‘மரத்தை மறைத்தது மாமத யானை’ என்ற தமிழ்ச் சொல்வழக்கைப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடும். மரத்தைச் செதுக்கிச் செய்யப்பட்ட யானையின் வடிவத்தால் அல்லது உருவத்தால் மரம் மறைந்து போயிற்று என்பர். மரத்துள் பொதிந்த யானையைச் சமயங்கள் போதிக்கும் சிலை வழிபாட்டை நியாயப்படுத்த எடுத்தாளப்படும் சொல் வழக்கே இது. ‘இச்சொல் வழக்கிற்கும் இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு?’ என்ற வினாவொன்றை எழுப்பினால் அதில் தவறில்லையே!
கிறிஸ்து
பிறப்பு எனும் விழா நடந்து முடிந்து போயிற்று. தமிழ்நாட்டு மக்கள் இறைமகன் பிறப்பு விழாவை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு சமயம் சார்ந்த விழாவைச் சுதந்திரமாகக் கொண்டாடினர்; அச்சமின்றிக் கொண்டாடினர். ‘அச்சமின்றி’ என்ற
சொல்லை உபயோகிக்க வேண்டிய காரணம் என்பது பற்றி மக்கள் அறிவர். இந்தியா முழுமையும் வளர்க்கப்பட்ட பகை அரசியலின் ஆபாச வெளிப்பாடுகளைக் கிறிஸ்துமஸ் விழாக்களில் காண முடிந்தது. இடதுகளின் வலுமிகுந்த அண்டை மாநிலமாம் கேரளமும் தப்பாத நிலையில், தமிழ்நாடு தப்பியது.
‘தமிழ்நாடு தப்பியது’
என்று பெருமைப்பட்டுக்கொள்ள காரணம் உண்டு. ஏற்கெனவே மண்டைக் காட்டைச் சந்தித்த தமிழ்நாடு, அண்மையில் திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்ட வகுப்புவாதத் தீ எரியூட்டப்பட்ட நிலையிலும்,
தமிழ்நாட்டில் கிறிஸ்து பிறப்பு தரும் அமைதி (Peace) நிலவியது;
தமிழ்நாடு முழுமையாக அமைதிப் பூங்காவாக மாறாத நிலையிலும், மதவாதப் பிரிவினை நோயின் வேகம் கொஞ்சம் தணிந்து வீசுவதற்கு தமிழ்நாட்டின் சூழமைவு ஒரு காரணமாக இருக்கலாம்; ஆளும் அரசின் மதவாத அரசியல் எதிர்ப்பும், மதச்சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதமும் காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில்
கிறித்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா, புதிய உதயமான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவும் பாராட்டுக்குரியன. இரண்டு விழாக்களிலும் இயேசு கொண்டாடப்பட்டாரோ... என்னவோ, இயேசு எனும் இறை மகன் மதம் கடந்து அறிமுகமானார் என்ற செய்தி மகிழ்வைத் தருவதே.
கிறித்தவ
நல்லெண்ண இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் சிறப்பிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் வாழும் கிறித்தவர்களின் நலன் கருதி, அவர்தம் உரிமை கருதி முன்னெடுக்கப்பட்ட அரசின் திட்டங்கள் வானளாவப் புகழப்பட்டன.
‘கிறித்தவர்களாகிய மதச் சிறுபான்மையினர் இன்று அச்சமின்றிப் பாதுகாப்போடு வாழ்கின்றமைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருணையே காரணம்’ என்றெல்லாம் புகழப்பட்டார். இப்புகழுரைகள் அனைத்தும் உண்மைக்குச் சான்றுபகரும் உண்மைகளே.
தமிழ்நாட்டின்
அனைத்து எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வை முதல் எதிரியாகக்
கட்டமைத்து வீழ்த்தி விடத் துடித்துக்கொண்டிருக்கும் சூழலில், துணிவாக எதிர்கொள்ளும் ஸ்டாலின் பாராட்டப்பட வேண்டியவரே! அதுவும் மதவாதக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழ்நாட்டு முதல்வரை இந்துகளின் எதிரியென்றும், சிறுபான்மை மக்களை வாக்கு
வங்கியாகப் பயன்படுத்துகிறார் என்றும், மதச் சிறுபான்மையினரைத் திருப்தி செய்வதே முதல்வரின் நோக்கம் என்றும் கொச்சைப்படுத்தி வருகையிலும், தளராமல் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் முதல்வர் பாராட்டுக்குரியவரே. இவ்விழாவில்
உரையாற்றிய தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்களின் உரை கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. இவர் உரையில் கிறித்தவம் தமிழுக்கு, தமிழ் மண்ணிற்கு அளித்த அரிய கொடைகளை எடுத்துக் கூறியமை மகிழ்வைத் தந்தது.
எனினும்,
கூடிய கூட்டத்தினரையும் தாண்டி, ஊடக வழியும் இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுவெளி மாந்தருக்குக் கிறித்தவ மதம் சார்ந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் கிறித்தவம் எங்குமே முதன்மை பெறவில்லையே! கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், இக்காலத்தில் கிறிஸ்து பிறப்பின் ஏற்புடைமை, கிறித்தவம் உலக ஒருமைக்கு, சமயப் பொறைக்கு, சமயங்களின் உரையாடலுக்கு, சமூகங்களின் நல்லிணக்கத்திற்கு ஆற்றிவரும் ஒப்பற்றப் பணியை எங்கேயாவது எடுத்துக் கூறியிருக்க வேண்டாமா?
மேற்கண்ட
உயரிய கொள்கைகளைக் கொண்ட கிறித்தவம், தானாற்றும் ஒப்பற்ற அருள்பணிகளால் உயர்ந்து நிற்கும் கிறித்தவம், கிறிஸ்து காட்டிய அர்ப்பணத்தைக் கருவியாகக் கொண்டுதான் பணியாற்றும். நாட்டின் இறையாண்மையை, ஒருமையை, ஒற்றுமையை, உயிர்க்கொள்கையாம் மதச்சார்பின்மையைக் காக்க தமிழ்நாடு அரசோடு கை கோர்ப்போம் என்று
எடுத்துரைக்க வேண்டாமா?
என்னுடைய
ஆதங்கமெல்லாம் நற்செய்தி அறிவித்தலை மையக்கொள்கையாகக் கொண்ட கிறித்தவம், இக்கொள்கைக்கு முரணான இன்றைய ஆளும் கருத்தியலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிப் பேசியிருக்க வேண்டாமா?
த.வெ.க.வின்
கிறிஸ்துமஸ்
விழா
அண்மையில்
உதயமாகி தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவரும் விஜய் தலைமையிலான கட்சியும் கிறிஸ்துமஸ் விழாவை நடத்திக்காட்டியது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆயர்கள் எவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கு என்ன காரணம்? அதுவும் மகிழ்ச்சியே.
விழாவில்
இயேசுவின் அன்பு, கருணை பற்றிப் பேசினார் விஜய். திருவிவிலியத்தின் யோசேப்பு கதை பற்றிப் பேசினார். ஆனால், யோசேப்பு வளர்த்த இயேசு பற்றி பேசவில்லை. இயேசு பற்றிப் பேச இவருக்குத் தைரியம் வராது என்பதுதான் உண்மை.
இவரை
விட்டுவிடுங்கள். இவரைத் தொடர்ந்து வந்த துதிபாடிகள் என்ன பேசினர்? துதிபாடிகளில் சிலர் கத்தோலிக்க மறையைச் சார்ந்தவர்களும் உண்டு என்பதுதான் இங்குக் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசவில்லை. அரசியல் அதிகாரத்தை, தான் சம்பாதித்த திரைப்புகழ் மூலம் கவர நினைக்கும் ஒரு திரையுலக கதாநாயகரைப் புகழ்வதிலேயே அக்கறை காட்டினர். கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் பேசியிருக்க வேண்டாம்; கிறிஸ்துவை முன்னிறுத்தி சில விழுமியங்களையாவது எடுத்தியம்பியிருக்கலாமே, விழாவில் விஜய் இருந்தார்; இயேசு இல்லை என்பதே உண்மை.
அரசியலாருக்கு
இம்மாதிரி விழாக்களை நடத்துவதிலும் கலந்துகொள்வதிலும் அரசியல் நோக்கமிருக்கலாம். இவ்விழாக்களை முன்னெடுக்கும் கிறித்தவ அமைப்புகள், இவ்விழாக்களை ஆதாயப்படுத்திக்கொள்வது பற்றி யோசிக்க வேண்டாமா? தமிழ்நாட்டை ஆளும் அரசு மதச்சிறுபான்மையினரின் ஆதரவு அரசாக இருக்கலாம். ஆதரவு தராத நிலையிலும் நாம் கட்டிக்காக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என்பது பற்றிய தெளிவான சிந்தனையைத் தெரிவிக்க வேண்டாமா?
1925-ஆம் ஆண்டு
உருவான ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை எட்டிய நிலையில், ‘நாம்’
(இந்துகள்), ‘அவர்கள்’
(மற்றவர்கள்) என்று மக்களைப் பிளவுபடுத்தி ஒடுக்கும் அரசியலை, ஒதுக்கும் அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி கண்டு வருதலின்போது, கிறித்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழா போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்?
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மக்களிடம் முன்வைக்கும் கருத்தியல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இக்கருத்தியல் பிரிவினையை உள்ளடக்கியது. இக்கருத்தியலில் எந்த முற்போக்குக் கொள்கையும் இல்லை. இதே கருத்தியல்தான் காந்தியின் கொலைக்குக் காரணமாயிற்று. இக்கருத்தியல்தான்
அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தியது. இதே கருத்தியலால் ஈர்க்கப்பட்டோர் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து, மனுஸ்மிருதியை அரசியல் சாசனமாக அறிவிக்கக் குரல் கொடுத்தனர். கடந்த நூறாண்டுகளாகத் திட்டமிட்டு விதைக்கப்பட்டு மக்கள் நெஞ்சங்களில் ஊடுருவியதன் விளைவே மதம் பற்றிய உச்ச நீதியரசரின் கருத்தின்போது செருப்பைக் கழற்றி எறியச் செய்தது” (Front Line. Dec. 15,
2015).
வகுப்புவாத
நச்சு பற்றி, பா.ச.க.வின் அரசியல் கருத்தாக்கம் பற்றி நம் அமைச்சர்கள் எவ்வளவு தெளிவு பெற்றிருக்கிறார்கள்? தெளிவு இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முன்வருவார்களா? அமைச்சர்களை விட்டுவிடுங்கள்... நம் மறையாளர்களில், இக்கருத்தியல் பற்றிய தெளிவு எத்தனை பேருக்கு உள்ளது? சனநாயக அரசு மக்களுக்குப் பதில்கூற வேண்டுவது கட்டாயமென்பதுபோல், மதச் சிறுபான்மையோர் மத அடையாளத்தைச் சமரசமின்றிப்
பேணவும், மதங்கடந்து சமூகப் பாதுகாப்பையும் வளர்ச்சி நோக்கில் உத்தரவாதப்படுத்த வேண்டுவதும் கட்டாயமாகும். தமிழ்நாட்டின் மதவாத எதிர்ப்பு அரசியலில் தயக்கமின்றி எழுந்து நிற்போம்.