news-details
சிறப்புக்கட்டுரை
பொம்மலாட்டம்

அரசியல் கட்சிகள் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்ற அடிப்படையில் செயல்படுபவை. தமிழ்நாட்டைப்  பொறுத்தவரை கட்சிகள் இடையே திராவிடம், தமிழ்த்தேசியம் என்ற பொதுப்பிரிவுகள் உள்ளன. .வெ..-வைப் பொறுத்தவரைத் திராவிடமும் தமிழ்த்தேசியமும் எனக் குழப்பநிலை எடுத்தது. .வெ.. கட்சி - தி.மு.. மற்றும்நாம் தமிழர்கட்சிகளின் கொள்கைகளை அப்படியே படியெடுத்தது. காங்கிரஸ், பா... போன்ற கட்சிகளோ தேசியம் பேசுகின்றன. இதில் இடதுசாரி, வலதுசாரி என்ற அரசியல் தனி.

.வெ.. அன்றாடச் செயல்பாட்டுக் கட்சியாக இல்லை. திருவிழாக் கூட்டமாகக் கூடி கலைகிற கொண்டாட்ட மனநிலையில் தலைவரும்  இரசிகர்களும்  இருக்கிறார்கள். அது தினப்படி நடவடிக்கை கொண்ட அரசியல் கட்சியாக இன்றும்  மாறவில்லை. அது தமிழ்நாட்டு அரசியலின் விளையாட்டுப் பிரிவு அரசியல் கட்சியாக உள்ளது.

நடிகர் விஜய் இப்படியாக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்: “சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்; வேடிக்கை பார்க்க எல்லாம் வெளியே வராது.” இதுதான் அவரது பொது அறிவு. எவரையும் சந்திப்பது இல்லை, எதற்கும் கருத்து தெரிவிப்பது இல்லை. பனையூர் பதுங்கு குழியில் படுத்தே விடுகிறார். திருநெல்வேலி ஆணவக் கொலையிலும், திருப்பரங்குன்றம் தீபமேற்றும் சர்ச்சையிலும் .வெ.. அமைதி காக்கிறது. வாக்குவங்கி  அரசியல் நடத்துகிறது. இது குறித்து அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி கேட்கப்படுகிறது. இன்னோவா புகழ் சம்பத் கூறுகிறார்: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது நல்லது.” பா... ‘இவர்தான் சிறுபான்மை மக்களின் வாக்குகளை வாங்கி, தி.மு..வைத் தோற்கடிப்பார்எனக் கனா காண்கிறது.

.வெ..-வைப் பொறுத்தவரைத் தி.மு.. எதிர்ப்பு, ‘நடிகர் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்என்ற அடிப்படையைத் தவிர, வேறு எதிலும் நாட்டம் காட்டுவதில்லை. பாண்டிச்சேரி சென்ற நடிகர் விஜய் அங்கும் தி.மு..வைத் தாக்கிக் குரல் கொடுக்கிறார். பா...வின் தி.மு.. வெறுப்பு அரசியலைத் தன் பங்கிற்குத் தானும் விதைக்கிறார். தமிழ்நாட்டில் விமர்சிப்பது தி.மு.. ஆட்சி என்று! அது சரி... ஒன்றிய அரசை விமர்சிப்பதில் மோடி ஆட்சி என்று கூற நடிகர் விஜய் அவர்களுக்கு என்ன தயக்கம்? 12 ஆண்டுகளாக ஒன்றியத்தை ஆளும் பா...-மீது  தாக்குதல்  இல்லை. பெயருக்கு அவர்கள்கொள்கை எதிரிகள்!’

32  ஆண்டுகளாக ஆண்ட, ஊழல் குற்றச்சாட் டில் தண்டனை பெற்ற .தி.மு.. குறித்து விமர்சனங்கள் இல்லை. அவ்வளவுதான் ஆச்சரியக்குறிகளின் அடையாள அரசியல்.

நடிகர் விஜய் பத்து நிமிடங்கள் தாளைப் பார்த்துப் பேசுவதற்குள் வேர்த்து, விறுவிறுத்துப் போகிறார். இது அவரின் புரிதலற்ற வெற்று அரசியலை வெளிக்காட்டுகிறது. தன் இரசிகர்களை அரசியல்மயப்படுத்தாமல் அவர்களிடம் திரைப்பட வசனங்கள் போல வீரவசனம் பேசுகிறார். அசட்டுச் சவால்களை அடுக்குகிறார். இலகான் கட்டிய குதிரை போல் இருக்கும் அந்தநண்பா-நண்பிகளும்பொதுவெளியில் தன் விஜய் கதாநாயகனின் முதல் நாள், முதல் படக்காட்சிக்கு வந்த இரசிக மனநிலையில் ஆர்ப்பரிக்கிறார்கள். அவர்களும் ஒழுங்குமுறைகளை விரும்புவது இல்லை. எல்லா நேரத்திலும் முட்டல்கள், மோதல்கள், அலறல்கள் என்ற புரிதலற்ற நிலையில் ஒருவிதப் போதையில் மிதக்கிறார்கள். இதன் வெளிப்பாடாக, ‘என் புருசனை விட விஜய்யைதான் ரொம்ப பிடிக்கும்என்ற புதிய தமிழ்க்கலாச்சாரம் பார்த்தோம். ‘குழந்தை முக்கியமல்ல... விஜய்தான் முக்கியம்என்று தன் குழந்தையை .சி.யூ.வில் விட்டு வந்த தாயையும் பார்த்தோம். தன் மகன் இறந்தாலும் பரவாயில்லை, விஜயைப் பக்கத்தில் பார்த்தோம் எனப் பெருமிதப்படும் பெற்றோரையையும் பார்த்தோம். இந்தச் சமூகம் எங்கே போகிறது?

கேரளாவில் புகழ்பெற்ற நடிகர்விருதுகளின் நாயகன்மம்முட்டி பேசுகிறார்: “கேரள மக்கள் திரையரங்குகளில் தங்கள் தலைவர்களைத் தேடுவதில்லை. அவர்கள் தங்கள் ஊரில் நன்கு தெரிந்த, நல்ல திறமை உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் நபர்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்ப்பார்கள். மீறி மக்களை ஏமாற்ற நினைத்தால் (‘நின்ற ஜோலியை நோக்கடா!’) என்று செருப்பைக் கழற்றி அடிக்கவும் தயங்க மாட்டார்கள்எனப் பாடம் சொல்கிறார். கேரள மக்கள் கரூர் பெரும் துயர நாள்களில் தமிழரின் இரசிக மனப்பான்மை குறித்துச் சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்தனர்; அங்கலாய்த்தனர். நடிகர்கள் வாக்கிற்காக எப்படியும் மாறுவார்கள்; எந்த அடிப்படை அறமும் இல்லாதவர்கள் என்பது கண்கூடு.

தமிழ்நாடு அரசின் இலவசங்கள் குறித்து .வெ..வில் சேர்ந்த நாள் முதல் மாமல்லபுரம் சிறப்புப் பொதுக்குழு வரை .வெ..வின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் வெளுத்து வாங்கினார். இலவசங்கள் குறித்த .வெ..வின் பார்வை ஓட்டு வங்கி அரசியலுக்கு உதவாது என்று தாமதமாக உணர்ந்த பின்பு  பேசுகிறார்கள்.

நவம்பர்-5-ஆம் தேதிக்கும், நவம்பர் 22-ஆம் தேதிக்கும் உள்ள இடைப்பட்ட  குறுகிய காலங்களில் .வெ..வின் முடிவு மாறுகிறது. காஞ்சிபுரம் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விஜய் பேசுகிறார்: ‘.வெ.. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்; கூடவே மோட்டார் சைக்கிளும், காரும் இணைப்பாகத் தரப்படும். 40 இலட்சம் வீடுகளும், 20 இலட்சம் மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படும்.’ இதற்கான திட்ட மதிப்பீடு விஜய்க்குத் தெரியாது. கார்கள் கணக்கெடுப்பில் இல்லை. எழுதிக் கொடுத்ததை வாசித்துச் சென்றார். எதையாவது சொல்லி, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற சங்கி அரசியலைவிட, மங்கி அரசியல் கேவலமானது. இவர்கள் அரசியல் அடிப்படை தெரியாமல், கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் இல்லாமல் .வெ.. என்ற கட்சியாகச் செயல்படுவது, பரபரப்பு செய்வது தமிழ்நாட்டு அரசியல் இதுவரை காணாத ஒன்று.

இணையத்தைத் திறந்தால் ஆயிரமாயிரம் பொய்கள்! பலநூறு பணியாளர்கள் அவதூறு பரப்ப .வெ.. கட்சி அலுவலகத்திலேயே பணிபுரிகிறார்கள். அதுபோல வடிவமைத்தப் பொய்களைஅவுட்-சோர்சிங்முறையில் காற்றில் பரவவிட பல இலட்சங்கள் செலவிடப்படுகின்றன. ‘பெய்டு-புரமோசன்செய்து ஓடாத படத்தை ஓடியதாகவும், ‘பாக்ஸ்-ஆபிஸ்தகவல்களைத் திரித்த நடிகரின் அனுபவம் அரசியலுக்குப் பயன்படுகிறது.

கடந்த மாதம் முழுவதும் காங்கிரஸ்- .வெ.. கூட்டணி என்ற  வதந்தி  பரப்பப்பட்டது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, அரசியலில் போக்கிடம் இல்லாத பழம்  பெருச்சாளிகளைக் கட்சியில் சேர்த்துப் பெருமை பேசுவது எனக் குறுக்கு, மறுக்கு அரசியலையும் புதிதாக  .வெ.. முன்னெடுக்கிறது.

.வெ..வினர் சரியான அரசியல் புரிதல் இல்லாமல் சமூக-அரசியல் நிகழ்வுகளை மனம் போனபடி .வெ..விற்கு ஏற்ப கற்பனைகளால் சித்தரிப்பது, தேர்தல் கணிப்புகள் என்ற பெயரில் புரட்டுகளைப் பரப்புகிறார்கள். .. தொழில்நுட்பம் வழி கனவுப் படங்களை வெளியிடுவது என அலைப்பேசியில் அநாகரிக அரசியல் செய்கிறார்கள். அவர்கள் வீதிகளுக்கு வந்து குடியாட்சித் தத்துவங்களைக் கற்று, தமிழ்நாட் டில் நாகரிக அரசியல் நடத்துவது நலம்.

2026-தமிழ்நாடு தேர்தல் களத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதில் .வெ.. எள்முனையளவும் நம்பிக்கை பெறவில்லை. அதற்கு முயற்சிக்கவும் இல்லை என்பதே சத்தியமான வார்த்தைகள்.

சிறுபான்மை மக்களும் உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பதைக் காலமே பதிலாகக்  காட்டும்.