனம் திரும்ப அழைப்பு விடுக்கின்றது. “தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பார்” (மத்தேயு
11:21). சாம்பல் புதன், நெற்றியில் சாம்பல் பூசுவது பழைய வாழ்க்கையைக் களைந்து, தீமையிலிருந்து நன்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் பயணிக்க இந்தப் பயணம் தொடர்கிறது.
நாம்
பயணிக்கவிருக்கும் இந்தத் தவக்காலமானது, இயேசுவின் அளவு கடந்த மன்னிப்பையும் இரக்கத்தையும் நாம் உணர்ந்துகொள்ள பாதை அமைக்கிறது. சாம்பல் குரல்: ‘இன்று நான், நாளை நீ.’ ஆம், இவ்வுலகில் எவரும் நிலையாக இடம் பதிப்பதில்லை; சாம்பலாகக் காற்றிலே அடித்துச் செல்லாவிட்டாலும், மண்ணோடு மண்ணாக நாம் மக்கிப் போவதை நினைவில்கொள்ள வேண்டும்.
இந்த
மனமாற்றப் பயணத்திலே, மன்னிப்புப் பாதையில் பயணம் செய்கின்ற ஒவ்வொருவரையும் மன்னிப்பிற்கு எதிர்மறையான தண்டனை பற்றிக் கேள்வி எழுப்ப இந்தச் சாம்பல் புதன் மனத்திற்குள்ளே ஓர் எரியும் நெருப்பாகின்றது. தண்டனை ஒரு முற்றுப்புள்ளியா? அறிவியலுக்கும் அறிஞருக்கும் பட்டமும் பதவியும், அணு உலைக்கும் ஆயுதக் கிடங்குகளும் ஏவுகணையாக எட்டாத் தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் இம்மின்னணுச் சமுதாயத்தில் தண்டனை ஒரு முற்றுப்புள்ளியா?
கண்ணீரும்
கதறலும், இரத்தமும் இரக்கமற்ற மிருகங்களும், குழந்தையென்று பாராமல், தன் இன மனிதனென்று பாராது
உடம்பை மிருகமாகக் கிழித்துக் குதறித் தின்னும் இச்சமுதாயத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சீர்கேடுகள் சின்னா பின்னமாகச் சிதறிக்கொண்டே இருக்கின்றன. குற்றம் நடந்துகொண்டே இருக்கின்றன. தண்டனை கொடுக்கப்பட்டே இருக்கின்றன. ஆனால், குற்றம்? குற்றம் குறைகின்றதா? இல்லை. தொன்றுதொட்டு இன்றுவரை அவை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.
இந்தியத்
தண்டனைச் சட்டம் (IPC), குற்றப்
பிரிவியல் தனி அமைப்பு என்று பல குழுக்கள் அமைந்திருந்தும்
அழிக்க முடியாத சக்தியாக, பிரிக்க முடியாத பிணைப்பாக இவ்வுலகில் இக்குற்றங்கள் நடைபெறக் காரணம் யார்? எங்கே வைப்பது முற்றுப் புள்ளி? பொதுவாக, தண்டனை என்று கூறும்போது அரபு நாடுகளைக் கூறுவார்கள். ஏனென்றால், பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் பேசினாலே மிகக் கொடூரமான இரக்கமற்ற தண்டனை வழங்குவது வழக்கம். ஆனாலும், குற்றங்கள் குறைகின்றனவா?
தண்டனைச்
சட்டங்களும், குற்றவியல் பிரிவுகளும் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. சுப்பிரமணிய இராஜி கூறுவார்: “வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன்; கொப்பளிக்கக் கொப்பளிக்க வாயும் ஓயாமல், அழுக்கும் போகாமல் உற்றுப் பார்த்தேன்; நீரே அழுக்கு.’ இன்று யார் மத்தியில் நீதியும் நேர்மையும் நிலைபெற வேண்டுமோ, எந்தத் தராசு சமமாக உண்மையே வெல்லும் என்று மெய்ப்பிக்கப்பட வேண்டுமோ அங்கேயே உண்மையும் நீதியும் செத்து ஒரு பிணமாக அலைந்து கொண்டிருக்கின்றது.
நீதிக்காகவும்
நியாயத்திற்காகவும் ஒருவன் போராடினால் அங்கே அவன் அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறான். இந்தச் சட்டங்கள் எதற்கு? தான் உண்மையைக் கூறினால், அநீதிக்கு எதிர்த்துப் போராடினால், சுயபிம்பம் வெளிவந்தால் என் பிம்பம் மறைந்து விடுமே என்று ஒளிந்து கொண்டிருக்கும் இச்சமூகத்திற்குச் சட்டங்கள் எதற்கு?
இவற்றிற்கெல்லாம்
ஒரு முற்றுப்புள்ளி ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் சுய ஆய்வு. இன்று நீ சுய ஆய்வு
உன்னைச் செய்யவில்லையென்றால் நாளை நீ ஆய்வுக் கூடத்தில்
சுழன்று கொண்டிருப்பாய். இன்றைய நாடும் சமுதாயமும் இதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
“ஒரு தவறை நீ ஏற்றுக்கொள்ளும்போது அது புனிதமாகிறது” என்கிறார்
அன்னை தெரேசா. தவறிழைப்பது மனித இயல்பு அதை உணர்ந்து கொள்கிறாயா?
நாம்
பிறரை விமர்சிக்கவும், பிறருக்குத் தண்டனை வழங்கவும் பரிசேயர், சதுசேயர் போல் ஏங்கி கொண்டிருக்கிறோம். நாம் மனம் மாற, இருளிருந்து ஒளி
பெற மானிட மகன் இவ்வுலகிற்கு ஒளியாக உருவெடுத்தார். “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்” (யோவா
8:11).
ஆயுதங்களும்
சட்டங்களும் மாற்றியமைக்க முடியாத தவறை, மன்னிப்பு என்னும் ஊன்றுகோலால் இரக்கம் காட்டி ‘இனி பாவம் செய்யாதீர்’ என்று
அன்புக் கட்டளையும் விடுக்கின்றார்.
பிறர்
கண்ணில் இருக்கும் தூசியை எடுப்பதை நிறுத்திவிட்டு நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முயற்சிப்போம்.
தீர்ப்பு
என்பது ஒரு மனிதரின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பது அல்ல; பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது. அதுபோலத் தண்டனையும் ஒருவரின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பதல்ல; மாறாக, தீமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது.
ஆகவே,
சாம்பலை நெற்றியில் பூசி, பழைய தவறுகளைக் களைந்து மனம்மாறி நற்செய்தியைப் பறைசாற்றிட, இருளிருந்து ஒளிக்குத் தவக் காலமென்னும் இவ்வசந்த காலத்தில், மனமாற்றத்தின் காலத்தில் பயணிப்போம்.