திருப்பலி முன்னுரை
இயேசுவின்
திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று, திருமுழுக்கின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறிந்துகொள்ள அன்னையாம் திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசுவின் திருமுழுக்கு மூவொரு இறைவனின் பிரசன்னத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. “என் அன்பார்ந்த மைந்தர் இவரே” என்ற தந்தையாகிய இறைவனின் வார்த்தையும், புறா வடிவில் தூய ஆவியின் வருகையும் இயேசுவின் இறைச்சாயலை நமக்கு உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் திருமுழுக்கு அவரது பணிவாழ்வுக்குத் தொடக்கமாக அமைந்தது. திருமுழுக்குப் பெற்றபின் இயேசு அளப்பரிய பணிகளைச் செய்து, உயிரையும் கொடுத்து இந்த மனுக்குலத்தை மீட்டார். திருமுழுக்கு நம் வாழ்வின் அடித்தளம்; நாம் தூய ஆவியில் வாழ்வதற்கான நுழைவாயில். இதுவே நம்மை இறைவனின் பிள்ளையாக மாற்றுகிறது; திரு அவையில் நம்மை இணைத்து, அதன் பணிப்பொறுப்பை நமக்குத் தருகிறது. திருமுழுக்கு என்னும் அருளடையாளம் இறைவார்த்தைக்குச் சான்றுபகர நமக்கு அழைப்புவிடுக்கிறது. எனவே, திருமுழுக்கின் வழியாக இறைச்சாயலையும் இயேசுவின் உடனிருப்பையும் தூய ஆவியின் ஆற்றலையும் பெற்றுக்கொண்ட நாம், இயேசுவுக்குச் சான்றுபகரவும், நாம் பெற்றுள்ள திருமுழுக்கின் மகத்துவத்தை அறிந்து, கொடுத்த வாக்குறுதியைக் கடைப்பிடித்து வாழவும் நாம்
கிறிஸ்துவை நமது வாழ்க்கையால் அறிவிக்கவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இறைவனின்
பணியை ஆற்றலுடன் செய்ய நாம் தொடங்கும்போது அவர் நம் கைகளைப் பற்றிப் பிடித்து நம்மைப் பாதுகாப்பார், நாம் செல்லும் இடமெல்லாம் ஒளியாக இருந்து வழிநடத்துவார், பல வல்ல செயல்கள்
நம் வழியாக நிகழ்த்துவார். எனவே, இறைவார்த்தை காட்டுகின்ற நெறிகளில் நடந்து, கடவுளின் கண்களுக்குப் பேறுபெற்ற மக்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
திருமுழுக்கின்
வழியாக நாம் தூய ஆவியின் வல்லமையைப் பெறுகின்றோம். தூய ஆவியார் நமக்கு நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலைத் தருகின்றார். இறையாட்சிப் பணியைச் செய்வதற்குப் புதிய உத்வேகத்தைத் தருகின்றார். திருமுழுக்குப் பெற்றுள்ள நாமும் இயேசுவைப் போன்று இச்சமூகத்தில்
நல்லவற்றை மட்டும் விதைத்து, பலன் கொடுத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘நீரே என்
அன்பார்ந்த மைந்தர்’ என்று கூறிய ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கவும், காலத்திற்கேற்ப விழிப்புடன் பணி செய்யத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘என் அருள்
உனக்குப் போதும்’ என்று கூறிய ஆண்டவரே! திருமுக்குப் பெற்ற நாங்கள் இயேசுவை
அறிவதில், அன்பு செய்வதில் கருத்துடன் செயல்படவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி நாளும் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நீ எனக்கே
சொந்தம்’ என்று
கூறிய ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும், பங்கிலுமுள்ள அனைத்துக் குடும்பங்களும் தங்களுடைய வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்றுபகரவும்,
ஆசிபெற்ற மக்கள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஆண்டவரே!
எம் பங்கிலுள்ள குழந்தைகள் அனைவரும் சிறுவயதிலேயே இயேசுவைப் பற்றி அறிவதிலும், இறைவார்த்தையைப் படிப்பதில் சிறந்திடவும், திருவழிபாட்டு நிகழ்வுகளின் மகத்துவத்தை அறிந்து ஈடுபாட்டுடன் பங்கேற்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.