‘நம் வாழ்வு’ வெளியீட்டுச்
சங்கத்
தலைவர்
மேதகு
ஆயர்
ஆனந்தம்
அவர்களின்
வாழ்த்து!
அன்புச் சகோதரிகளே, சகோதரர்களே, நம் வாழ்வின் இனிய வாசகப் பெருமக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும் இறையாசிரும்!
புத்தாண்டின்
தொடக்க நாளில், ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ என்னும் நம்பிக்கை கோட்பாட்டை ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்னை நம் திரு அவைக்கு அன்னையாக, நம் ஒவ்வொருவருக்கும் அன்னையாக இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் வரங்களால் நிரப்புகிறார். அன்னையின் அரவணைப்பும் தொடர் பராமரிப்பு கிடைக்கவும், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் அவரது பரிந்துரையால் உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்புத்தாண்டில் நிறைவாகக் கிடைக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
நமது
வாழ்வில் புதிய எண்ணங்களை, புதிய செயல்பாடுகளை, புதிய திட்டங்களை முன்னெடுக்க புத்தாண்டு நமக்கு அழைப்புவிடுக்கிறது. சமயச் சார்பின்மைக்கும், சமய நல்லிணக்கத்திற்கும், சமூக ஒருமைப்பாட்டிற்கும், உலக நாகரிகத்திற்கும் முன்னோடியாக, அடையாளமாக விளங்கும் இந்தியச் சூழல் அண்மைக் காலங்களில் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கவலைக்குரியது. இன்றைய இந்திய ஒன்றிய அரசின் மதவாத அடிப்படையிலான அரசியல் - சமூகச் செயல்பாடுகள் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் ஐயத்தையும் ஒவ்வொரு நாளும் ஏற்படுத்தி வருவதை நாம் அறிவோம். இந்தியாவின் வட பகுதிகளில் தேர்தலையும்,
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் மையப்படுத்தி மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் பல்வேறு சூழ்ச்சிகளையும் நாடறியும்.
இத்தகைய
மதவாதக்கொள்கைகளால் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் சூழ்ச்சி அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டிலும் வேரூன்றுவதும், அரசியல் அமைப்பிற்கு எதிரான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதும் மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்து, இசுலாமிய, கிறித்தவ மதநல்லிணக்க உணர்வோடு வாழும் தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் இத்தகைய பிளவு அரசியலையும், மதக்காழ்ப்புணர்வையும் முன்னிறுத்தி அரசியல் கட்டமைக்கப்படுவது எதிர்வரும் நம் தலைமுறையினருக்குப் பேராபத்து என்பதையும் நாம் அறிவோம்.
ஆகவே,
இத்தகைய சூழலில் இந்து, இசுலாமிய, கிறித்தவ மக்கள் ஒன்றித்து வாழ்வதும் தனிமனித, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்காக இணைந்து குரல் கொடுப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது. அண்மைக் காலங்களில் தமிழ்நாடு திரு அவையில் பல்சமய உரையாடலும், சமய நல்லிணக்க செயல்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது; பாராட்டுதற்குரியது. தொடர்ந்து நம் மண்ணையும் மக்களையும் காத்து, மனிதநேயம் போற்றி ஒருதாய் மக்களாய் இணைந்து வாழ்வோம்! நம் உரிமையையும், அரசியல் சாசன மேன்மையையும் பேணிப் பாதுகாத்து நல்லதொரு சமுதாயம் படைப்போம். பிறந்த புத்தாண்டு அத்தகைய வளமும் நலமும் அருள வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இறை ஆசிர்!
மேதகு முனைவர்
லூர்து
ஆனந்தம்
சிவகங்கை
மறைமாவட்ட ஆயர், தலைவர் - நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம்