கிறித்தவர்கள் இம்மண்ணின் மக்கள். இம்மண்ணின் சமூக, அரசியல் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவர்கள். தங்களின் வாழ்வாலும் பணிகளாலும் இம்மண்ணை, மக்களை, மொழியை வளப்படுத்தியவர்கள். தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டு கல்வி, மருத்துவம், சமூகப் பணி ஆகிய துறைகளில் அளப்பரிய பங்களிப்பு செய்து, தேசக் கட்டுமானத்திற்குத் தொண்டாற்றி வருபவர்கள்.
இவ்வாறு
இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அக்கறையுடன் தொண்டாற்றி வரும் கிறித்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சமூகக் கரிசனையுடன் பங்காற்ற
விழைகின்றனர். அந்நோக்கில், சிறுபான்மையினர் நலனையும், பரந்துபட்ட தமிழ்நாட்டின் நலனையும் முன்னிறுத்தி, கீழ்க்காணும் கோரிக்கைகளைக் கிறித்தவச் சமூகம் முன்வைக்கிறது.
1. சனநாயகம்,
சமத்துவம், சமூக நீதி, சமயச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமதர்மம் இறையாண்மை போன்ற இந்திய அரசமைப்புச் சட்ட விழுமியங்களின் அடிப்படையில் ஆட்சி நடப்பதை உறுதி செய்யவேண்டும்.
2. தலித்
கிறித்தவர்களைப் பட்டியல் சமூகத்தினர் வகைப்பாட்டில் ஒன்றிய அரசு சேர்த்திட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக, தலித் கிறித்தவர்களுக்கு 4.6 விழுக்காடு மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
3. மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியக் கிறித்தவர்களையும் சேர்க்க வேண்டும்.
4. சிறுபான்மைப்
பள்ளிகளுக்கு,
அ)
1991-லிருந்து நிறுத்தப்பட்டுள்ள மானியத்தை நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று வழங்க வேண்டும்.
ஆ)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துச் சமூக நலத் திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இ)
சிறுபான்மைப் பள்ளிகளுக்கான அங்கீகாரம், புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.
5. சிறுபான்மையினர்
ஆணையம் மாவட்ட ஆய்வுகள் நடத்தும்போது, திரு அவைகளின் மறைமாவட்ட அமைப்புகளின் ஆலோசனைகளையும் பெறவேண்டும்.
6. உரிய
சான்றுகளுடன் சமர்ப்பிக்கப்படும் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தவேண்டும்.
7. அரசின்
நிலத்தில் நெடுங்காலமாக உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பட்டா வழங்கவேண்டும்.
8. கிறித்தவர்களுக்கான
கல்லறைத் தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவேண்டும். பல்சமய மக்கள் வாழும் ஊர்களில் அனைத்துச் சமூக மற்றும் சமயத்தவருக்கான சமத்துவக் கல்லறைத் தோட்டங்கள் அமைக்கவேண்டும்.
9. கருணை
இல்லங்கள், முதியோர் இல்லங்கள், கைவிடப்பட்டோர் இல்லங்கள் போன்ற கிறித்தவர்களின் அறப்பணிகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் உதவிகளும் நல்கவேண்டும்.
10. பொது இடங்களில்
சிறுபான்மையினர் வழக்கமாக நடத்திவரும் சமய நிகழ்வுகளுக்கு, சமூக விரோதிகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டித் தடை விதிக்கக்கூடாது.
11. ஆலயப் பணியாளர்களுக்கு
உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் திரு அவைத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதோடு, ஆலய நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
12. கிறித்தவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப
தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். மேலும், அந்தந்தக் கிறித்தவச் சபைகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்யவேண்டும்.
13. தமிழ்நாட்டு விவசாயத்தின்
எதிர்காலத்தை வளர்த்தெடுக்க,
அ)
செறிவான விவசாய நிலங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிக்கவேண்டும்.
ஆ)
மரபார்ந்த இயற்கை விவசாயத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் எந்திரங்கள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தவேண்டும்.
இ)
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் பரவலாக்க வேண்டும்.
ஈ)
விவசாயக் கூலிகளுக்குப் பட்டா வழங்கி, வீடுகள் கட்டித் தரவேண்டும்.
உ)
நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சீமைக் கருவேல மரங்கள், சீமைப் பூண்டுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
14. தமிழ்நாட்டின் மரபார்ந்த
தொழிலான பனைத் தொழிலைப் பாதுகாக்க,
அ)
பனை மரங்களின் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்தவேண்டும்.
ஆ)
பனை உற்பத்திப் பொருள்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும்.
இ)
பனைகளில் ஏறி பதநீர் எடுக்க ஏணிகள், சிறு மோட்டார் வண்டிகள், தொழிற்சாலைகளைத் தொடங்கி நவீனப்படுத்தவேண்டும்.
ஈ)
கள் ஓர் உணவுப் பானம் என ஏற்று, அதற்கான
தடையை நீக்கவேண்டும்.
உ)
மது, போதை ஒழிப்பை முன்னெடுக்கவேண்டும்.
15. தமிழ்நாட்டின்
பொருளாதார வளமான மீன்பிடித் தொழிலை வளர்க்க,
அ)
மீன்பிடித் தொழிலிலும், மீன் விற்பனையிலும் பெருமுதலாளிகளிடமிருந்து மீனவர்களைக் காப்பாற்றவேண்டும்.
ஆ)
மீன்பிடித் தடை, பேரிடர் காலங்களுக்குப் போதுமான உரிமைத்தொகை (உதவித்) வழங்கவேண்டும்.
இ)
மீனவர்களின் சிதைவுக்குள்ளான வீடுகளுக்கு மாற்றாக, பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டித் தரவேண்டும்.
ஈ)
இலங்கை இராணுவத்தினரின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.
16. தமிழ்நாட்டின்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க,
அ)
சுற்றுச்சூழலுக்கு எதிரானத் திட்டங்களுக்கு மக்களின் கருத்துக்கேட்பைக் கட்டாயமாக்கவேண்டும்.
ஆ)
கனிம வளங்கள், மண், மலைகள் ஆகியவற்றைக் கொள்ளையிடுவதைத் தடுக்க வேண்டும்.
இ)
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக்கி, மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
17. இலஞ்சம்,
ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யவேண்டும்.