news-details
சிறப்புக்கட்டுரை
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வலையும் வாழ்வும் - 35)

என்ன சேசு சித்தப்பா, இரயில்வே ஸ்டேசனுல பாக்க முடியுது? எங்க தூரமா?”

கோட்டாறு இரயில்வே ஸ்டேசனின் பிளாட்பார இருக்கையில் அமர்ந்திருந்த சேசையாவிடம் அக்கறையோடு கேட்டான் ஸ்டீபன்.

அதுதான் உனக்குத் தெரியுமே, அந்த வழிப்பாதை பிரச்சினை. கோர்ட் கேஸ் எப்போ முடியுமுணு தெரியலை. அதுக்கப்பாட்டுக்கு இழுத்தடிச்சிக் கிட்டிருக்கு. அதான் திடீர்னு சென்னை கோர்ட்டுக்கு நம்ம வக்கீல் வரச்சொன்னாருஎன்று தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டார் அவர்.

ஆனாலும் உங்க பெரியப்பா பையனுக்கு வீம்பு அதிகம்தான் சித்தப்பா. வயசான காலத்துல கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போனாதான் என்னவாம்? வழிப்பாதைதானே கேட்கிறீங்க. அவர் வீட்டையா கேட்டீங்க?”

அத விடு சவத்த. நீ எங்க போற?” என்று ஸ்டீபனை அதைப்பற்றிப் பேசவிடாமல் செய்தார் சேசையா.

இல்ல, என் மவா ஆறு மணி வண்டியில லீவுக்காக வர்றா. அதான் கூட்டிட்டுப்போக வந்தேன். அதோ, ட்ரெயின் வந்திடுச்சு. சரி, நீங்க போயிட்டு வாங்கஎன்று சொல்லி விடைபெற்றுச் சென்றான் ஸ்டீபன்.

சேசையா, தான் வாங்கிப் படித்துக்கொண்டிருந்த பேப்பரைப் பக்கத்தில் மடித்துவைத்துவிட்டுத் திரும்பும்போது, தாசன் அப்பக்கமாக ஒரு தோள் பையை மாட்டிக்கொண்டு வேட்டி அணிந்த கோலியாத்தாகச் சென்றுகொண்டிருந்தார்.

இந்த தாசன்தான் தன் வழிப்பாதையை சேசையா வளைத்துப்போட்டதாகக் கேஸ் கொடுத்தது. அண்ணன் மகன் என்றாலும், அவர்களுக்கிடையே இரண்டு ஆண்டுகளாக இருந்த பகை மட்டும் தீரவே இல்லை. ஊர்ப்பெரியவர்கள், அருள்பணியாளர்கள் என்று எல்லாரும் நியாயம் பேசிப் பார்த்த பிறகும் இரண்டு குடும்பங்களும் சமாதானம் ஆனப்பாடில்லை. இந்த நிலையில்தான் தாசனும் அதே கேஸ் விசயமாக சென்னைக்குப் போக இரயில்வே ஸ்டேசன் வந்திருக்கிறான்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சரியாக மாலை 6.20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்புக்கு அலறிக் கொண்டே வந்தது. இரயிலைக் கண்டவுடன் இரயிலேறக் காத்திருந்த பயணிகள் ஆயிரம் கால் அட்டையை இழுத்துச்செல்ல முயற்சிக்கும் எறும்புகளைப்போல இரயில் வண்டியை மொய்த்தனர்.

சேசையா தட்கலில் கடைசி நேரத்தில் முன் பதிவு செய்ததினால் அவருக்குப் பெர்த் கிடைக்கவில்லை; ஆர்..சி. இருக்கையே கிடைத்திருந்தது. டி.டி.ஆர். கிட்ட பேசி படுக்கைக்கு ஏற்பாடு செய்திடலாம் என்று எண்ணிக்கொண்டார். வண்டி புறப்படும் நேரத்தில் தன் இருக்கைக்கு முன்பாக பழக்கமான முகம் கொண்ட மனிதர் ஒருவர் வந்து தயக்கத்தோடு உட்கார்ந்துகொண்டார். அவர் வேறு யாருமில்லை, தாசன்தான். யார் முகத்தைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தாரோ, அவர் தன் முன்னிருக்கையில் வந்து அமர்ந்தது பெரும் அசௌகரியத்தை உண்டாக்கியது சேசையாவிற்கு. ஆயினும், டி.டி.ஆர். வந்தால் எப்படியாவது வேறு இருக்கை கேட்டுச் சென்றுவிடலாம் என்ற தைரியத்தில் தன் பார்வையைச் சன்னலுக்கு வெளியே பதித்தார்.

தாசனுக்கும் அதே உணர்வுதான் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு சூழல் வரும் என்று தெரிந்திருந்தால் அவர் பேருந்தில் சென்றிருப்பார்.

இரயில் கொஞ்ச தூரம் சென்றிருந்த நேரத்திலேயே ‘55, 56 பெயர் சொல்லுங்கஎன்ற டி.டி.ஆர். குரல் கேட்டுதாசன், ‘சேசையாஎன்று தங்கள் பெயர்களைக் கூறினர் இருவரும். சேசையாவிற்குக் கொஞ்சம் அதிகமாகவே நரைமுடி வளர்ந்திருந்தது. தாசனுக்கோ வழுக்கைத்தலை. சேசையா பேண்ட்-சர்ட் அணிந்திருந்தார். தாசனோ வேட்டி-சட்டை அணிந்திருந்தார். எல்லாவற்றிலும் வெவ்வேறாகவே இருவரும் காட்சியளித்தனர். எதிலுமே ஒற்றுமையென்று கூறுவதற்கு ஒன்றுமில்லை.

சார், ஆர்..சி. வேறு இடத்தில் பெர்த் கிடைக்குமா?” என்று கேட்டுவிட்டார் தாசன்.

எதுனாலும் திருநெல்வேலிக்கு அப்புறம்தான் சார் சொல்ல முடியும்என்று கூறிவிட்டுக் கடந்து சென்றார் டி.டி.ஆர்.

தாசனுக்கு இருப்புகொள்ளவில்லை. திருநெல்வேலி வரை அவர் இருக்கையில் அமர்ந்ததே இல்லை. இங்கும் அங்குமாக அலைந்துகொண்டே இருந்தார். அவர்களின் மன இறுக்கத்தை அவர்கள் முகம் காட்டிக்கொடுத்தது. டி.டி.ஆர். வரும் போது அவர் கூடவே அரசியல்வாதியின்பாடிகார்ட்போல அவரை ஒட்டியே காதில் ஏதோ கேட்டுக்கொண்டே வந்தார்.

சார்! என்னால ஒண்ணுமே பண்ணமுடியாது. இன்னைக்குப் பெர்த் காலியில்லை. நீங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்என்றார் டி.டி.ஆர்.

தாசன் இந்தப் பதிலைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘சண்டைக்காரனுடன் இருந்து எப்படிப் பயணிப்பது? அடுத்த ஸ்டாப்பில் இறங்கிப் போய்விடலாமா?’ என்று பல கேள்விகள் சேசையாவையும் விட்டுவைக்கவில்லை.

அடுத்த நாள் எப்படியும் கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்ற கட்டாயம் இருவருக்கும் இருந்ததனால் அவர்கள் எந்த விபரீத முடிவும் எடுக்கவில்லை. கொஞ்ச நேரம் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த தாசன், இரயில் பகல்பொழுதைக் கடந்து இரவுக்குள் பயணிக்கும் நேரத்தில் அவருடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். தன் தோள்பையைத் திறந்து கட்டி வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு ஒரு கைநிறைய மாத்திரைகளையும் விழுங்கிக்கொண்டு அப்படியே கண்ணடைத்து உட்கார்ந்துகொண்டார்சேசையாவிற்கு அங்கே உட்கார்ந்து சாப்பிட மனம் இடங்கொடுக்காததால் கழிப்பறை பக்கம் நின்றுகொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இரவு வேளை... அனைவரும் போர்த்திக் கொண்டு தூங்கச்சென்றனர். தாசனும் சேசையாவும் அருகருகிலேயே சண்டை போட்டுக்கொண்டு முகம் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் கணவன்-மனைவிபோல இருளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். முதுகு வலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தாசனைப்பார்த்து, “வேணும்னா உங்க காலத் தூக்கி வச்சிக்கோங்க... சௌகரியமா இருக்கும்என்று தொடங்கினார் சேசையா.

பரவாயில்லைஎன்று மட்டும் சொல்லிக் கொண்டு கதவை இழுத்து அடைப்பதுபோல கண்களை மூடியடைத்துக் கொண்டான் தாசன். மிக இலாவகமாக இழுத்துச்செல்லும் இரயில் இன்று என்னவோ கஷ்டப்பட்டே இழுத்து சென்று கொண்டிருந்தது. இன்று அதற்குக் கொஞ்சம் சுமை அதிகம்போல! தூக்கம் யாரையும் விட்டுவைக்கவில்லை. குறட்டை சத்தம் மேளதாளமாகப் பல திசைகளிலிருந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. வீம்பும்-வைராக்கியமும் கேசும்-போலீசும் என்றிருந்த இந்த இருவருக்கும் தூக்கம் கண்ணைக்கட்ட வேறு வழியில்லாமல் அந்த அடிபடுக்கையிலேயே படுத்துக்கொண்டனர்.

வழி பிரச்சினைக்காகப் பல ஆண்டுகள் அடித்துக்கொண்டவர்கள் ஒரே படுக்கையில் ஒட்டி உரசிப் படுத்துக்கொண்டு பயணம் செய்தனர். அங்கு இருவருக்கும் போதுமான இடமிருந்தது. தங்களுக்குத் தெரியாமலேயே தூக்க கலக்கத்தில் ஒரே போர்வையில் தங்களைப் போர்த்திக் கொண்டிருந்தனர். கட்டிப்புரள்வதுபோல படுத்துக்கொண்டனர்.

விடியும்போது சென்னையை அடைந்திருந்தது அந்த இரயில். விடிந்த பிறகு எழுந்து தங்களைத் தயார்படுத்திக்கொண்டனர். கண்விழித்த பிறகு அதே கோபம், அதே விரோதம் இன்னும் அவர்களுக்குள் இருப்பதாகவே காட்டிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக்கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. இரயில் ஏறும்போது எப்படி இருந்தார்களோ அப்படியே இறங்கிச் சென்றார்கள்.

தேவையில்லாத கசப்பான நிகழ்வுகள், குடும்ப சண்டை சச்சரவுகள், விரோதங்கள், அகங்காரங்கள் மனிதனை உடலளவிலும் மனதளவிலும் மிகவே அதிகமாகப் பாதிக்கின்றன. வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலில் இத்தகைய மன உளைச்சல்கள் சமூக ஊடகங்கள் வழியாக அதிகமாகப் பரவுகின்றன என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதனைகெடுதிரை உருளல் (Doom Scrolling or Doom Surfing) என்கின்றனர் உளவியல் ஆர்வலர்கள்அளவுக்கு அதிகமாக மின்னணுத் திரைகளில் நேரத்தைச் செலவழித்து, அவற்றில் எதிர்மறையான செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து நுகர்வதைடூம்ஸ்க்ரோலிங்அல்லது டூம்சர்ஃபிங்என்கின்றனர்.

2020-களில்கோவிட் 19’ பெருந்தொற்று நேரத்தில் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் போலிச் செய்திகள் அதைக் காண்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று அண்மையில் கரூரில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நாற்பதிற்கும் மேலானவர்கள் இறந்து போனதையடுத்து தொடர்ந்து வந்த செய்திகளும், சமூக ஊடகக் காணொளிகளும் காட்சிகளும், அதில் சொல்லப்பட்ட கருத்துகளும் பலருக்கும் பெரும் பாதிப்பையும் மனப்பிறழ்வையும் ஏற்படுத்தியிருக்கும்.

இத்தகைய காட்சிகளையும் செய்திகளையும் அதிகமாகத் திரும்பத் திரும்ப நுகரும்போது அது ஒரு மனிதனின் ஆளுமையையும், அன்றாடச் செயல்பாட்டையும் அதிகமாகப் பாதிக்கின்றது. நாம் எதனை அதிகமாக நுகர்கிறோமோ, அதனை மீண்டும் மீண்டும் நம் கண்முன்பாகக் கொண்டு வருவதுஅல்காரிதத்தின்’ (Algorithm) வேலை. எனவே, ‘டூம்ஸ்க்ரோலிங்போன்ற மனிதனைக் கட்டுப்படுத்தும் அல்லது அவன் மனத்தைப் பாதிக்கும் காரியத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில், அளவிற்கு அதிகமான நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்கவேண்டும். உடற்பயிற்சிக்கான முக்கியத்துவத்தையும் உணர வேண்டும்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்னும் கடலலை நம் கால்களை நனைக்க அனுமதிக்கலாமே தவிர, நம்மையே பேரலையாக மூழ்கடிக்க அனுமதிக்கக்கூடாது.