news-details
சிறப்புக்கட்டுரை
மெக்காலே - சனாதனக் கல்விக்கு அடித்த சம்மட்டி அடி! (சென்ற இதழ் தொடர்ச்சி)

மெக்காலே பாரதத்தின் பாரம்பரியக் கல்வி அறிவையும் வேதமரபுகளையும் பாழாக்கிவிட்டார், ஆங்கிலத்தைத் திணித்துவிட்டார், குருகுலம் என்ற அற்புதமான கல்வி அமைப்பைச் சிதைத்து அடிமைச் சிந்தனையை விதைத்துவிட்டார் என்பதே மெக்காலேயின்மீது இந்துத்துவக் கருத்தியலாளர்கள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. மெக்காலே கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி, சிந்தனை ரீதியான அடிமைகளாக அவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும் என்பதுதான் அவர்கள் தரப்பில் முதன்மையாக முன்வைக்கப்படும் வாதமாகும். அதற்கு ஆதரவாக அவர்கள் காட்டும் மெக்காலேயின் குறிப்புகளில் காணப்படும் மேற்கோள் இதுதான்:

நாம் ஆண்டு கொண்டிருக்கும் பல கோடி மக்களுக்கும் நமக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் ஒரு வகுப்பினரை உருவாக்குவதே இப்போது நம்மால் செய்யக்கூடிய சிறந்த செயலாகும். அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்; ஆனால், சுவைகளால் அவர்கள் ஆங்கிலேயர்களாக இருக்கவேண்டும்  (We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, a class of persons Indian in blood and colour but English in taste).

ஆனால், அவர்கள் காட்டும் இந்த மேற்கோள் முழுமையானதல்ல; பாதி உண்மையை மட்டுமே பேசி, முழு உண்மையை மறைக்கும் அவர்கள் அதன்மூலமாக வரலாற்றைச் சிதைக்க நினைக்கிறார்கள். அந்த மேற்கோளில் மீதிப்பாதியையும் நாம் அறியவேண்டும்.

அவர்கள் சொல்லாமல் மறைத்தது இதுதான்: “இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டு பெயரிடும் முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம்மக்களுக்கு வழங்கும் போது, அது அவர்களின் மொழிகளில் ஊடக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும். அது உறுதியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு அறிவைக் கொண்டு செலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும் (To that class we may leave it to refine  the vernacular dialects of our country to enrich those dialects with the terms of science borrowed from the Western nomenclature and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population). அதாவது, இந்திய மக்களின் தாய்மொழிகளை ஆங்கிலத்தைக் கொண்டு அறிவியல் மொழியாகவும் மேலைநாட்டு அறிவுசெறிந்த மொழியாகவும் மாற்றியமைக்கவேண்டும் என்பதே மெக்காலேயின் விருப்பமாக இருந்துள்ளது.

ஆங்கில அரசால் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதும் கடினமான செயலாக இருந்த காரணத்தினால், ஆங்கிலேயர்களுக்கு இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளவும், ஆளும் தங்களின் நோக்கங்களை மக்களிடம் அவர்களது மொழியிலேயே கொண்டு செல்லவும் தகுதியான ஆள்கள் உடனடியாகத் தேவைப்பட்டனர். இதனால் இந்தியாவில் உள்ள ஒருசிலருக்கு முதலில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்வதும், அவற்றை இந்தியர் அனைவரிடமும் கொண்டுசெல்வதும் மெக்காலேயின் செயல்திட்டமாக இருந்தது என்பதை நாம் உணரவேண்டும். “மெக்காலேதான் இந்திய மொழிகளை அழித்தார். அவர்தான் இந்தியர்களை அடிமைகளாக உருவாக்க முனைந்தார்என்ற வாதத்தில் சற்றும் உண்மை இல்லை என்பது மெக்காலே கூறியிருப்பதிலிருந்து புரியும்.

மெக்காலேயின் கல்விக்கொள்கை இந்தியாவின் பாரம்பரியமான கலாச்சார அறிவைப் பாழாக்கிவிட்டது என்பதுதான் அடுத்து இந்துத்துவச் சக்திகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதில் உண்மை உள்ளதா? என்பதனைப் பார்க்கவேண்டும். மெக்காலே இந்த மண்ணில் காலெடுத்து வைத்த நாள்களில் இந்தியாவில் இருந்த சமூகச் சூழலை ஓரளவு அறிந்துகொண்டால் அந்த விவாதம் எவ்வளவு தூரம் வலுவற்றது என்பது புரியவரும்.

மெக்காலே இந்தியாவிற்கு வந்த நாள்கள் இந்தியச் சமூகம் அறிவியலிலும் தொழில்நுட்பங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலகட்டம். பிரிட்டிசார் வழங்கிய நிதி உதவியின் மூலமாக நடத்தப்பட்ட வேதபாடசாலைகளையும் மதரசாக்களையும் பார்த்துவிட்டு மெக்காலே கவர்னர் ஜெனரலுக்கு எழுதிய குறிப்புகளைப் பற்றி நாம் அறிவது அவசியம். அவர் இவ்வாறு எழுதுகிறார்:

இங்கிலாந்தில் உள்ள ஓர் இலாடக்காரன் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் மருத்துவமுறைகளும், இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வானசாஸ்திரங்களும், முப்பது அடி உயரமுள்ள அரசர்கள் 60,000 ஆண்டுகள் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும், பாற்கடலும் நெய்க்கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் கற்பிக்கப்படுகின்றன. கற்பித்தல் என்பது அரசாங்கத்தின் கடமையாகாது என்றும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் எத்தனை தரம் குளிக்கவேண்டும், எந்த மந்திரம் சொல்லி புனிதப் படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், ஓர் ஆட்டைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரமாக எந்த வேதத்தை எவ்வளவு பாராயணம் செய்யவேண்டும் என்றும் இந்திய மக்கள் தெரிந்துகொள்வதற்காக நாம் அரசு வரிப்பணத்தில் கலாசாலைகள் நடத்துவது மாணவர்களின் இளமையை வீணாக்கும் நடவடிக்கையாகும். இப்படிப் பலவாறான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவிவரும் சமஸ்கிருத கல்விமுறை என்பது திட்டமிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிடப்பட்ட முறையாகும் (the Sanskrit system of education would be the best calculated to keep the country in darkness) என்பதைக் கவர்னர் ஜெனரல் பார்வைக்குக் கொண்டு சென்றார் மெக்காலே.

கவர்னர் ஜெனரல் இந்திய மாணவர்களுக்கு வழங்கிய மானியத்தில், மெக்காலே வருவதற்கு முன்னர் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக சமஸ்கிருதத்திலும் அரபியிலும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டனஅதனை மாணவர்கள் யாரும் வாங்க முன்வராததால் அப்புத்தகங்கள்  அரசின் கிட்டங்கிகளில் கரையான் அரித்துக் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆனால், ஆங்கிலப் பாடப்புத்தகங்கள் சில ஆயிரங்களே அச்சிடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் மாணவர்கள் விரும்பி வாங்கிச் சென்றதால் உடனடியாக விற்றுத்தீர்ந்தன. அதனால் அரசுக்குச் சில ஆயிரம் ரூபாய்கள் இலாபம் கிடைத்தன. இதை ஆங்கிலேய அரசுக்குச் சுட்டிக்காட்டிய மெக்காலே, ‘அரபியும் சமஸ்கிருதமும் பெரும்பாலான இந்தியர்களுக்கு அந்நிய மொழிகள்தாம்என்றும், ‘அவைகளைப் படிப்பதைவிட ஆங்கிலம் கற்றால் எதிர்காலத்தில் இந்தியா ஓர் அறிவுசார்ந்த நாடாக உருவாகும்என்றும் கவர்னர் ஜெனரலிடம் வலியுறுத்தினார்.

ஆங்கிலம் கற்றதால் இரஷ்யா எப்படி விஞ்ஞானத்தில் வளர்ந்தது? என்று எடுத்துரைத்தார் மெக்காலே. மெக்காலேயின் நிலைப்பாட்டில் இருந்த நியாயங்களை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெனரல், மெக்காலேவை உடனடியாக அரசின் கல்விக் குழுவிற்குத் தலைவராக நியமித்து, அரசின் கல்வி மானியம் முழுவதும் அரசின் பாடத்திட்டங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்றும், சமஸ்கிருத வேதபாடசாலைகளுக்கும் மதரசாக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மானியங்களையும் உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டார்.

மெக்காலேயின் இந்த நடவடிக்கைகளை அப்போதிருந்த மதவாதிகள் எதிர்த்தார்கள். தங்களது மதங்களுக்கு எதிராக நடத்தப்படும் சதி என்று கூக்குரலிட்டனர். ஆங்கிலேயர்களும் எதிர்த்தார்கள். இந்தியர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதால் அவர்கள் உலக அறிவு பெற்றவர்களாக மாறி, ஒரு கட்டத்தில் நம்மையே எதிர்ப்பார்கள் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலேவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மெக்காலே சிறப்பான பாடத்திட்டத்தைத் தயாரித்து, கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதில் உறுதியாக இருந்தார். சில கல்வி நிலையங்களில் நடந்த கிறித்தவ மதப் பிரச்சாரங்களைக் கடுமையாகக் கண்டித்து, அக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியத்தை நிறுத்தினார். இந்திய நீதிமன்றங்களில் நடைமுறையில் இருந்த மனுதர்மம் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு மாற்றாக இந்தியக் குற்றவியல் சட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார்.

மெக்காலே அன்று வைத்த புள்ளிகள் இன்று அழகான கோலமாக விரிந்துள்ளது. நமது பிரதமருக்கு இதையெல்லாம் நினைவூட்டும் கடமை நமக்கு உண்டல்லவா!