news-details
சிறப்புக்கட்டுரை
மெக்காலே - சனாதனக் கல்விக்கு அடித்த சம்மட்டி அடி!

கடந்த பத்து தினங்களில் நமது பிரதமர் இரண்டு முறைமெக்காலேதந்த கல்வித் திட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவர் பேசியது டெல்லியில்இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழ் ஏற்பாடு செய்த இராம்நாத் கோயங்கா நினைவேந்தல் உரை. இது பல முக்கியப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட ஓர் அரங்கக் கூட்டம். மற்றொரு கூட்டம் அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததைக் குறிப்பிடும் வகையில், அதன் கோபுரத்தில் காவிக் கொடியினை ஏற்றி வைத்துவிட்டு, பிரதமர்  நிகழ்த்திய எழுச்சியுரை. இரண்டுமே பாரதிய சனதா கட்சியினுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய கருத்தியல் அடிப்படைகளை விளக்கும் உரைகள் என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் உரை ஒரு சமூக நிகழ்ச்சியில் ஆற்றிய உரை. அடுத்த உரை ஓர் ஆன்மிக நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்டது. சமூக நிகழ்ச்சியில் உரையாற்றுகின்ற போதும், ஆன்மிக நிகழ்வில் பேசுகின்ற போதும் பிரதமர் அவர்கள் மெக்காலே பிரபுவைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் அறிமுகம் செய்த கல்வித் திட்டமும், அதனால் இந்திய மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், அப்படி அடிமைப்பட்டுக் கிடக்கின்ற இந்திய மக்களை விடுதலைப்படுத்துகின்ற நாள்கள் வந்து விட்டதாகவும்  பேசியிருக்கிறார்.

இதைப் பேசிய பிரதமர் உடனடியாக 21-வது நூற்றாண்டிலே இந்தியா சாதிக்கவேண்டிய சாதனைகளைப் பற்றிப் பேசுகிறார். உலக அளவில், தொழில்நுட்ப அளவில் பல்வேறு தளங்களில், அறிவியல் களங்களில் இந்தியா அடைய வேண்டிய முன்னேற்றங்கள் - உலகளாவிய அளவில் அது பெறவேண்டிய அங்கீகாரம், உலகளாவிய அறிவியல் வேட்கையில் நம் மாணவர்கள், இளைஞர்கள் சாதிக்க வேண்டிய சாதனைகள் இவற்றைப் பற்றியெல்லாம் உரையாற்றுகின்ற போது அந்த இடத்திற்கு வருவதற்கான சூழ்நிலையினை இன்றைய இந்தியச் சமூகம் எப்படிப் பெற்றது என்பதை மறந்துவிட்டு பிரதமர் இவ்வாறு பேசுகிறாரா? என்கிற ஓர் ஐயம் எனக்குள்ளே எழுந்தது.

இந்தியா முழுமையும்புல்லட் ட்ரெயின்ஓட வேண்டும், விண்வெளி முழுவதும் இந்தியச் சேட்டிலைட்கள் நிலைநிறுத்தப்படவேண்டும், நாடெங்கிலும் தொழிற்சாலைகளில் கம்ப்யூட்டர் சிப்புகளைத் தயார் செய்யவேண்டும், உலகில் எங்கெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அவை எல்லாம் இந்தியக் கண்டுபிடிப்புகளாகவே இருக்கவேண்டும் என்று நம்முடைய பிரதமர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய கனவுகளை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இத்தகைய அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றம் எப்படி இந்தியாவுக்கு வசப்படும்? அல்லது வசப்பட முடியும்? என்று பார்க்கின்றபோது, இந்த அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிப்படையான காரணம் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்த்த ஆங்கில அறிவு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக, இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் பற்றிப் பேசுகின்றவர்கள், அதனுடைய ஏற்றுமதி வளர்ச்சியைப் பற்றியும் பேசுகின்றவர்கள் அதற்கு அடிப்படையான காரணம் இன்றைய இந்திய நாட்டு இளைஞர்களுக்குக் கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பதிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இருக்கின்ற ஆழ்ந்த அறிவும் புலமையும்தான் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அத்தகைய ஒரு நிலையை இன்று இந்திய இளைஞர்களுக்கு எது தந்தது என்று கூறினால், மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கில வழிக்கல்வி என்பதைப் பிரதமரும் பா...வினரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதற்கு என்ன காரணம் என்பது நமக்குப் புரிகிறது.

வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் மெக்காலேவையும், அவர் தந்த வாழ்க்கைக் கல்வியையும், அவர் அறிமுகப்படுத்திய ஆங்கிலத்தையும் வசைபாடுவதையும், குறை கூறுவதையுமே வழக்கமாகக் கொண்டிருக்கின்ற பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், அதனால் இந்தியச் சமூகம் தன்னுடைய பழம்பெருமைகளை இழந்துவிட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற அந்தப் பழம் பெருமை என்ன? மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வியால் இந்தியச் சமூகம் இழந்தது என்ன? என்பதைப் பற்றிய ஒரு விளக்கத்தைப் பிரதமரும் பா...வும், ஆர்.எஸ்.எஸ்.-சும் நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்!

மெக்காலே இந்திய நாட்டிற்குள்ளே வருகின்ற போது, இந்தியாவினுடைய சமூகச் சூழலை பாரதியார் மிக அருமையாகப் பாடுவார்.

ஆற்றினில் பெண்களை எறிவதும்,

இரதத்து உருளையில்

பாலரை உயிருடன் மாய்த்ததும்,

பெண்டிரைக் கணவர்தம்

பிணத்துடன் எரித்ததும் எனப் பல தீமைகள்.’

இவ்வாறு பாரதியார் நம் சமூகத்தின் தீமைகளை வரிசைப்படுத்தினார். ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்தியச் சமூகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

சாதிப் பிரிவுகள் கூறி நித்தமும் சண்டைகள் நடத்தியவர்கள் யார்? கல்வி கற்கும் உரிமைக்கு உரியவராய் ஒரு சாதியினர் மட்டும் இருந்தனரே... அது எப்படி? பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமை தரப்பட்டு இருந்ததா? பெண் கல்வியினுடைய நிலை என்ன? இந்திய மக்களினுடைய வேளாண்மைத் தொழில், வியாபாரம், இவற்றில் விஞ்ஞான அணுகுமுறைகள் இருந்தனவா? பெண்களுக்குரிய சமூக மதிப்பீடுகள் என்ன? ஒதுக்கப்பட்ட சாதி என்பதற்கான சமூக அடையாளங்கள் என்ன? தண்டனைக்குரிய குற்றங்கள் என்ன? நீதிமுறைகள் என்ன? இவை பற்றி எல்லாம் தெரிந்துகொண்டால்தான் மெக்காலேயின் கல்வித் திட்டம் இந்தச் சமூகத்திற்குத் தந்த மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கிழக்கிந்தியக் கம்பெனி ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய்களை இந்தியாவிலே கல்வி நிலையங்களுக்கு மானியமாக வழங்கியதாகக் கணக்கு எழுதி வைத்திருந்தது. இந்தக் கணக்கை ஆராய்ந்த பிரிட்டிஷ் பாராளுமன்றம், அதனுடைய பயன்பாட்டின் உண்மைநிலையை அறிவதற்காக அனுப்பப்பட்ட குழுவின் தலைவராகத்தான் மெக்காலே அவர்கள் இந்தியாவிற்கு வந்தார். அவர் வருகின்றபோது இந்தியா முழுவதும் கல்விச் சாலைகள் என்று அடையாளப்பட்டு இருந்த அமைப்புகளைக் கண்ட அவர் மனம் உள்ளபடியே வருந்தியது. அங்கே தரப்பட்டது வாழ்க்கைக் கல்வி அல்ல என்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஒருபுறம் வேத பாடசாலைகள்; அங்கே சமஸ்கிருதத்தில் வேதபாடங்கள் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. அந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தின் ஒரு சாதியைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். மற்றொருபுறம் அரபி பாடசாலைகள்- மதரசாக்கள். அங்கே அரபி மொழியிலே இசுலாமிய மார்க்கக் கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி கொடுத்த கல்வி மானியம் வேதபாடசாலைகளுக்கும் மதரசாக்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டது. இவற்றைத் தவிர வேறு யாருக்காவது கல்வி கற்கவேண்டும் என்கிற விழைவு இருந்தால், அதற்கான வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தால் தங்கள் வீடுகளிலே திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்தி, தங்களுடைய பிள்ளைகளை எழுதப் படிக்க வைத்தார்களே தவிர, சமூகம் தழுவிய ஒரு கல்வி ஏற்பாடு அன்றைக்கு இல்லை.

மெக்காலே இதைப் பார்த்தவுடனே, இந்தக் கல்வியால் சாமானிய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எந்த விதத்திலும் உயராது என்ற முடிவுக்கு வந்தவராய், வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரையை கவர்னர் ஜெனரலுக்குப் பரிந்துரைத்து, அவரின் ஒப்புதலைப் பெற்று அந்த வாழ்க்கைக் கல்விமுறையை அறிமுகப்படுத்தியதுதான் மெக்காலே இந்த நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய சேவை.

மெக்காலே அவர்கள் இந்தியாவிற்கு வருகின்றபோது இங்கிலாந்தில் தொழில்புரட்சி நடந்து கொண்டிருந்த காலம். அங்கே உருவான தொழிற்சாலைகள் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து குவித்தன. உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உலகம் முழுவதும் கொண்டு சந்தைப்படுத்துவதற்கான சூழ்நிலை வந்தபோது, ‘இந்தியா ஒரு பெரும் சந்தைஎன்று அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் வேண்டும் என்று நினைத்தார்கள். அந்தத் தொழில்நுட்பங்களை இங்கே கொண்டுவந்து, அதன் மூலமாக இங்கே பொருள்களை உற்பத்தி செய்கின்றபோது அந்தத் தொழில்நுட்பத்தை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய திறன்பெற்ற தொழிலாளர்கள், அதைச் சிறப்பாகச் செய்யக்கூடிய கைவினைஞர்கள் தேவை என்று அவர்கள் உணர்ந்தார்கள். அவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கான கல்விதான் அன்று அவர்களுக்குத் தேவைப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் தேவைப்படுகின்ற குமஸ்தாக்களையும் கணக்கர்களையும் உருவாக்கப்படுவதற்காகவே தயாரிக்கப்பட்டது மெக்காலே கல்வி முறை. அது இந்தியாவினுடைய ஆன்மாவை அழித்துவிட்டது. இந்தியாவினுடைய கலாச்சாரத் தொன்மையை அழித்துவிட்டது. அதனுடைய பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்துவிட்டதுஎன்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றவர்கள், அந்தப் பண்பாட்டு அடையாளங்கள் என்னென்ன? அந்தக் கலாச்சாரச் சிதைவுகள் என்னென்ன? என்பதை வரிசைப்படுத்தவேண்டும். பாலிய விவாகத்தில் இருந்து, விதவைகள் மறுமணம் மறுக்கப்பட்டதுவரை கணவர் இறந்தவுடனே அவர்களுடன் உடன்கட்டை ஏறவேண்டும் என்கிற நிர்ப்பந்தமும், பெண்களுக்குக் கல்வியே தேவையில்லை என்கிற சூழ்நிலையும், சமூகத்தின் மேல்தட்டு மக்களாகிய ஆதிக்கச் சாதியினர் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்ற சமூகச் சூழலும்தான் அவர்கள் கூறுகின்ற பண்பாட்டு அடையாளங்கள்!

மெக்காலேயினுடைய கல்வித்திட்டம் வந்த பிறகுதான் சாமானிய மக்கள், அடித்தட்டு மக்கள், இன்னும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட - பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பினை முதன்முறையாகப் பெற்றனர். மெக்காலேயினுடைய கல்வித்திட்டம் நாட்டிலே அறிமுகப்படுத்தப்பட்டதன் வழியாகக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் பல குடும்பங்களில் முதன் முதலாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உருவானார்கள். அப்படி உருவானவர்கள்தான் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தார்கள். அரசு அலுவலகங்களில் வேலை பார்த்தார்கள். ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். தங்களது மக்களையும் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றி, இன்று அதன் தொடர்ச்சியாக உலக அளவிலே உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளர்களாக இந்தியர்கள் மாறி இருக்கிறார்கள் என்று கூறினால் மிகையாகாது.

நமது பிரதமர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணமாக காங்கிரசையும், தேசத்தின் முதல் பிரதமர் நேரு அவர்களையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. பா...வின் மதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல், வட இந்தியாவில் வேர் பிடித்ததைப் போல, தெற்கே செல்லுபடியாகவில்லை என்பதற்குக் காரணம், தென் மாநிலங்களில் பரவலாகியிருந்த கல்வியும், ஆங்கிலத்தில் படிக்கும் ஆர்வமும்தான் என்பது பா...வின் கருத்து.

சனநாயகம், சமூகநீதி, சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் ஐரோப்பியச் சிந்தனைகள்என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் பிதாமகர் கோல்வால்கர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பாரத மண்ணின் சாயலே இல்லை என்றும், அது முழுக்க முழுக்க நேரு, அம்பேத்கர் போன்ற ஐரோப்பியக் கலாச்சார ஆதரவாளர்களால் பாரதத்தின் பண்பாட்டு மரபைச் சிதைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆவணம் என்பதனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக அறிவித்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய முக்கியத் தலைவர்களும், சுதந்திர இந்தியாவைக் கட்டியெழுப்பிய பல முக்கிய அறிஞர்களும் இங்கிலாந்தில் படித்தவர்களாக இருந்ததால் அவர்களைமெக்காலேயின் கால்வருடிகள்என்று ஏளனம் செய்தவர்கள்தாம் நமது பிரதமரின் முன்னோர்கள்.

மெக்காலே உருவாக்கிய அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று நமது பிரதமர் கூறுவது, பா...வின் இந்துத்துவக் கருத்தியலை ஒட்டுமொத்த இந்தியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் புரிந்துகொள்கிறோம்.

அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆன்மிக நிகழ்வுகளாக இருந்தாலும் அரசியல் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் நமது பிரதமர் கூறிய கருத்துகள் வரலாற்றுப் பிழைகளாக இருப்பதால், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு வரலாறு அறிந்தவர்களுக்கு உண்டு. அதனைச் செய்யத் தவறினால் வளரும் தலைமுறை புனையப்பட்ட கதைகளை வரலாறு என நம்பி வீழும்.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே இந்தியச் சமூகத்தின் பண்பாட்டைச் சிதைத்த வில்லன்என்று நமது பிரதமர் குற்றம்சாட்டுவது நியாயமா? என்பதை இந்தியச் சமூகத்தின் முடிவுக்கே விட்டுவிடலாம்!

(தொடரும்)