news-details
சிறப்புக்கட்டுரை
இறைநம்பிக்கையின் தூதன்!

உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்ற இறைமைந்தன் இயேசுவின் வார்த்தைகளை வாழ்க்கையாக ஏற்று, நம் இந்தியத் திருமண்ணில் நம்பிக்கை வேர்விட, மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்து உழைத்த எண்ணற்ற மறைப்பணியாளர்களைப் பற்றிய வரலாறு நாம் அறிந்த ஒன்று. ஆனால், காலச்சுழற்சியில் இன்று நிலை தலைகீழாக மாறி, இருக்கின்றது. எங்கிருந்தோ இங்கு வந்து மறைப்பணியாளர்கள் இறைப்பணியாற்றிய நிலைமாறி இன்று நம் இந்திய மண்ணிலிருந்து மேற்கத்திய நாடுகளில் இறைப்பணியாற்றும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.  அந்த வகையில், நம் தமிழ் மண்ணில் பிறந்து, இறைநம்பிக்கையில் வளர்ந்து, இறையழைப்பை உணர்ந்து, அமலமரி தியாகிகள் சபையில் இணைந்து குருவாகி, இன்று கனடாவில் இருக்கும் மக்களுக்கு அருள்பணி. சூசை ஜேசு அவர்கள் ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியது.

2007-ஆம் ஆண்டு ஓர் இளம் துறவியாக கனடா நாட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் கீவாடின் லெ பா (Keewatin-Le Pas) என்ற மறைமாவட்டத்தில் வசிக்கும் பூர்வக்குடிமக்கள் மத்தியில் தன் பணி வாழ்வைத் தொடங்கினார். வெறுமனே திருப்பலி நிறைவேற்றுவது மற்றும் அருளடையாளங்களை வழங்குவது என்று தன் பணி வாழ்வை ஓர் எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல், மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொண்டு, கற்பதற்குக் கடினமான அவர்களின தாய்மொழியாகியக்ரீஎன்ற மொழியைப் பயின்று அவர் ஆற்றிய அரும்பணிகளால் இன்றும் அவர்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருக்கிறார். இப்படித்தான் சென்ற இடங்களில் எல்லாம் நிலவிய கடினமான சூழல்களையும் சவால்களையும் இன்முகத்தோடு எதிர்கொண்டு, தளராது இறைப்பணியாற்றுவதுதான் இவரது சிறப்பியல்பு.

தனிப்பட்ட விதத்தில் பெலிக்கன் நேரோஸ் (Pelican narrows) மற்றும் சாண்டி பே (Sandy Bay) ஆகிய பங்குத்தளங்களில் மக்களுக்கு மத்தியில் இவர் ஆற்றிய பணிகளை நானே கண்ணாரக் கண்டு வியந்திருக்கிறேன். அம்மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வுமுறை ஆகியவற்றோடு தன்னையே ஐக்கியப்படுத்திக்கொண்டு, ஒரு சிறந்த மறைப்பணியாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். இது எல்லாராலும் இயலும் என்று கூறமுடியாது. அம்மக்களில் பெரும்பாலானோர், முறையாகக் கல்வி பயில இயலாமல் ஏழ்மையில் இருப்பவர்கள். அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்தி கனடா நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நிதிதிரட்டி, அவர்களது ஏழ்மையைப் போக்கி, கல்வியில் உயர பல்வேறு முன்னெடுப்புகளை இவர் மேற்கொண்டார்.

துறவற வாழ்வின் வாக்குறுதிகளை வாழ்வாக்குவதில் இவர் காட்டுகிற உறுதியும், பணிவாழ்வில் இவர் காட்டுகிற சுறுசுறுப்பும் இவரிடமிருந்து எல்லாரும் கற்கவேண்டிய பாடம்! கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மத்தியிலும், மிகுந்த நேசத்திற்குரிய அருள்பணியாளராக இவர் திகழ்கிறார்.

இவர் ஆற்றும் மக்கள் பணிகளை இன்னும் மகத்தானதாக்கும் விதமாக, மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதல் (Pastoral Coun selling) பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், இதன் வழியாகவும் மக்களைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தற்போது, எட்மண்டன் மறைமாவட்டத்தில் உள்ள அம்மண்ணின் பூர்வக்குடிமக்களுக்கான திரு இருதயத் தேசியத் திருத்தலத்தில் தொடர்ந்து தன் வாழ்வாலும் வார்த்தைகளாலும் மக்களை இறைநம்பிக்கையில் வளர்த்து வருகின்றார்.

எது நடந்தாலும், அது இறைவனின் சித்தம்என்று அடிக்கடி இவர் உதிர்க்கின்ற வார்த்தைகள், இறைப்பராமரிப்பில் இவர் கொண்டிருக்கிற அளப்பரிய நம்பிக்கையின் வெளிப்பாடு. இறைவன் தொடர்ந்து இவரைத் தம் பராமரிப்பில் வைத்துக் காக்கவும், இவர் வழியாக இன்னும் பலர் இறைநம்பிக்கையில் வளரவும் இவருக்காகச் செபிக்கிறேன், வாழ்த்துகிறேன்!