அன்பென்னும் மழையில் மலர்ந்தவர்!
கருணை
மணம் வீசும் தாய்மையின் இசை அவர்!
பெண்களின்
வாழ்வில் ஒளியாய் நின்று,
வீழ்ந்த
மனங்களுக்கு விடியலைத் தந்து,
மௌன
சேவையில் மகத்துவம் காட்டி,
சுயநலமற்ற
சேவையை அவள் சுவாசமாக,
வார்த்தையினால்
அல்ல; தன் வாழ்க்கையினால்
பிரதிபலித்தவர்தான்
நம் அன்னை எலிஸ்வா!
சிரிப்பில்
சாந்தம், செயலில் தியாகம்,
ஒவ்வோர்
அடியிலும் மனிதநேய இராகத்தை
இசைத்த
அன்னையின் தனிச்சிறப்புகள் இதோ...
செப வாழ்வு:
செபம் நம் அன்னையின் வாழ்வின் உயிர்மூச்சாக இருந்தது. துன்பங்கள் அன்னையை விடாது துரத்திய தருணத்திலும், கடினமான சூழல்கள் அன்னையைச் சூழ்ந்திட்ட வேளையிலும் அன்னை எலிஸ்வா தன் சொந்த அறிவில் நாட்டம் கொள்ளவில்லை; மாறாக, சிறு குழந்தைபோல் இறைவன் முன் தவழ்ந்து, செபத்தின் மூலம் இறைவனிடமிருந்து சக்தியையும் மன வலிமையையும் பெற்று,
சோதனைகளைச் சாதனைகளாகவும், தடைக்கற்களைப் படிக்கற்களாகவும் மாற்றினார்.
தாழ்ச்சி: தாழ்ச்சியே அன்னை எலிஸ்வாவின் வாழ்வில் முக்கிய எழுச்சி. சபையின் தோற்றுவிப்பாளர், பல உயர்ந்த பணிகள்
மற்றும் பல சவால்கள் இருந்த
பொழுதிலும், அவர்
எப்போதும் தன்னைச் சிறியவர் எனக் கருதி, பிறரின் தேவைகளை முதன்மையாகக் கருதினார். இவ்வுலகப் புகழும் பெருமையும் வெறும் மாயையே என்பதை இறைஞானத்தால் அன்றே உணர்ந்து, மறுவுலக வாழ்வு ஒன்றே தனது இலக்கு என்பதில் கவனத்தைச் செலுத்தி, தாழ்மையான உள்ளத்தோடு வாழ்ந்தார்.
அன்பும் கருணையும்:
குழந்தைப் பருவம் முதல் பெறுவதில் அல்ல, கொடுப்பதில் இன்பம் கண்டவர் அன்னை எலிஸ்வா. ஏழைகளுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல், நோயாளிகளை அரவணைத்துச் சேவை செய்தல், ஒதுக்கப்பட்டவர்களிடம் நல்லன்புடன் உறவாடுதல் எனத் தனது சக அருள்சகோதரிகளின் நலனில் முழுமையான
அக்கறை காட்டினார். குறிப்பாக, பெண் கல்விக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் எடுத்த பல முயற்சிகள். இவை
யாவும் அன்னையின் அன்பினையும் கருணையையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
மனவுறுதி மற்றும்
பொறுமை:
சவால்களும் போராட்டங்களும் சூறாவளியாய்த் தன்னைப் புரட்டிப்போட்ட நேரத்திலும் அன்னை எந்தவொரு பயமும் படபடப்பும் இன்றி, மனம் தளராமல் பொறுமையுடன் அமைதியாகச் செயல்பட்டார். புரியாத சூழ்நிலைகளிலும் எதிர்ப்புகளிலும் குறிப்பாக, காலத்தின் சூழ்நிலையால் தனது சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்திலும் அவர் உறுதியுடன் இந்நாள்வரை வழிநடத்திய இறைவன் இனிவரும் நாள்களிலும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வீறுநடை கொண்டு பயணித்து, பலருக்கு வாழும் சாட்சியாகத் திகழ்ந்தார்.
சமூகச் சேவை:
ஏழைகளிடம் அன்பு, நோயாளிகளிடம் நேசம்,
புறக்கணிக்கப்பட்டவர்களிடம்
பாசம், பெண் கல்வி இவை யாவும் இவரது அன்பின் ஆழமான வெளிப்பாடாக இருந்தது. ‘அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு?’ என்ற காலகட்டத்தில் பெண்களுக்குக் கல்வி வழங்கியது இவரது சமூகச் சேவையின் உச்சக்கட்டம். ஆம், கேரளாவில் முதன் முதலாகப் பெண்களுக்கென்று தொடங்கப்பட்ட துறவற சபையின் முதல் தோற்றுவிப்பாளர் அன்னை எலிஸ்வா. மேலும், அன்னை எலிசுவா கேரளத் திரு அவை வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். இவரது வாழ்க்கை இன்றும் கிறித்தவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இறைவனிடம்
அன்னை எலிஸ்வா வழியாக மன்றாட்டுகளை எழுப்பிய பலர் மகிழ்வுடன் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்து சாட்சி சொல்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவேதான் நம் தாயாம் திரு அவை நம் அன்னை எலிஸ்வாவை ‘அருளாளர்’
நிலைக்கு உயர்த்திப் பெருமைப்படுத்தியுள்ளது.