அன்னை எலிஸ்வா அவர்கள், கேரளாவில் பெண்களுக்கான துறவற வாழ்வின் முன்னோடியாகவும், ‘பாதுகையற்ற கார்மல் சபையின் மூன்றாம் நிலை’ (TOCD) சபையின் நிறுவுநருமாவார். கேரளத் திரு அவை வரலாற்றில் அவர் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். நற்செய்தி விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட கிறித்தவக் கல்வியையும், முழுமையான ஆளுமை உருவாக்கத்தையும் பெண்களுக்கு வழங்கும் நோக்கில், அவர் கேரளாவின் முதல் பள்ளிக்கூடம், முதல் கன்னியர் இல்லம் மற்றும் பெண்களுக்கான முதல் ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றை நிறுவினார்.
தொம்மன்
மற்றும் தாண்டா ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் மூத்தவராக 1831, அக்டோபர் 15 அன்று கேரளாவின் வராப்பொலி மறைமாவட்டத்திலுள்ள ஒச்சந்துருத்து குரூஸ் மிலாக்ரஸ் பங்கில், வைப்பிசேரி எனும் உயர்குடியில் எலிஸ்வா பிறந்தார்.
தீண்டாமையும்,
சாதிப்பாகுபாடும் நிறைந்திருந்த 19-ஆம் நூற்றாண்டுச் சூழலில், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது அவர் காட்டிய இரக்கமும் அன்பும் அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது. 1847-இல் கூனமாவு பங்கைச் சார்ந்த வதருவாகயில் என்பவரைத் திருமணம் செய்த எலிஸ்வாவுக்கு, 1850-இல் அன்னா என்ற மகள் பிறந்தார். 1851-இல் கைம்பெண்ணான அவர், 1852 முதல் 1862 வரை செபத்திலும், துறவற வாழ்வின் ஆழத்தைப் புரிந்துகொள்வதிலும் தன்னை அர்ப்பணித்து ஒரு தவ வாழ்வை மேற்கொண்டார்.
1862-இல் செபத்தில்
இருந்தபோது இறைவனின் அழைப்பை உணர்ந்த அவர், அதைத் தந்தை லியோபோல்டு பெக்காரோ OCD அவர்களிடம்
பகிர்ந்துகொண்டார். அவரிடம் கார்மல் சபைக்கான தனிவரத்தை அடையாளம் கண்ட தந்தை லியோபோல்டு, அவருக்கு ஆன்மிக வழி காட்டினார். எலிஸ்வாவின் மகள் அன்னாவும் மற்றும் சகோதரி தெரேசியாவும் அவரைப் பின்பற்ற விரும்பினர். இது குறித்துப் பேராயர் பெர்னார்டின் பாச்சினெல்லி OCD அவர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டபோது,
அவர் ஒரு புதிய சபையைத் தொடங்க சபைத் தலைவரின் (Superior General) அனுமதி
பெற்றார்.
1866, பிப்ரவரி 12 அன்று
பெண்களுக்கான ‘பாதுகை அணியா கார்மல் சபையின் மூன்றாம் நிலை’
(TOCD) சபையைத்
தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் பேராயர் கையெழுத்திட்டு எலிஸ்வா, அன்னா மற்றும் தெரேசியா ஆகியோரை இச்சபையின் தொடக்க உறுப்பினர்களாக அறிவித்தார்.
அன்னை
எலிஸ்வா தொடங்கிய இச்சபையின் தனிவரமானது, கடவுளுடனான ஆழமான தியான ஒன்றிப்பையும், திரு அவைக்கு ஆற்றும் பிறரன்பு மற்றும் சமூகப் பணி வாழ்வுமாகும். மேலும், ‘கிறிஸ்துமீது பற்று, மனித நேயத்துடனான இரக்கம்’ என்பதே அவரது வாழ்வின் தாரக மந்திரமாக இருந்தது.
1890-இல் பெண்களுக்கான
TOCD சபையானது
இலத்தீன் மற்றும் சீரோ-மலபார் வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் ‘தெரேசியன் கார்மல் சபை’
(CTC-இலத்தீன்
வழிபாட்டு முறை) மற்றும் ‘கார்மல் அன்னையின் சபை’
(CMC சீரோ
- மலபார் வழிபாட்டு மறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
கேரளாவின்
முதல் பெண் துறவியும், பெண்களுக்கான முதல் சுதேச (Indegenous) துறவற
சபையின் நிறுவுநருமான அன்னை எலிஸ்வா, 1913, ஜூலை 18, வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் தனது 82-வது வயதில் அன்னை மரியாவின் திருப்பெயரை உச்சரித்தபடியே இறைவனடி சேர்ந்தார்.
அன்னை
எலிஸ்வா அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அவர் தனது கடைசி 23 ஆண்டுகளைக் கழித்த வராப்பொலி தூய யோசேப்பு கன்னியர் இல்ல வளாகத்தில் உள்ள ‘ஸ்மிருதி மந்திர்’
(நினைவு இல்லம்) எனும் கட்டடத்தில் அமைந்துள்ளது.
இன்று
கேரளா முழுவதும் எண்ணற்ற கன்னியர் இல்லங்களும், ஆயிரக்கணக்கான துறவற சகோதரிகளும் உருவாக அன்னையின் முதல் முயற்சியே காரணமாக அமைந்தது. 1971 வரை மறைமாவட்டப் பேராயர் கண்காணிப்பின் கீழ் இருந்த இச்சபை, திருத்தந்தையின் அங்கீகாரம் (Pontifical Status) பெற்றது.
2005, ஏப்ரல் 12 அன்று
அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் நடந்த புதுமைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து 2025, நவம்பர் 8 அன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் அவர் ‘அருளாளர்’
(Blessed) நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
அவரது
மறைவிற்குப் பிறகு, புனித வாழ்வு குறித்த அவரது நற்பெயர் வராப்பொலி பகுதியில் தொடங்கி விரைவாக எங்கும் பரவியது. அவரது வலிமையான பரிந்துரையால் சாத்தியமற்ற பல காரியங்கள் நிறைவேறியுள்ளன;
சிக்கலான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக,
குழந்தை இல்லாத தம்பதியர் பலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. இத்தகைய ஏராளமான நிகழ்வுகள் அங்கே பதிவாகியுள்ளன. மேலும்,
கடன் தொல்லைகள் தீர, நல்ல வேலை கிடைக்க, பிரிந்த உறவுகள் ஒன்றுசேர, தீராத நோய்கள் தீர... எனப் பலரின் வேண்டுதல்கள் கேட்கப்பட்டு, அன்னையின் பரிந்துரையால் குறை நீங்கப் பெற்று வருகின்றனர். அன்னையின் பரிந்துரையால் நாமும் நமது துன்பங்களிலிருந்து வெளி வர நம்பிக்கையோடு செபிப்போம்.