மருத்துவப் பணி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது மனித வாழ்க்கையை மதிக்கும் ஒரு புனித அழைப்பு! அந்த அழைப்பின் ஆழமான அர்த்தத்தை எனக்கு உணர்த்தியவர் அன்னை எலிஸ்வா அவர்கள்.
ஏழை,
எளிய, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியைத் தன் இதயத்தில் சுமந்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைக்கவேண்டும் என்ற அவரது கனவே, எங்கள் சபை மேற்கொண்டு
வரும் மருத்துவப் பணிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன.
அன்னை
எலிஸ்வா அவர்கள் மருத்துவச் சேவையை ஒரு தொழிலாக அல்ல; மாறாக, மனித மரியாதையைக் காக்கும் அருள்சேவையாகவே பார்த்தார். நோயால் வாடிய ஏழை மக்களைப் பார்த்தபோது, ‘சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக்கூடாது’ என்ற
அவரது உறுதியான எண்ணமே, எங்கள் சபையின் முதல் மருத்துவப் பணியைத் தொடங்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த எளிய தொடக்கமே காலப்போக்கில் வளர்ந்து, இன்று பல உயிர்களைக் காக்கும்
பரந்த மருத்துவச் சேவையாக மலர்ந்துள்ளது.
அன்னை
எலிஸ்வாவின் கனவுகளின் பயனாக இன்று எங்கள் சபையில் மொத்தம் 50 மருத்துவத் துறைகள் (Medical Departments) செயல்பட்டு
வருகின்றன. இதில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் (Dispensaries), சுகாதார
மையங்கள், மறுவாழ்வு மற்றும் மது விடுவிப்பு (De-addiction) மையங்கள்
ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் நோய்களை மட்டுமல்லாமல், நம்பிக்கையிழந்த மனித வாழ்க்கையையும் குணப்படுத்தும் சேவையாக விளங்குகின்றன.
இந்த
மருத்துவப் பணிகளில், விமலா மறைமாநிலம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இம்மறைமாநிலத்தில் செயல்பட்டு வரும் மொத்தம் எட்டு மருத்துவ மையங்கள், மருந்தகங்கள், பெரும்பாலும் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன. மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத இந்தப் பகுதிகளில், இந்த மையங்கள் பல மக்களின் உயிர்களைக்
காப்பாற்றியுள்ள உயிருள்ள சேவை மையங்களாகத் திகழ்கின்றன.
என் மருத்துவப்
பணி
என்
வாழ்க்கையில் மருத்துவப் பணியில் ஈடுபடுவது ஒரு பெரும் அருள்பேறாக நான் உணர்கிறேன். குறிப்பாக, மதுப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் மறுவாழ்வு (Rehabilitation / De-addiction) பணியில் ஈடுபடுவதன்
மூலம், பல மனிதர்களின் வாழ்க்கை
முழுமையாக மாற்றம் பெற்றதை நான் நேரில் கண்டுள்ளேன். மதுப்பழக்கம் காரணமாகச் சிதைந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதும், நம்பிக்கையிழந்தவர்கள் புதிய பாதையில், மகிழ்ச்சியான மற்றும் பொறுப்புள்ள வாழ்க்கையை வாழத் தொடங்குவதும் இந்தப் பணியின் உயிருள்ள சாட்சிகளாக உள்ளன.