குழித்துறை மறைமாவட்டம் யூபிலி ஆண்டு 2025-ஐ முன்னிட்டு சிறப்புத் திட்டமாக, குழித்துறை திரு அவை வீடற்ற எல்லாருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் ‘வாழும் குடில் திட்டத்தை’ முதன்மைப் பணியாக இந்த யூபிலி ஆண்டில் முன்வைத்து, ஒரு பங்கிற்கு ஒரு வீடு எனத் திட்டமிட்டுச் செயல்பட அழைப்பு விடுத்தது. இத்திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், பங்கு அருள்பணிப்பேரவை நிர்வாகிகள், அடித்தள முழு வளர்ச்சி சங்க நிர்வாகிகள் மற்றும் இறைமக்கள் என அனைவரும் இணைந்து உழைத்ததன் பயனாக தற்போது குழித்துறை மறைமாவட்டத்தில் சுமார் 4 கோடி மதிப்பில் 51 புதிய வீடுகள் பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 30 வீடுகள் பழுது நீக்கி பராமரித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
இது
குறித்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் கூறும்போது, “மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்ற
இயேசுவின் வார்த்தைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்ததாகவே இத்திட்டத்தின் வெற்றியைப் பார்க்கிறேன். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்ததன் மூலம் இயேசுவுக்கே வீடு கட்டிக் கொடுத்ததாக உணர்கிறேன்” என்றார்.
மேலும் அவர், “எம் குழித்துறை மறைமாவட்டத்தில் - இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘வீடற்றவர்கள் இல்லை’ எனும் நிலை வரும் வரை இத்திட்டம் தொடரும்” என்றார். இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வில், சமயமோ பங்கு உறுப்பினர் என்ற உரிமையோ முதன்மையாக்கப்படாமல், யார் அதிகத் தேவையில் இருக்கிறார்கள் என்பதே முதல் தகுதியாகப் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.