புனித அவிலா தெரேசாவின் கார்மல் சபையான எம் சபை தூய ஆவியின் துணையால், கார்மல் அன்னையின் ஆசியால் ஆன்மிகப் பணியிலும் மறைப்பணியிலும் சிறந்து வேரூன்றி காணப்படுகிறது. செபமும் சேவையும் இணைந்த வாழ்க்கை முறையால், மனித சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது. குறிப்பாக, ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களின் நலனுக்காக எம் சகோதரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
கல்விப் பணி
கல்விப்
பணி எம் தெரேசாவின் கார்மல்
சபையில் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். எம் சகோதரிகள் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களை நிர்வகிக்கின்றனர்.
கிறித்தவ மதிப்பீடுகளின் அடிப்படையில் தரமான கல்வியை வழங்குகின்றனர். ஏழைகள் மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துகின்றனர். மேலும், மாணவர்களின் அறிவு, ஒழுக்கம், ஆன்மிகம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கின்றனர். இந்தப் பணிகளின் மூலம் நல்ல குடிமக்களையும், உறுதியான மற்றும் திடமான நம்பிக்கையாளர்களையும் உருவாக்குகின்றனர்.
மருத்துவப் பணி
இயேசுவின்
குணப்படுத்தும் பணியைத் தொடரும் எம் சகோதரிகள் மருத்துவமனைகள், மருந்தகங்கள், சிகிச்சை மையங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் சேவை செய்கின்றனர். நோயாளிகள், முதியோர், நீண்ட நாள் நோயாளிகள் ஆகியோருக்குப் பணிவுடன் பராமரிப்பு அளிக்கின்றனர். சுகாதார விழிப்புணர்வையும் அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று கற்பிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆன்மிக ஆதரவை வழங்குகின்றனர். இந்த மருத்துவப் பணியை உடல், மனம் மற்றும் ஆன்மாவைச் சீரமைக்கும் பணியாக எம் சபை சகோதரிகள் செய்து வருகின்றனர்.
சமூகப் பணி
சமூக
நலனுக்காக எம் சகோதரிகள் ஏழைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பணியாற்றுகின்றனர். மறுவாழ்வு மையங்கள், போதைப்பழக்கம் உள்ளவர்களுக்குச் சிறப்பு ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்துகின்றனர்.
சமூகத்தின்
அடிப்படையான அழகான குடும்பங்களை வலுப்படுத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்புகள் மற்றும் குடும்ப ஆலோசனைகளை வழங்குகின்றனர். பெற்றோர் வழிகாட்டல் மற்றும் இளைஞர் வளர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். குடும்பங்களில் நம்பிக்கை மற்றும் மதிப்பைப் பெற்றுத் தரும் கல்வியை வளர்க்க உதவுகின்றனர். சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் துணை நிற்கின்றனர்.
சிறைப்பணி
சிறைக்
கைதிகளுக்கு ஆன்மிக வழிகாட்டல், ஆலோசனை மற்றும் மன ஆதரவை வழங்குகின்றனர்.
மேலும், அவர்களுக்கு நம்பிக்கை பகிர்வு மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்தப் பணி சமூகத்தின் ஓரங்கட்டப்பட்டவர்களிடையே கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறது.
இறுதியாக,
தூய தெரேசாவின் கார்மல்
சபையான என் சபை தியானமும்-செயலும் இணைந்த வாழ்க்கை முறையால் கிறிஸ்துவின் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுகிறது.
செபத்தால்
வழிநடத்தப்பட்டு, அன்பால் வலுப்பெற்ற சகோதரிகள், உலகில் இறைவனின் அன்பின் சாட்சிகளாகத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.