news-details
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

புத்தகக் காட்சியில் இடம்பெறும் அரங்குகள் வெறும் கடைகள் அல்ல; அங்குள்ள புத்தகங்கள் வெறும் காகித அச்சு எழுத்துகளைக் கொண்டவையும் அல்ல; புத்தகங்கள் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதால், அவை அறிஞர்களாகக் கருதப்படுகின்றன. புத்தகக் கடைகள் அறிஞர்கள் குடியிருக்கும் அறைகளாகவே உள்ளன. அறிஞர்களிடம் நமக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதுபோல, புத்தகங்களைப் படித்தும் நாம் அறிவுத்தெளிவைப் பெற்று வருகிறோம். ஆகவே, புத்தகங்கள் உயிரற்றவை என்பது சரியல்ல; அறிவானது இயற்கைப் பொது அறிவு, படிப்பறிவு, பட்டறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு எனப் பலவகை. பகுத்தறிவு என்பது பிறர் கூறுவதை ஏற்க வேண்டுமெனில், அதற்குத் தக்க விளக்கம் தேவை எனக் கேட்பதாகவே உள்ளது. பல நூல்களைப் படித்தாலே தெளிவாகப் பேசமுடியும். ஆகவே, புத்தகப் படிப்பென்பது நம்மை மேம்படுத்துவதாகவே அமையும்.”

திருச்சி சிவா எம்.பி.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் எனச் சுமார் 59,000 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 1.20 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களிடையே பாடப் புத்தகங்களைக் கடந்து பொது வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து வருவதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவற்காக மாவட்டவாரியாகப் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், புத்தகம் வாங்கும் அளவுக்கு இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக, பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு மேம்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது கைப்பேசி பயன்பாட்டுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் புத்தக வாசிப்பிற்கு மாணவர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் மாநில அரசுகள் அங்குள்ள பள்ளிகளில் நாளிதழ் வாசிப்பைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவு மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதோடு, பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட பல தகவல்களை அறிந்து கொள்வதற்கு உதவும்.” 

பொது நூலகத்துறை, தமிழ்நாடு அரசு

பல அறங்களைத் தமிழர்களுக்குத் தனது குறள் வழியாகக் கூறி, தமிழனாகப் பிறந்த நம்மைத் தலைநிமிரச் செய்தவர் திருவள்ளுவர். ஆகவே, கடைசி மனிதனின் உயிர் இருக்கும் வரை திருக்குறள் நிலைத்து நிற்கும். குறளின் பொருளைக் குழந்தைகளுக்கு முறையாகக் கொண்டு சேர்ப்பது அவசியம். வள்ளுவர் காவியம் படைத்திருந்தால் அது உலகை வென்றிருக்கும். அழகை ஆராதித்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அழகையேமுருகுஎனக் கடவுளாகக் கண்டவர்கள். அத்தகைய அழகை ஆராதித்த வள்ளுவரை உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழர்கள் ஏற்றிடவேண்டும். தமிழை வீட்டுச் சொத்தாகவும் நாட்டுச் சொத்தாகவும் ஆக்கிக்கொள்ளவேண்டும்.”

கவிஞர் வைரமுத்து